அனைத்து வாகனங்களுக்கும், உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை, அடுத்த ஆண்டில் பொருத்த வேண்டும்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவது, வாகன திருட்டை தடுப்பது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிவது போன்றவை, போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளன.
இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், வாகனங்களுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான நம்பர் பிளேட்டுகளை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மத்திய மோட்டார் வாகன சட்டம், 1989ல், மாற்றங்கள் செய்து, உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக, இந்த நம்பர் பிளேட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த பிளேட்டுகள், வாகனத்துடன் இணைந்ததாக உருவாக்க, வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில், வாகன விபரம், வரி, அபராதம், விபத்து விபரங்கள், உரிமையாளரின் விபரங்கள் மின்னணு முறையில் பதிவேற்றப்படும். சோதனையின் போது, நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்தால், அனைத்து விபரங்களும் தெரியவரும்.
இந்த நம்பர் பிளேட்டுகள் சேதமடைந்தால், அவற்றை அழித்து விட்டு, புதிய நம்பர் பிளேட்டுகளை, தயாரிப்பாளர்களோ, மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ வழங்கலாம். உடைந்த நம்பர் பிளேட்டுகளை திரும்ப பெறாமல், வேறு நம்பர் பிளேட்டுகள் வழங்குவதும், உடைந்த நம்பர் பிளேட்டுகளை, வேறு வாகனங்களில் பொருத்துவதும் குற்றமாகும்.
புதிய வாகனங்களுக்கு, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை வழங்கும் போதும், பழைய நம்பர் பிளேட்டுகளை பெறும் போதும், இதற்கான பதிவேடுகளில், விபரங்களை பதிவேற்ற வேண்டும். இந்த விபரங்களை, நிபுணர் குழு, அடிக்கடி ஆய்வு செய்யும்