யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/17

2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் 6 மற்றும் 7வது ஊதிய முரண்பாடு மனுவுக்கு CM -CELL பதில்

மாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்பாடு

பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், அரசு பள்ளி மாணவியருக்கு, கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, பல்வேறு நலத் திட்டங்கள் அமலில் உள்ளன. மாணவ - மாணவியர் நீண்ட நேரம், 'ஆன்லைன்' விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க, உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா பயிற்சியும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. தினமும் மாலை நேரங்களில், யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி திட்டமான, எஸ்.எஸ்.ஏ.,வில், மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும், ஒன்றரை மணி நேரம் கராத்தே வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, இலவச கராத்தே வகுப்புகள் துவங்கிஉள்ளன. மாவட்டங்களில், வாரத்திற்கு இரண்டு நாட்கள், மாலையில் கராத்தே பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'சில்மிஷத்தில் ஈடுபட முயற்சிக்கும் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து, தற்காத்து கொள்ள, மாணவியருக்கு கராத்தே பயிற்சி பலன் அளிக்கும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்

'மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில்,
மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், இது கட்டாயம் என்பதால், தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களை, நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த, பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப, பள்ளிகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும், புதிய பயிற்று முறைகளை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இதில், ஓர் அம்சமாக, ஒரு மதிப்பெண் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 
ஒவ்வொரு பள்ளிகளிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடவாரியாக, ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும், கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில் சேர்க்கப்பட்டு, தினமும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. 'பாடத்தின் அனைத்து பகுதிகளையும், மாணவர்கள் படித்தால் தான், இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற முடியும். 'எனவே, இந்த தேர்வை அதிக அளவில் எழுதும் போது, 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளில், 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகளுக்கு, மாணவர்களால் எளிதில் பதில் அளிக்க முடியும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்?

பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்று முதல் பிளஸ் ௨ வரையிலான, புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அறிக்கையின் முழு விபரமும், www.tnscert.org என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, 28க்குள் கருத்து தெரிவிக்கும்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வரைவு அறிக்கையை, பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். அதே நேரம், பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க, கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: தாய் மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆங்கிலம் சிறப்பாக கற்றுத்தரப்படும் என்பது நல்ல அம்சம். பாலின சமத்துவம், மதிப்பீட்டு முறை மாற்றம், வெளிநாடு வாழ் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் சேர்த்தல் போன்றவை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பள்ளி மதிப்பீட்டு முறைகளில், மாற்று வழி வருவது பாராட்டத்தக்கது; இது, நல்ல துவக்கம். இதன் பயனை முழுமையாக பெற, கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை, ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதேநேரத்தில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, புத்தகம் எழுதும் பணிகள் துவங்கி உள்ளன. இப்பணியில், மாநிலம் முழுவதும், பல்வேறு பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட, 350 ஆசிரியர்களும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். ஜனவரிக்குள் புத்தகங்களை இறுதி செய்தால் மட்டுமே, ஏப்ரலில் அச்சடித்து, ஜூன், 1ல், மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே, இந்த பணியில், இன்னும் அதிக அளவு தனியார், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியிர்கள், கற்பித்தல் சாராத பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதல் ஆட்கள் நியமிக்கப்பட்டால், பணிகளை விரைந்து முடித்து, இறுதி நேர தவறுகளை சரிசெய்ய முடியும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்

திண்டுக்கல்: தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக கல்வித்துறையில், அரசு தேர்வுத்துறை ஒரு இயக்குனரின் தலைமையில் தனியாக செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு, செய்முறைத் தேர்வுகள் மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு, சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுகள் உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.இதன் கீழ் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிக் கல்விக்கு மாற்றம் : சமீபகாலங்களில் இத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் படிப்படியாக கல்வித்துறைக்கு மாற்றப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக தேர்வுத்துறை செய்து வந்த, பொதுத் தேர்வு மாணவர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணியை தற்போது பள்ளிக் கல்வித்துறையே செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளஸ்1 பொதுத் தேர்வையும், அவற்றின் செய்முறை தேர்வுகள் நடத்துவதையும், பின்னர் நடத்தும் தனித்தேர்வர்களுக்கான தேர்வையும் பள்ளிக் கல்வித்துறைதான் கவனித்து வருகிறது.
ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் பணியை நடத்தி முடிப்பதும் பள்ளிக்கல்வித் துறைதான்.

சான்றிதழ் சரிபார்ப்பு : தேர்வுத்துறையின் வசம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி மட்டுமே முக்கிய பணியாக இருந்துவந்தது. சமீபத்தில் இந்தப் பணியும் மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் வசம் சென்றுவிட்டது . தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நியமனம் செய்யப்படுவோரின் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியை தேர்வுத்துறையினரே இதுவரை செய்து வந்தனர். இனி இதனை முதன்மை கல்வி அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு வசதியாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு பயன்படுத்தும் 'சாப்ட்வேரின்' முக்கியமான ரகசிய 'பாஸ்வேர்ட்' அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத்துறையின் 90 சதவீதப் பணிகளும் தற்போது பள்ளிக் கல்வித்துறை வசம் சென்றுவிட்டன.

தேர்வுத்துறை ரத்தாகும் : இதைத் தொடர்ந்து இன்னும் ஓராண்டுக்குள் தேர்வுத்துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைத்து, தேர்வுத்துறையை ரத்து செய்ய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக அரசு 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. தேர்வுத்துறையின் முன்னாள் துணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரியின் தலைமையில் குழு அமைத்து, ஆலோசனை நடத்தி, அரசுக்கும் கருத்துரு (புரபோசல்) அனுப்பப்பட்டுள்ளது. படிப்படியாக ஓராண்டுக்குள் தேர்வுத்துறை அலுவலர்கள் கல்வித்துறையுடன் இணைய உள்ளனர்.அரசின் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரையில் அரசு நிறுவனங்களில் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். அதிக வேலைப்பளுவில்லாத துறைகள், ஊழியர்களை அதோடு இணைந்த துறைகளுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம்அலுவலகங்களின் வாடகை, ஊழியர் சம்பளம் உட்பட பலவகைகளில் சிக்கனப்படுத்த முடியும் என்ற ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடுகளை அரசு செயல்படுத்த உள்ளது

பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க வழக்கு

மதுரை, ''மதுரையில் பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க தாக்கலான வழக்கில், மாநகராட்சி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு ஜெயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் தாக்கல் செய்த மனு:

சொத்துவரி செலுத்தக்கோரி எங்கள் பள்ளிக்கு மாநகராட்சி கமிஷனர் 2016 ல் நோட்டீஸ் அனுப்பினார். நாங்கள் கல்வி சார்ந்த அறப்பணியில் ஈடுபட்டுள்ளோம். கட்டடத்தை கல்வி கற்பிக்கும் நோக்கத்திற்கு
பயன்படுத்துகிறோம். சொத்துவரி செலுத்துவதிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விலக்களிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. கமிஷனரின் நோட்டீைச ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் 63 தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு:
மதுரை மாநகராட்சி சட்டப்படி சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, மாநகராட்சிநிர்வாகத்திடம் மனுதாரர்கள் 2 வாரங்களில் மனு அளிக்க வேண்டும். அதை சட்டத்திற்குப்பட்டுகமிஷனர் பரிசீலிக்க வேண்டும். தங்கள் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் ஆவணங்களை மனுதாரர்கள் தாக்கல்செய்ய வேண்டும். மனுதாரர்கள் விளக்கமளிக்க போதிய வாய்ப்பளித்து, அது தொடர்பான நடைமுறைகளை 6வாரங்களில் மாநகராட்சி நிர்வாகம் முடிக்க வேண்டும். கோரிக்கையை மாநகராட்சி கவுன்சில்அனுமதிக்கும்பட்சத்தில், மனுதாரர்கள் சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கிற்கான உரிமையை பெறுவர். 
இல்லாதபட்சத்தில் சட்டத்திற்குட்பட்டு சொத்து வரியை வசூலிக்க கமிஷனர் நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது, என்றார்.

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடங்களுக்கு நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு.

சென்னை தரமணி மத்திய பல்தொழில்நுட்ப கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவிருந்தது.பொறியியல் அல்லாத பாடங்களுக்கு திட்டமிட்டபடி நடைபெறும்.விழுப்புரம்,மதுரையில் திட்டமிட்டபடி நவம்பர் 24,25ல் நடைபெறும்.சான்றிதழ் நடைபெறும் தேதி பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான Shaala siddhi-school standardization programme என்ற தலலைப்பில் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி குறித்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகள்!!!

தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடுதல் சார்பாக செயல்முறைகள்



100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 100 அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் நேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைத்த அமைச்சர் செங்கோட்டையன், பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மற்றும் பல்லாவரம் தெரசா பள்ளி உள்ளிட்ட 10 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2,676 விலையில்லா மடிக்கணினிகளை வழங் கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். நார்வே, அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கு, 25 பேர்கள் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். ரூ.3 கோடி செலவில் அந்த நாடுகளில் ஒவ்வொரு தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்வதற்காக அவர் கள் அனுப்பப்படவுள்ளனர்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டத்தை தமிழகம் உருவாக்கி இருக்கிறது. இந்த பாடதிட்டத்தை படிப்பதன் மூலம் எந்த நுழைவுத் தேர்விலும் தமிழக மாணவர்கள் பங்கு பெறலாம்.தமிழ் மொழி வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ் ஒன் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் தலா 15 மாணவர்களை தேர்வு செய்து, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன.

இந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்த செயல்பாடுகள் நிகழ்த்த கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

G.O Ms.No. 340 Dt: November 20, 2017-Official Committee, 2017 – Recommendations of Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits – Amendment – Orders issued

புரட்சிக்கு வித்திடுமா புதிய வரைவு பாடத்திட்டம் : கல்வியாளர்கள் கணிப்பு என்ன?

'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்துறை வெளியிட்ட புதிய வரைவு பாடத் திட்டத்தில் 20 சதவீதம் வரையே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு கூறுவது போல் புதிய வரைவு பாடத்திட்டம் புரட்சியை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே' என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'கற்றலை படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், தேர்வு முறையில் மாற்றங்கள், அறிவியல் தொழில் நுட்பத்திற்குமுக்கியத்துவம், தமிழர்களின் தொன்மை வரலாறு, பண்பாடு,கலாசாரம் மற்றும் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என புறப்பட்ட புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழு அதற்கான வரைவு பாடத்திட்ட அறிக்கையைவெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வகை பாடங்களையே மீண்டும் மீண்டும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு வடிவமைத்த இந்த வரைவு அறிக்கை குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:

சாந்தி, முதல்வர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி,மதுரை: பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் அடிப்படையில் தான் வரைவு திட்டத்தில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 1- 5 வகுப்புகளுக்கு ஏற்கெனவே மெட்ரிக் பள்ளிகளில் இருந்த பாடங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.கணிதம் பாடத்தில் 'ஜாமெட்ரிக்' பகுதியில் கிராம மாணவர்களும் எளிதில் புரிந்து படம் வரையும் வகையில் எளிமைப்படுத்தப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.மூன்று- ஐந்தாம் வகுப்புகளின் சமூக அறிவியலில் சமச்சீர்பாடத் திட்ட பாடங்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. இப்பகுதி பாடங்களை மேலும் தரமானதாக மாற்றியிருக்கலாம். மேல்நிலை அறிவியல் பாடம், மாணவர்களை 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தரமானதாக உள்ளது.பத்தாம் வகுப்பு அறிவியலில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பகுதி சம அளவில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பிளஸ் 1 பாடங்கள் இனி மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.பிளஸ் 2 பயாலஜி பகுதியில், மாணவர்கள் படிக்க தயங்கும் 92 பக்கம் கொண்ட 'மனித உடற்கூறுகள்' பாடத்தை ஐந்து பாடங்களாக பிரித்து மாணவர்கள் எளிமையாக படிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் சுற்றுச்சூழல் பகுதியில் 'இ வேஸ்ட்' உட்பட புதிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1ல் 'வகைப்பாட்டியல்' (டாக்ஸ்சானமி)உட்பட புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆசிரியரின் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சரவணன், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வியாளர், மதுரை: புதிய பாடத் திட்டம் வடிவமைப்பு என்பது தேசிய கலைத் திட்டம் (என்.சி.எப்.,) 2005ம் ஆண்டு வகுத்துள்ள வழிகாட்டுதல் படிதான் மாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மத்திய பட்டியலில் கல்வித்துறைஇருப்பதே இதற்கு காரணம். மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்படாத வரை சுதந்திரமான முறையில் பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது சாத்தியம் இல்லை. நிபந்தனைக்கு உட்பட்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளன.புதிய வரைவு திட்டத்தில், பழைய பாடத் திட்டத்தில் இருந்து 20 சதவீதம் வரையே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக ரோபோட்டிக், நானோ சயின்ஸ், பாலியல் பேதங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து புதிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன.உதாரணமாக 'மொழித்திறன்' என்ற தலைப்பில் பேசுதல், எழுதுதல்... என உட்தலைப்புகள் உள்ளன. அவை தற்போதைய நிலையில் இருந்து எவ்வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது பாடப் புத்தகங்கள்வெளியான பின் தான் தெரியும். மதிப்பீடு செய்வதன் மூலம் மட்டுமே மாற்றங்களை உணர முடியும். இயற்கையில் குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் படைப்பாக்கல் திறன் அதிகம். ஆனால், விளையாட்டிற்கு என தனி கலைத் திட்டம் உருவாக்கப்படவில்லை.

சாமி சத்தியமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்: வரைவு பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆங்கில மொழி கற்பதற்கும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி.,- சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள பாடத்திட்டங்களை ஆய்வு செய்து தேவையான பகுதிகள்உள்ளீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.தேர்வு முறைகள் மற்றும் மதிப்பீடு முறைகள், அகில இந்திய போட்டித் தேர்வுகள், உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளில் நம் மாணவர்கள் எளிதாக வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுபாராட்டுக்குரியது. உடற்கல்வி மற்றும் கைத்தொழில், ஓவியம், நெசவு போன்ற தொழில்கல்வி, கணினி கல்விக்கான புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அறிவியலில் தற்போதைய தொழில் நுட்பத்திற்கேற்ப பல வகை பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் தரமான தாள்களில் பல வண்ணங்களில் அச்சிட்டு வழங்க வேண்டும்.

பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்: கலாசாரம், பண்முக தன்மை மற்றும் தமிழக சமய நல்லிணக்கம் பேணும் வகையில் இடம் பெற்ற மொழிப் பாடங்கள் வரவேற்கத்தக்கது. பயன்பாட்டு முறையிலான இலக்கணம் கற்பித்தல் என்ற புதிய விதிமுறை மூலம் மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தல் என்பது எளிதாகும். பாலினம் சமத்துவம், மாற்றுத்திறனாளிக்கு மாற்று கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறை, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இடம் பெற செய்த முயற்சிவரவேற்கத்தக்கது.மெய்நிகர் வகுப்பறை (வெர்ச்சுவல் கிளாஸ்), திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) முறையால் கருவிகள் மூலமான கற்பித்தல் முறையில் கற்றலை முழுமையாக்கும் முயற்சியாக உள்ளது. தேர்வு பயத்தை போக்கும் வகையில் மாணவர்களின் அனைத்து திறன்களையும் மதிப்பிட மாற்று மதிப்பீட்டு முறை அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.பள்ளி மதிப்பீட்டு முறைகளில் ஓபன் புக், ஓபன் ரிசோர்சஸ் எனும் திறந்த வெளி புத்தக முறை மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவியலில் நானோ தவிர புதிய வரவுகள் குறைவாக உள்ளன. தமிழ், சமூக அறிவியல் தவிர அனைத்து வரைவுகளும் ஆங்கிலத்தில் உள்ளன.

நாராயணசாமி, முன்னாள் பாடநுால் ஆசிரியர் (சமச்சீர் கல்வி), பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, காமாட்சிபுரம், தேனி: புதிய பாடத்திட்ட மாற்றத்திற்கான வரைவு அறிக்கையில், 'நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் அளவில் பாடங்கள் இணைக்கப்படும்' என தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மத்திய பாடத்திட்டத்துடன் தமிழக பாடத்திட்டம் ஒத்துவராத ஒன்றாக இருந்தது. தற்போது மத்திய பாடத்திட்டத்திற்குஇணையாக வேதியியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் கணித பாடங்களின் விபரங்கள் மாற்றியமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. குறிப்பாக வேதியியலில் 'சுற்றுச்சூழல் வேதியியல்' பாடங்களை புதிதாக இணைத்துள்ளனர்.இது மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உதவும். நடப்பு நிகழ்வுகளை பாடவாரியாக சேர்த்திருப்பதும் நன்மையே. தமிழில் ஏற்கனவே உள்ள இலக்கண, இலக்கியம் தவிர்த்து 'வாழ்வியல் நெறிகள்' சார்ந்து புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இளைய சமுதாயத்தினரிடையே தமிழ் மொழியியல் குறித்த புரிதல் மேம்படும். எனினும் பாடத்தின் முழுமையான வடிவம் வெளிவந்த பின்தான் விரிவான கருத்துக்கள் வெளிவரும்.

பெர்ஜின், இயற்பியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,சாயல்குடி: அறிவியல் பாடத்தை பொறுத்தவரை உணவு, பருப்பொருள், உயிரினங்கள், நகரும் பொருட்கள், பொருட்கள் செயல்படும் விதம், இயற்கை வளங்கள், இயற்கை நிகழ்வுகள் என ஏழு பிரிவாக பிரித்துள்ளனர். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இப்படித்தான் உள்ளது. என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தில் இருந்து முழுமையான பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.முன்பு கருத்துருவாக இருந்த பாடங்களை தற்போது 'அப்ளிகேஷன் ஓரியன்ட்டடு' முறையில் படிப்பதை நடைமுறை வாழ்க்கையோடு நேரடி தொடர்புபடுத்தியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் செயல்பாட்டை நேரடி வாழ்க்கையோடு தொடர்புபடுத்தியுள்ளனர்.என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தில் முன்பு விடுபட்ட பாடங்கள் எல்லாம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. எல்லா பாடங்களுக்கும் தகவல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் விதமாக உள்ளன. நிறைய பாடங்களை மொபைல் ஆப்ஸ், ஸ்மார்ட் கிளாஸ் உடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.இதன்மூலம் ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், வேறு ஆசிரியர் உதவியுடன் அல்லது உபகரணங்கள் உதவியுடன் ஸ்மார்ட் கிளாசில் பாடங்களை படிக்க முடியும். இதே போல் மாணவர் வர முடியாத நிலையில், மொபைல் ஆப்ஸ் மூலம் பாடங்களை படிக்கலாம்.கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்து, அங்கு இல்லாத சில பாடங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்

 பாஸ்கர், வித்யாகிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர், காரைக்குடி : சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது, புதிய வரைவு பாடத்திட்டம் தரமுள்ளதாகஉள்ளது. போட்டி தேர்வுகளுக்கான எல்லா வித அம்சங்களும் புகுத்தப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களும், அடிப்படை கல்வியுடன் கூடிய தொலை நோக்கு கல்வியும் சேர்த்து உள்ளது. எந்தவிதமான போட்டி தேர்வுகளாக இருந்தாலும், இந்த வரைவு பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை கற்பிப்பதற்கான கால நேரத்தில், அதற்கான தேர்வுகளுக்கு மாணவர்களை தயாரிப்பது ஆசிரியர்களின் பெரும் பங்காக உள்ளது. வரும் காலங்களில் மாணவர்கள் இந்திய அளவில் உள்ள எந்த தேர்வையும் எதிர்கொள்ள முடியும். ஒவ்வொரு பாடத்திற்கான வெயிட்டேஜ் (புளூபிரின்ட்) மதிப்பெண் கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு நடப்பதால் இரண்டு ஆண்டில் பாடத்திட்டத்தை முழுமையாக படிக்க வாய்ப்பு உள்ளது. மாணவரை முழு தகுதியாக்கும் பாடத்திட்டமாக இது உள்ளது. மதிப்பெண்ணின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தும் போது இதில் மாற்றம் வரலாம். கடந்த 2006-ம்ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தும்போது வரைவு பாடத்திட்டத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

முருகேசன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, வீரசோழன்: மாணவர்கள் சிந்தித்து செயல்பாட்டுடன் படிக்கும் வகையில் புதிய பாடத் திட்ட வரைவுகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொருபாடத்திற்கும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும்வகையில் உள்ளது. சூத்திரங்கள், வரைபடங்கள் எல்லாம் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிதாக கற்கும் முறையில் உள்ளது. பாடப் புத்தகங்களை இணையதளத்தில் பி.டி.எப்.,வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறையும் எளிதாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை அலைபேசியிலேயே கூட பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வெளியிடப்படும் புதிய பாடத் திட்ட வரைவு தேசிய அளவில் பிற பாடத் திட்டங்களுக்கு நிகராகவும், தமிழக மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர்பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில்"National Project Implementation Unit" காலியாக உள்ள1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 11 முதல் 15-ஆம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்குபெற்று பயனடையலாம். மொத்த காலியிடங்கள்: 1270 

பணி: Assistant Professor 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Civil Engg and allied - 190 
2. MechanicalEngg and allied - 191 
3. Electrical Engg and allied - 158 
4. Electronics Engg and allied - 155 
5. Computer Engg/IT and equivalent - 177 
6. Chemical Engg and allied - 59 
7. English: 34 Posts Physics - 59 
8. Mathematics - 77 
9. Chemistry - 52 
10. Geology - 5 
11. Food Technology - 14 
12. Metallurgy and allied - 11 
13. Mining Engg and allied -13 
14. Textile Engg and allied - 4 

சம்பளம்: மாதம் ரூ.70,000 

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் எம்.இ, எம்.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி., எம்.ஏ., பட்டம் பெற்று NET, SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2017 முதல் 15.12.2017 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தமிழகத்தில் திருச்சி என்ஐடி-ல் நடைபெறும். மற்ற மையங்கள் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை:www.npiu.nic.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

சைனிக் பள்ளியில் சேர மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்

                                                      
சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம் வகுப்பில் சேர முடியும்.

அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் சேரலாம். 6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். 9-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். 6-ம் வகுப்பில் சேர 90 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர15 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் மாணவர்களது பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் 'முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்-642102' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டோ, அல்லது இணையதளத்தை (www.sainikschoolamaravathinagar.edu.in) பார்த்தோ தெரிந்துகொள்ள லாம் என்று பாது காப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

NET - ' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. 'நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது.

பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமையான பேராசிரியர்களைதேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை, யு.ஜி.சி., மாற்ற உள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

TNGOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY

                                                        
ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம் பின்புறம் உள்ளது.

ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட தனி தனி அறைகள்

044-24351116

7299722103

காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும்.
குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.

ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்கள்..

சென்னை- 044-24351116
திருச்சி- 94871 57922

பள்ளிக் கல்வித்துறை, கிராம ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ செல்வன் என்பவர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அம்மனுவில், "தமிழகத்தில் உள்ள கிராம, நகரங்களில் உள்ள ஊராட்சி மற்றும் அரசு நூலகங்களில்,
கடந்த சில வருடங்களாக போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் நலன் கருதி தமிழ் மொழியில் பொது அறிவுப்புத்தகங்கள், சட்டப் புத்தகங்கள் புதிதாக வாங்கப்படாமல் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூல்செய்யும்போது, நூலகத்திற்காக செஸ் வரியையும் வசூல் செய்கின்றனர். இந்த வரியைக்கொண்டு, நூலகத்திற்குத் தேவையான புத்தகங்கள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், நூலகத் துறையில் புத்தகங்கள் வாங்கும் பிரிவில் உள்ளோர், தமிழில் பொது அறிவுப் புத்தகங்கள், சட்டப் புத்தகங்களை வாங்காமல் உள்ளனர்.

தமிழக கல்விதுறையின் அரசாணை 130-ன் படி, தமிழகத்தில்உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் அரசு நூலகங்களுக்கு தமிழ் மொழியில் தேவையான பொது அறிவுப் புத்தகங்கள் மற்றும் சட்டப் புத்தகங்களை வாங்குவதற்குத் தேவையான உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு வந்தது . நீதிபதிகள் வேணுகோபால், பாஸ்கரன் அமர்வு இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை , கிராம ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை 14.12.17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வெளி மாநிலத்தவரும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கை கூறுகிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்படுவதாவது: - வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது.

தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.கடந்த மூன்றாண்டுகளில் 56 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்

TNPSC - 'குரூப் - 4' தேர்வு : வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 4 தேர்வில், பொதுபிரிவினராக, வெளிமாநிலத்தவர் பங்கேற்க விதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், மற்ற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில், அறிவிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தவறானது. வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும்சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 1955 முதல் அமலில் உள்ளது.
இவ்விதி, தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான பணி நிபந்தனைகள் சட்டம், 2016, பிரிவு, 20 மற்றும், 21ல்,இடம்பெற்றுள்ளது. இதில், எந்த மாற்றமும் இன்றி, தேர்வாணையத்தால், நேரடி நியமனத்திற்கான அனைத்து பதவிகளுக்கும் பின்பற்றப்படுகிறது. வெளிமாநிலத்தவர், பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால், தமிழக விண்ணப்பதாரர்களுக்கான இட ஒதுக்கீட்டில், எந்த பாதிப்பும், மாற்றமும் இல்லை.இவ்விதிகளையே, குரூப் - 4 அறிக்கையிலும் கூறியுள்ளோம்.

பிற மாநிலங்களிலும், இந்த விதிகள் பின்பற்றப்படுகின்றன. மூன்று ஆண்டுகளில், 66 போட்டி தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு உள்ளன. அவற்றில், 30 ஆயிரத்து, 98 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில், 11 பேர் மட்டுமே பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு

ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று வெளியிட்டார். புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு
அதனால், 14 ஆண்டுகளுக்குப் பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, மே, 22ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில், கலைத்திட்ட குழுவும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், உயர்மட்டக்குழுவும் அமைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்ட பணிகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளிஒருங்கிணைப்பில், கலைத்திட்ட குழு, துணைக்குழு மற்றும் பாட புத்தகம் எழுதும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், பொதுமக்கள் என, 2,000 பேரிடம், கருத்துக்கள் பெறப்பட்டன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் உட்பட, பல பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டன.இதன்படி உருவாக்கப்பட்ட, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிக்கையை, www.tnscert.org என்ற,இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் பின், இறுதி பாடத்திட்ட அறிக்கைதயார் செய்யப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பிப்ரவரியில் புதிய புத்தகம்

புதிய பாடத்திட்டம் குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:இதுவரை இல்லாத மாற்றத்தை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் போது, வேலை வாய்ப்பு பெறக்கூடியதாக, கல்விமுறை மாற உள்ளது. சிறுபான்மை மொழியினருக்கு, அடுத்த வாரம் பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படும். ஏழு நாட்களுக்குள், பொதுமக்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கருத்துக்களை தெரிவிக்கலாம்.இந்த கருத்துக்களின்படி,ஜனவரியில் புத்தகம் உருவாக்கப்பட்டு, பிப்ரவரியில் பாடநுால் கழகம் சார்பில், புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் வரும்; அடுத்த இரண்டு ஆண்டுகளில், மற்ற வகுப்புகளுக்கு அமலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா, சிங்கப்பூர், 'சிலபஸ்'

பாடத்திட்டம் குறித்து, கலைத்திட்ட குழு தலைவர், அனந்தகிருஷ்ணன் அளித்த பேட்டி:வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து உட்பட வெளிநாடுகளில் உள்ள, 15 பாடத்திட்டங்களை, ஆய்வு செய்தோம். அதிலுள்ள நல்ல அம்சங்களை, புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், எவ்வாறு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்ற, விபர கையேடு தயாரிக்கப் பட்டுள்ளது.அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த பாடங்கள், புதிய திட்டத்தில் இடம் பெறும். அடுத்தடுத்த பாடங்களுக்கு தொடர்பு இருக்குமாறு, பாடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. தொழில்நுட்ப தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.இவ்வாறுஅவர் கூறினார்.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
பிளஸ் 1 பொதுத் தேர்வு : இந்த தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிக கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு பாடங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில், செய்முறை தேர்வு, பிளஸ் 2 வகுப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், பிளஸ் 2 பொது தேர்வின் போது, பிளஸ் 1க்கும் சேர்த்து, செய்முறை வகுப்புகள் நடத்துவதில், நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்; மாணவர்களுக்கும் சுமை கூடும் என, கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

கல்வித்துறை முடிவு : இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கு, அதே ஆண்டில், பொது தேர்வுடன், செய்முறை தேர்வையும் இணைத்து நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, திருத்திய அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.இதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வையொட்டி, செய்முறை தேர்வும் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி, அரையாண்டு தேர்வுக்கு பின் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கு, அக்டோபரில் நடந்த துணை தேர்வில், 22 ஆயிரத்து, 665 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்களில், 184 பேருக்கு, பல்வேறு பாடங்களில், 383 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில், 17 பேருக்கு மதிப்பெண் மாறிஉள்ளது. அவர்கள், தற்காலிக சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மாறியவர்கள் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத் திட்டப் பணிகள் தாமதம்: அன்புமணி கண்டனம்

புதிய பாடத்திட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து ள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 4 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்ட தேதியைவிட ஒரு மாதம் தாமதமாக திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 20-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற புதிய பாடத்திட்டம் குறித்த கருத்தரங்குக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த 3 மாதங்களில் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் புதிய பாடத் திட்டத்துக்கான வரைவை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் பார்வைக்காக அரசு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தமிழக அரசு அக்.20-ஆம் தேதி வரைவு புதிய பாடத்திட்டத்தை வெளியிடவில்லை. 
தற்போது புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டாலும் கூட அதன் நோக்கம் நிறைவேறுவது சந்தேகம்தான்.
புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கேற்ற வகையில் பாடங்களை எழுத ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். புதிய பாடங்களை எழுதி, இறுதி செய்ய இரு மாதங்கள் ஆகும் என வைத்துக் கொண்டால் வரைவுப் பாடநூல்களைத் தயாரிக்கவே பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கம் ஆகிவிடும்.
அதன் பின்னர் அச்சுப் பணிகள் முடிந்து ஜூன் மாத இறுதியில் தான் புத்தகங்கள் தயாராகும். ஜூன் மாதத் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குறைந்து ஒரு மாதத்துக்கு புத்தகங்கள் இல்லாமல் படிக்க வேண்டிய அவலநிலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடும். புதிய பாடத்திட்டத்தைத் தயாரித்து வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, பாடத்திட்டத்தை மாற்றும் நோக்கமே சிதைந்து விட்டது.
மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சற்று குறைக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டுள்ள வகுப்புகளுக்கான பாட நூல்களை அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே அச்சிட்டு, வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்



அரசுப்பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு தரஊதியம் உயர்த்தி வழங்கியதால் அரசுக்கு நிதியிழப்பு. - தணிக்கை ஆய்வில் கண்டுபிடிப்பு:

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு TNGTA அ.சுந்தரமூர்த்தி -மாநிலபொதுச்செயலாளர் அவர்களின் அன்பு வேண்டுகோள்

அன்புடையீர் வணக்கம்!!
      
CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய் திட்டத்தை நடைமுறைபடுத்திடவே  தாமும் , தான் சார்ந்துள்ள அமைப்புகளும் உருவானதைப்போல உருவக படுத்தித் கொண்டுள்ள போலி சங்கங்களை சார்ந்த போலியானவர்களுக்கு இந்த பதிவினை பதிவிடுகிறோம் .
                CPS திட்டத்தை ரத்து செய்திட CPS திட்டத்தில் உள்ள தலைமையே தேவையென்று கூறிக்கொண்டு வலம் வருபரோடு , போராட்ட களத்தில் உள்ள  *திருவாளர்கள் செ. முத்துசாமி (Ex MLC மற்றும் முன்னாள் பொதுச் செயலா ளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி) ,செல்வராஜ்( பொதுச் செயலர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ) , க.மீனாட்சி சுந்தரம்(Ex MLC மற்றும் பொதுச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்), அ .மாயவன் (Ex MLC மற்றும் தலைவர்), பக்தவச்சலம் (மாநிலத் தலைவர் தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ) ,  K .P. O .சுரேஷ் (தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்), பாலசந்தர் ( பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ) , தாஸ் (பொதுச் செயலாளர் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ), தியோடர் ரபின்சன் (மாநிலத்தலைவர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் )ஆகியோர் அனைவரும் CPS திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களா ?* *எண்ணிப்பாருங்கள் .
நண்பர்களே இன்று தமிழகத்தில் உயிர்ப்போடு இயங்கும் அனைத்து இயக்கங்களின் மாநில , மாவட்ட , வட்ட நிர்வாகிகளில் பெரும் பகுதியினர் CPS திட்டத்தின் கீழ் பணிபுரிவர்களே என்பதனை மறந்து விட வேண்டாம் .குறிப்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் 95 சதவீதம் (95%) பொருப்பாளர்கள் CPS திட்டத்தில் உள்ளவர்களே ,
           நண்பர்களே போலியானவர்களின் பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்.
CPS திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பதில் எவருக்கும் இரு வேறு கருத்தில்லை .

 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு , பிறகு 1 .06.2006 முதல் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு . 
 இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசிடத்தில் போராட்ட கால பேச்சுவார்த்தையின் போது மிகத் தெளிவாக எமதமைப்பின் மாநிலத் தலைவர் திரு *P.இளங்கோவன்* அவர்களால் வாதிடப் பட்டத்தை அனைவரும் நன்கு அறிவோம் *.
  தொகுப்பூதிய பணிக் காலத்தை முறையான பணிக்காலாமாக மாற்றி தர வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் வாருங்கள் என்ற போது வழக்கு தொடர வராதவர்கள் , தற்போது தொகுப்பூதியம் சார்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டது என்று பொய் பரப்புரை செய்து வருகிறார்கள்.அவர்கள் வழக்கு தொடர்ந்த    லட்சணம் அப்படி*
   எமது அமைப்பின் (TNGTA ) *முன்னாள் பொதுச் செயலாளர் *திரு கி. மகேந்திரன்* *அவர்கள் பெயரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொகுப்பூதிய பணி காலத்தை முறையான பணிக் காலமாக மாற்றிட வேண்டி வழக்கு பதியப்பட்டு இன்றும் உயிர்ப்போடு , அந்த வழக்கை நடத்தி வருகிறோம் என்பதனையும் தெரிவித்திட விரும்புகிறோம்*. 
      எனவே  நண்பர்களே *எவரோ சிலரின்* தூண்டுதல்களால் , சிலர் 
CPS திட்டம் ரத்து மற்றும் தொகுப்பூதிய காலம் மாற்றம்  எனக் கூறிக் கொண்டு நமது *கூட்டமைப்பிற்கு (ஜாக் டோ- ஜியோ - கிராப்)  குந்தகம் ஏற்படுத்துவதை  அனுமதிக்க வேண்டாம்*
      இவன்
 அ.சுந்தரமூர்த்தி மாநிலபொதுச்செயலாளர்*
      மற்றும்
*மாநில நிர்வாகிகள்*
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNG TA).

New Draft Syllabus 2017 - இணைய வழி கருத்துக் கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்

தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு - 2017
தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியான அறிக்கைகள் மற்றும் ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக் கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இயக்குனர்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம்

தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு

தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.
2016-2017 கல்வியாண்டில் 8.93 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். 2017-2018 கல்வியாண்டில்கூடுதலாக 7,000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களைக் கண்காணிக்க, விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் மாணவர்களின் விவரங்களைப் பார் குறியீட்டுடன் அச்சிட தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், அரசு தேர்வுகள்இயக்குநரகம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, டிசம்பர் மாதம் விடைத்தாள்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அதற்குத் தடை ஏற்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறையால் நேரடியாக நிர்வகிக்கப்படும் கிட்டத்தட்ட 50 சுயநிதி மற்றும்உதவிபெறும் பள்ளிகள் அரசாங்க அங்கீகாரமின்றி இயங்கின.

முன்னதாக அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் உள்ள பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின் ஆவணங்களை அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி, சேர்க்கைக்குத் தயார் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முடியும் எனவும் பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.இந்தியாவில் இயங்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளும், அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றே இயக்கப்பட வேண்டும். மாநில அரசு நிர்ணயிக்கும், விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தால் மட்டுமே அந்த அங்கீகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு,இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், “மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை சுயநிதி மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் விரைவில் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த 2004ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.அதைத் தொடர்ந்து, பள்ளி கட்டடங்களின் வரைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாத கட்டடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் பல பள்ளிகள் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆய்வின் முடிவில், சுமார் 746 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

அங்கீகாரம் இல்லாத 746 தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி 2016 டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 746 பள்ளிக்கூடங்களுக்கு விதிமுறைகளை நிறைவேற்றிக்கொள்ள வசதியாகக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்காலிக அங்கீகாரத்தைக்கொண்டு அவை இயங்கி வந்தன. ஆனால், விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டி அரசு வழங்கிய கால அவகாசத்தில், அவற்றை நிறைவு செய்ய பள்ளிகள் தவறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது?

Flash News :TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடங்களுக்கு நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு. சென்னை தரமணி மத்திய பல்தொழில்நுட்ப கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவிருந்தது.பொறியியல் அல்லாத பாடங்களுக்கு திட்டமிட்டபடி நடைபெறும்.விழுப்புரம்,மதுரையில் திட்டமிட்டபடி நவம்பர் 24,25ல் நடைபெறும்.சான்றிதழ் நடைபெறும் தேதி பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிவிக்கப்படும்