யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/1/16

உதவி பொறியாளர் நேர்காணல் அறிவிப்பு

அரசு துறையில் காலியாக உள்ள, 213 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான தேர்வில் தகுதி பெற்ற, 400 பேருக்கு, நேர்காணல் தேர்வும், 23 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும், 11 முதல், 14 வரை நடக்க உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 காலியிடங்களுக்கு நடந்த தேர்வில் தகுதி பெற்ற, 57 பேருக்கு, 27ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கஉள்ளது. இது குறித்த விவரங்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன.

சிறப்பு பொங்கல் பரிசு அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.அரிசி, சர்க்கரை, கரும்புடன், 100 ரூபாய் ரொக்கமும் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை:'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு பை வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு பையில், அரிசி, சர்க்கரை, கரும்புடன், 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகையின் போது, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பாசிப்பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன. அடுத்து, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.கடந்த, 2015ல், ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இல்லாததால், பொங்கல் பரிசு வழங்கவில்லை. இந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் வர உள்ளதால், பொங்கல் பரிசு வழங்கப்படும் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி, நேற்று சிறப்பு பொங்கல் பரிசு அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அவரது அறிக்கை:பொங்கல் திருநாளை கொண்டாட, அரிசிக்கான ரேஷன் கார்டு உடையவர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்பங்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.இப்பரிசுதொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

2 அடி கரும்பு: ஏகப்பட்ட குழப்பம்:
இதுவரை வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு இடம் பெற்றதில்லை; அரிசி, சர்க்கரை போன்றவை தான் இடம்பெற்றிருந்தன. இம்முறை, முதன் முறையாக, 'பொங்கல் பரிசு தொகுப்புடன், 2 அடி நீள கரும்பு துண்டு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார்; இது, பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எத்தகைய குழப்பம்:
* ஒரு குடும்பத்துக்கு ஒரு கரும்பு வழங்குவது, ஓரளவு எளிதாக இருந்திருக்கும். ஆனால், 2 அடி நீள கரும்பு துண்டு என கூறியிருப்பதால், ஒரு கரும்பை எத்தனைதுண்டாக்குவது?* கரும்பு துண்டுகளாக்கப்பட்டு ரேஷன் கடைக்கு வழங்கப்படுமா?* முழு கரும்பை வழங்கி, வெட்டி கொடுக்க உத்தரவிடுவரா?* 'நுனிக்கரும்பு வேண்டாம்; அடிக்கரும்பு வேண்டும்' என கேட்டால் என்ன செய்வது?என்பன போன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு: இன்று முதல் 104ல் உளவியல் ஆலோசனை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

மூன்று கட்டங்களாக இந்த சேவை வழங்கப்படவுள்ளது. தேர்வுக்கு முன்பு தேவைப்படும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். 

தேர்வு சமயத்தின்போது ஏற்படும் மனஅழுத்தம், தோல்வி குறித்த பயம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனைகளைப் பெறலாம். தேர்வு முடிவு வெளிவரும்போது, அதை எதிர்கொள்வது, தோல்விகளைக் கையாள்வது, விரக்தி நிலையில் இருந்து மீட்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமன்றி, தேர்வு சமயத்தை கையாள்வது குறித்து மாணவர்களின் பெற்றோர்களும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.
 மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், தேர்வு குறித்த குழப்பங்கள், மனஅழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் இதன் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். 
 இந்த சேவைகளுக்காக உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட சிறப்புக் குழு 24 மணி நேரமும் செயல்படும். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தொடர்ந்து இந்தச் சேவையை மாணவர்கள், பெற்றோர்கள் பெற முடியும்.

"புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும்"

தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய புதிய கல்விக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் அமைத்துள்ள குழுவின் கருத்தரங்கு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ராமநாதபுரம் ஆயருமான மார்ட் பவுல் ஆல்பர்ட் தலைமை வகித்தார். கல்வியாளர் ஸ்டீபன் பிரகாசம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாதிரியார் எஸ்.எம்.ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கருத்தரங்கைத் தொடர்ந்து, பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கல்விக் குழுவில் கல்வியாளர்களே இடம் பெறாமல் இருப்பது இதுவே முதல் முறை. இந்தியா கூட்டாட்சி நாடு என்பதால் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த கல்வியாளர்களையும் கல்விக் குழுவில் இணைத்திருக்க வேண்டும்.

பின்னர் அந்தக் குழுவினர் மக்களிடம் நேரடியாக பொது விசாரணை நடத்தி, அதன் பிறகு கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

பள்ளித் தேர்வு அறிவிப்பு: ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தவிர்க்க வலியுறுத்தல்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தீபாவளிப் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பள்ளிகளுக்கு அதிக நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.

மழைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மீலாதுநபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என 9 நாள்கள் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

தற்போது இந்த விடுமுறை நாள்கள் முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வருகிற 11-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. மேலும், பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தமிழாசிரியர்களுக்கு இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்த 3 நாள் பயிற்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இந்த பயிற்சி வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் (ஜன.7,8,9) பாப்பாகோயில் தனியார் கல்லூரி, மயிலாடுதுறையில் என 2 இடங்களில் நடைபெறுகிறது.

நிகழ் கல்வியாண்டை பொருத்தவரை மாணவர்கள் இயற்கை இடர்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கிடையே தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது.

இதுபோன்ற நேரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாற்றுப் பணி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும்"

அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளார்.

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 7இல் நடக்கவுள்ள ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தின் பிரசாரப் பயணமாக, செவ்வாய்க்கிழமை சிவகங்கை வந்திருந்த இவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஊதிய முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும், கடந்த சட்டபேரவைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்திருந்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.


அதன்பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வது தேவையற்றது. நாங்கள் அரசு வேலை மட்டுமே செய்கிறோம். எந்தக் கட்சிக்கும் சாத கமாகச் செயல்படவில்லை. தற்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமே வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

  தேர்தல் நடத்தும் நேரடி உயர் அலுவலர்களை இடமாற்றம் செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அடுத்த நிலைகளில் உள்ள அலுவலர்களை இடமாற்றம் செய்வதால், புதிதாக வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடம், சூழ்நிலைகள் தெரியாது. எனவே, தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படுமே தவிர, நன்மை கிடைக்காது என்றார்.

  பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் தமிழரசன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால், ஆங்கிலத்தில் தங்களின் இனிஷியலை எழுதுகின்றனர்' என, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குணமால் என்பவர், பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம், அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும், அதையும் தமிழில் எழுதவும் உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். இனிஷியல் என்பது, தந்தை அல்லது கணவர் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக பெரும்பாலும் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.


இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில்,“வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம். இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது. எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது. வெள்ளம் பாதித்த, நான்கு மாவட்டங்களுக்காக, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. ஜன., 11ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு துவங்கி, 27ல் முடிகிறது. இதையடுத்து, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். அதற்கு கணினி அறிவியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் மாணவர்களுக்கு, 10 நாட்கள் தேவைப்படும். பின், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மூன்று திருப்புதல் - ரிவிஷன் - தேர்வுகள் நடத்த வேண்டும். 

எனவே, பொதுத் தேர்வை, 10 நாள் தள்ளிவைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசு தேர்வுத் துறை, வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வு துவங்கும் படி செய்துள்ளது.இந்நிலையில், இந்த மாதம் முழுவதும், அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில், செய்முறை தேர்வு எப்போது என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 
இதற்கிடையே, பிப்ரவரி 5 - 25க்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்முறை தேர்வு எப்போது என, தாமதமின்றி அறிவித்தால் மட்டுமே, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். பிப்ரவரி முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை நடத்தி முடித்தால் தான், அடுத்தடுத்து, திருப்புதல் தேர்வுகள் நடத்தி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும் என்றார் பேட்ரிக் ரைமண்ட், பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர்.