யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/10/15

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்குதேசிய தரவரிசை திட்டம் அமல்

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பொதுவான தரவரிசை பட்டியல் வழங்கும், புதிய தரவரிசை திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து பல்கலை மற்றும் கலைக் கல்லுாரிகளுக்கு விரைவில் தரவரிசை திட்டம் வர உள்ளது.

இந்தியாவில், 12 ஆயிரம் இன்ஜினியரிங் கல்லுாரிகளும், 20க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., நிறுவனங்களும் உள்ளன. இன்ஜி., கல்லுாரிகளை தேசிய அளவில் தரவரிசைப் படுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்திஉள்ளது. நேற்று முன்தினம், இத்திட்டம் அமலுக்கு வந்தது. 
முதற்கட்டமாக, இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு தரவரிசை நிர்ணயிக்கும் திட்டம் அமலாகியுள்ளது.தரவரிசைக்கான சிறப்பு இணையதளத்தில் (https://www. india.org/) கல்லுாரிகளின் செயல்பாடுகள் இணைக்கப்படுகின்றன. இந்த பட்டியலின் படி ஆய்வு மேற்கொண்டு, மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரவரிசை முகமை மூலம் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 
கடந்த, மூன்று ஆண்டுகளின் செயல்பாட்டின்படி, வரும், ஏப்ரல் மாதம் தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 
இதேபோல், பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு தனியாக தரவரிசை திட்டம் அமலுக்கு வர உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த திட்டமும் அறிமுகமாக உள்ளது

நவ., 12ல் ராமநாதபுரத்தில் தனித்திறன் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தனித்திறன் போட்டிகள், ராமநாதபுரத்தில் நவ., 12ல் நடக்கிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் உள்ள தனித்திறனை கண்டறிந்து அதை மேம்படுத்திடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் தனித்திறன் போட்டிகள் நடத்த பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் ௧௦ம் வகுப்பை ஒரு பிரிவாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஒரு பிரிவாகவும் நடத்தப்படும். 


அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பேச்சு, கட்டுரை, கவிதை புனைதல், வினாடி- - வினா, இசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், வாத்தியக் கருவிகளை இசைத்தல், ஓவியம் வரைதல் போன்றவற்றில் அக்., 13ல் கல்வி மாவட்ட அளவிலும், அக்., 30ல் வருவாய் மாவட்ட அளவிலும், நவ., 12ல் ராமநாதபுரத்தில், மாநில அளவிலும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அனைத்து நிலைகளிலும், முதல் மூன்று இடங்களைப் பெறும் 
மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''இப்போட்டிகளுக்காக, 67 கல்வி மாவட்டங்களுக்கு 4,02,000 ரூபாய், 32 வருவாய் மாவட்டங்களுக்கு, 3,84,000 ரூபாய், மாநில அளவில், 3,00,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்குதல் போன்றவற்றிக்காக பெற்றோர், ஆசிரியர் சங்க நிதியில் இருந்து செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள் சம்பளம் இன்றி 5 மாதமாக தவிப்பு

கடந்த ஐந்து மாதமாக, சம்பளம் வழங்கப்படாததால், பெரம்பலுார் மாவட்ட கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள், 120 பேர் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 2010 ஏப்ரல் 7ம் தேதி, 'கற்கும் பாரதம் திட்டம்' என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு நிதியுதவியுடன் மாநில அரசால் துவங்கப்பட்டது. 


தமிழகத்தில், முதல் கட்டமாக, 50 சதவீதத்துக்கும் குறைவாக எழுத்தறிவு உள்ள மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலுார், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கற்கும் பாரதம் திட்டம் துவங்கப்பட்டது. ஏற்கனவே வளர்கல்வி திட்டத்தில் பணியாற்றிய, 4,408 பேர் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, கற்கும் பாரதம் திட்டத்தில் ஊக்குனர், உதவியாளர், மைய பொறுப்பாளர் பணியிடத்தில் பணியமர்த்தப்பட்டனர். 
இதன் ஒரு பகுதியாக பெரம்பலுார் மாவட்டத்தில், 120 பேர் இத்திட்டத்தின்கீழ் மைய பொறுப்பாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்கள் கிராமங்களில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுத்து வந்தனர். இவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் சம்பளமாக 
வழங்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பலுார் மாவட்டத்தில் பணியாற்றும் கற்கும் பாரதம் திட்ட மைய பொறுப்பாளர்கள், 120 பேருக்கு கடந்த மே முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், இத்திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு 
வருகின்றனர். 

ஜாக்டோ' வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியாது: பகுதிநேர ஆசிரியர் முடிவு

அக்., 8ல் 'ஜாக்டோ' நடத்தும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்,' என, பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் கூட்டமைப்பு தலைவர் சோலைராஜா, அமைப்பாளர் ஜேசு ராஜா, துணை அமைப்பாளர் ஆனந்தராஜூ, செயலாளர்கள் ராஜா தேவகாந்த், ஜெகதீசன் கூறியது:
மத்திய அரசின் சம்பளத்திற்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ' அமைப்பு சார்பில், அக்.,8ல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களாகிய நாங்கள் ஆதரவு தரவில்லை. 

தமிழகத்தில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கம்ப்யூட்டர் அறிவியல், வேளாண்மை, வாழ்க்கை கல்வி, கட்டடக்கலை பிரிவுகளில் 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேரமாக பள்ளிகளில் பணிபுரிகின்றனர். எங்களுக்கு சமீபத்தில் தான் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பணிக்கும் தீர்வு காண்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டால், பணிவாய்ப்பு பாதிக்கப்படலாம். சங்கத்தால் யாரும் வேலையிழக்கக்கூடாது. ஜாக்டோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம், என்றனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்; விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், நியமனம் தொடர்பாக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு 500 முதல் 600 காலியிடங்கள் உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கும்.

பெரும்பாலும், கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெற்ற அதேகாலத்திலேயே இந்த ஆண்டும் போட்டித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயத் துறை பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்: பள்ளிக் கல்வித் துறைக்கு விவசாயத் துறையில் பட்டம் பெற்ற 25 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதுதொடர்பாக அரசாணை உள்ளிட்டவை பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், இந்தப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பட்டதாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு.

சிபிஎஸ்சி தேர்வு: இணையம் வழியே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்சி தேர்வு எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள், இணையம் வழியே விண்ணப்பங்களை செலுத்தலாம்.இது குறித்து மத்திய மேல்நிலைக்கல்வி வாரியம்(சிபிஎஸ்சி)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிபிஎஸ்சி-இன் சார்பில் 2015-16-ஆம் ஆண்டுக்கான 10,12-ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு வருகிற 2016-ஆம் ஆண்டில் நடக்கவுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கவிரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளவிரும்பும் மாணவர்களும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மின்-பற்றுச்சீட்டு அல்லது வங்கிகேட்போலை மூலம் செலுத்தலாம். அபராதம் இல்லாமல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.15-ஆம் தேதிகடைசிநாளாகும்.

மேலும் விவரங்களுக்கு www.cbse.nic.in  என்ற இணையதளத்தை காணலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

"ஆசிரியர்களை மதிக்கும் பண்பை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்"

ஆசிரியர்களை மதிக்கும் பண்பினை, தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன். மயிலாடுதுறை வட்டம், சேத்தூர் கிராமத்தில், காமராஜர் அறக்கட்டளை தொடக்கம் மற்றும் திருவள்ளுவர் நூலகக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்குரைஞர் முருக. மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற நீதிபதி டி.மதிவாணன் மேலும் பேசியது:

கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளை தோற்றுவித்து, மதிய உணவையும் வழங்கியவர் கர்மவீரர் காமராஜர். மதிய உணவை சாப்பிட்டு கல்வியைக் கற்றவர்கள் தற்போது மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்கும் பண்பையும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான், சிறந்த மாணவர் சமுதாயம் உருவாகும் என்றார் அவர். தொடர்ந்து, சேத்தூர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். நாகை மாவட்ட நீதிபதி கே. சிவக்குமார், வழக்குரைஞர் என்.கே. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர் ஜி. கண்ணதாசன் ஆகியோர் விழாவில் பேசினர். வழக்குரைஞர்கள் எம். நிர்மல்குமார், கே.ஆர். ரமேஷ்குமார், ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக, அறக்கட்டளையின் செயலர் க. நெடுஞ்செழியன் வரவேற்றார். நிறைவில் அறக்கட்டளையின் நிறுவனரும், வழக்குரைஞருமான ஆர். மெய்வர்ணன் நன்றி கூறினார்.

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் 8-இல் அடையாள வேலைநிறுத்தம்:தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 8-இல் நடத்தவுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவேன். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வேன் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததையடுத்து 28 சங்கங்களை ஒருங்கிணைத்து ஜேக்டோ (தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) அமைப்பை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

தொடர்ச்சியாக, அக்டோபர் 8ஆம் தேதி அனைத்து சங்கங்கள் இணைந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.

இந்தப் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லையெனில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டை முற்றுகை, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட இறுதிக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.

கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் குடும்பத்தினரின் சுமார் 2 கோடி வாக்குகள் ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்றார் மீனாட்சிசுந்தரம்.

அனைவரும் தேர்ச்சி திட்டத்தைஅரசு ரத்து செய்ய வேண்டும்

எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும்.”, என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் காரைக்குடியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியருக்கு இணையாக சம்பளம் வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் அக்.,8ம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்படும்.


24 சங்கங்களை சேர்ந்த 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். நோட்டீஸ் அளித்தும், போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை, அரசே தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க வைப்பது வேதனைக்கு உரியது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும். எஸ்.எஸ்.ஏ., இடைநிலை கல்வி திட்டம் மூலம் ஆசிரியருக்கு தொடர் பயிற்சி அளிக்கின்றனர். 
நிதியை செலவழிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இப்பயிற்சியால் பலன் இல்லை. இந்த நிதி மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தலாம். நபார்டு, எஸ்.எஸ்.ஏ., மூலம் கட்டப்பட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி கட்டடங்களுக்கு ஒதுக்கும் 
நிதி முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.