யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/2/16

ரூ.25 கோடி 'தண்டம்' 10,000 இலவச 'லேப்டாப்'கள் மாயம்

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், மாணவர்களுக்கு வழங்காமல் மாயமான, 10 ஆயிரம், 'லேப்டாப்'களுக்கான கணக்கை சரிக்கட்ட முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். மாயமான, 'லேப்டாப்'களுக்காக, 25 கோடி ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சொந்த பணத்தில் இருந்து செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், 2011 - 12 முதல், பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச, லேப்டாப் வழங்கப்படுகிறது.இதுவரை, 22 லட்சம் மாணவர்களுக்கு, 5,500 கோடி ரூபாய் மதிப்பில்,
லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், ஒரு, லேப்டாப்பின் மதிப்பு, 25 ஆயிரம் ரூபாய்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம், லேப்டாப்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில், இதில், முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

அதாவது, 
* பல பள்ளிகளில், மாணவர்கள் படித்து முடித்து சென்ற பின், அவர்களின் பெயரில், லேப்டாப்கள் எடுக்கப்பட்டு, வெளி சந்தையில் விற்கப்பட்டுள்ளன
* பல பள்ளிகளில், பூட்டு உடைக்கப்பட்டு, லேப்டாப்கள் திருடு போயின
* போலி மாணவர்கள் பெயரில், லேப்டாப் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 'மாணவர்களின் ஆதார் எண்இருந்தால் மட்டுமே, லேப்டாப் வழங்க வேண்டும்; மாணவரின் கையெழுத்து அவசியம்' என, கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.மேலும், ஐந்து ஆண்டுகளாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனமான, 'எல்காட்' சார்பில், பள்ளி களுக்கு வழங்கப்பட்ட, லேப்டாப்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்டவை; திருப்பி அனுப்பப்பட்டவை; திருடு போனவை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவை குறித்து, மாவட்ட வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.இதில், தமிழகம் முழுவதும், 10 ஆயிரம், லேப்டாப்களின் கணக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணக்கை எப்படி சரி செய்வது என தெரியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.




'பிப்.,10க்குள் செலுத்த வேண்டும்':பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு: 
* திருடு போனதாக கூறப்பட்ட, லேப்டாப்களுக்கான பணத்தை, தலைமை ஆசிரியர்களே ஏற்றுக் கொண்டு, பிப்.,10க்குள் செலுத்த வேண்டும் 
* சேதமான, லேப்டாப்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்* மாணவர்களுக்கு வழங்கப்படாமல், கணக்கில் விடுபட்ட, லேப்டாப்கள் குறித்து உரிய விளக்கம்அளிப்பதுடன், அதற்கான செலவை ஏற்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.10 ஆயிரம், லேப்டாப்களின் மதிப்பு, அரசின் திட்ட மதிப்பீட்டின் படி, 25 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

CPSல் பணியில் சேர்ந்தவர்கள் - “ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்!” -

“ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்!”

புதிய ஓய்வூதியத் திட்டத்தால் நிம்மதியிழந்த அரசு ஊழியர்கள்

“அரசு ஊழியர்களை நவீன பிச்சைக் காரர்களாக மாற்றிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்பவர் களுக்கே வரும் தேர்தலில் எங்கள் வாக்கு” என்று அதிரடி முடிவில் இறங்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். ‘பங்களிப்புடன் கூடிய புதிய பென்சன் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களாகச் சேரும் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டப்படிதான் பென்சன் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.


‘‘புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணையான அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் மாதம்தோறும் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகைக்கு இணையாக அரசு தனது பங்கைச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவிகிதம், ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக்கப் படும். மீதமுள்ள 40 சதவிகிதத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதந்தோறும் ஓய்வூதியமாக அளிக்கப்படும்” என்று அறிவித் தனர். தமிழகத்தில் ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என சுமார் நான்கு லட்சம்பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, ஊழியர்களின் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அவர்களின் ஓய்வுக்காலத்தில் திருப்பித் தர டெல்லியில் ‘ஓய்வூதியத் தொகை வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்’ செயல்பட்டு வருகிறது.

ஓய்வுபெற்ற பிறகும் பலன் அளிக்காத புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் பேசினோம். “புதிய ஓய்வூதியத் திட்டம் வந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஓர் அரசு ஊழியர்கூட பயன்பெறவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்றவர்களும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

ஊழியர்களிடம் இருந்து ஏழாயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டிருக்கிறது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்குத்தொகை இரண்டும் பி.எஃப்.ஆர்.டி.ஏ-வுக்குச் செலுத்தப் படவில்லை. அந்தத் தொகை என்ன ஆனது என்பதுதான் எங்கள் கேள்வி?

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த பலன்கள் இந்தத் திட்டத்தில் இல்லை. குடும்ப பென்சன், பணிக்கொடை எதுவும் இந்தத் திட்டத்தில் கிடையாது. எங்களிடம் பிடித்தம் செய்த தொகையை மட்டுமாவதுத் திருப்பித்தரலாம். அதையும் இந்த அரசு தர மறுக்கிறது. தமிழக அரசு இந்தத் தொகையை வைப்புநிதியாக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர். அதனால் எங்களுக்கு என்ன பயன்? ஓய்வுபெறும் ஊழியர்கள் வெறும் கையோடு போகும் நிலை உள்ளது.

ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியாற்றிய நாய்கள், குதிரைகள்கூட ஓய்வுபெற்றபின், அவற்றின் பராமரிப்புக்குப் பணம் ஒதுக்கும் அரசு, எங்களை மட்டும் அலட்சியம் செய்வது ஏன்?” என்றார்.

மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம்’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஆனால், ஊழியர்களின் பணம்கூட ஒழுங்காக ஆணையத்தில் செலுத்தப் படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் உள்ளது. ஆனால், மாநில அரசில் அது இல்லை. ஊழியர்களின் பணத்தைவைத்து பங்குச் சந்தையை வளர்க்கத்தான் இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துகின்றனர். ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் எந்தப் பணமும் கிடைக்காமல் நவீன பிச்சைக்காரர்களாக மாறும் நிலை உள்ளது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் இதே அ.தி.மு.க உறுப்பினர்கள், இடதுசாரி உறுப்பினர்களோடு இணைந்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு ஊழியர்களிடத்தில் மாறுபாடான நிலையைக் கடைப்பிடிக்கின்றனர். வரும் தேர்தலில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவோம் என்று உறுதியாகக் கூறும் கட்சிக்குத்தான் நாங்கள் வாக்களிப்போம்” என்றார்.

அரசுப்பள்ளி வகுப்பறைகளில் விரைவில் வண்ண வண்ண சித்திரங்கள் கற்பனை வளத்துடன் ஆங்கிலம் கற்பிக்க திட்டம்

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில், அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல் திறனை ஊக்குவிக்கும் புது திட்டம் கல்வித்துறையால், செயல்படுத்தப்பட்டுள்ளது. மேகத்தில் மிதப்பது, நிலாவை பிடிப்பது என குழந்தைகளின் உலகம் என்றுமே, கற்பனை வளமும், வண்ணமயமான காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், பள்ளிக்குள் நுழைந்ததும், அவர்களின் உலகத்தை விட்டு வெளியேற்றி, தங்களுக்கான சூழலை இழப்பதாக கருதுகின்றனர் இன்றைய பள்ளி குழந்தைகள். 



கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டாலும், அதை கற்பிக்கும் விதத்தில் புதுமையை எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கு ஏமாற்றமே.
புத்தகங்களில், பார்க்கும் வண்ண ஓவியங்களை, தங்களின் கற்பனை களத்தின் காட்சிகளாக படைப்பதற்குள், 'மெல்லக் கற்கும் குழந்தைகள்' என பலரும் முத்திரை குத்தப்படுகின்றனர். இன்னல்களுக்கிடையே, பிடித்த முறையில் பாடம் கற்க முடியாமல், படித்த பாடத்தையும் புரிந்துகொள்ள அவகாசம் அழிக்கப்படாத நிலையில்லாத கல்வி முறையில், மாற்றமாகவே வந்துள்ளது, வகுப்பறைகளில், வண்ண சுவர் சித்திரங்களை வரைதல் மூலமாக பாடம் நடத்தும் முறை.


தமிழ், ஆங்கிலம் உச்சரிப்பு பிரச்னை
தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் 'ஆல்பாஸ்' கல்வி முறையால், அரசு பள்ளி குழந்தைகளை வாட்டி வதைக்கும் இன்றைய பிரச்னையாக இருப்பது, தமிழ் மற்றும் ஆங்கிலம் உச்சரிப்புகள் தான். குழந்தைகளின் கற்பனை வளத்தை மேம்படுத்தும் 'படம் பார்த்து கதை வழக்கத்தை மீண்டும் குழந்தைகளிடையே கொண்டுவரும் முயற்சியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் முப்பது மாவட்டங்களில், குறிப்பிட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த கட்டட வசதி, மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


எந்தெந்த பள்ளிகள் தேர்வு
உடுமலையில், சின்னவீரம்பட்டி, சின்னபூலாங்கிணறு, போடிபட்டி நடுநிலைப்பள்ளிகள், எலையமுத்துார், கரட்டூர் துவக்கப்பள்ளிகள், மடத்துக்குளம் ஒன்றியத்தில், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், சாமராயப்பட்டி நடுநிலைப்பள்ளிகள், காரத்தொழுவு, மேற்கு கொமரலிங்கம் துவக்கப்பள்ளி, குடிமங்கலம் ஒன்றியத்தில் சோமவாரப்பட்டி, கோட்டமங்கலம், முருங்கபட்டி, புக்குளம், லிங்கமநாயக்கன்புதுார் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதற்கான படங்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஓவியர்களைக்கொண்டு இப்பணிகளை செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில், 16 படங்கள் அமையும் வகையில் ஓவியங்கள் இடம்பெற, ஒரு பள்ளிக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

TET : தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. 



'ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால், நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது,' என கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர், 'பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார். 


இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதியாக நிர்ணயித்துள்ளது. இதில் அரசு தலையிட முடியாது. 


சிறுபான்மையினர் பள்ளி, சிறுபான்மையினர் அல்லாத பள்ளி என கல்வித் தகுதியை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 
இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, எஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜராயினர்.

நீதிபதிகள் : 'இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என அரசு வழக்கறிஞர் கூறுகிறார். அது முடிவுக்கு வரும்வரை, பணியாற்றும் காலத்திற்குரிய சம்பளத்தை, ஆசிரியருக்கு வழங்க வேண்டும். பணியை விட்டு நீக்கக்கூடாது. பணியில் தொடர்வது என்பது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றனர். இதுபோல் தாக்கலான பல்வேறு வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.