பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில், ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று, முதலிடம் பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மிக குறைந்த தேர்ச்சி பெற்று, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், துறை வாரியான பள்ளிகளில், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், அதிக தேர்ச்சி பெற்று உள்ளன.அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 5,456 பள்ளிகளில், 1,687 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.ஈரோடு மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களில், ௯௭.௮௪ சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில், முதலிடத்தில் உள்ளனர்.ராமநாதபுரம், இரண்டாம் இடம், தேனி மூன்றாம் இடம் பெற்றுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கான பிரிவில், முதலிடம் பெற்ற சிவகங்கை மாவட்டம், அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.கல்வியில் முன்னிலை வகிக்கும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள், முறையே, ஐந்து மற்றும், 14ம் இடங்களுக்கு பின்தங்கியுள்ளன.கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமான, அரியலுார், 94.45 சதவீத தேர்ச்சியுடன், 11ம் இடத்தில் உள்ளது.தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் நிறைந்த தர்மபுரி, 12; கரூர், 95; சேலம், 16; தஞ்சை, 18; கோவை, 19; நாமக்கல், 20; கிருஷ்ணகிரி, 21; மதுரை, 22; காஞ்சிபுரம், 29; திருவள்ளூர், 32ம் இடங்களை பெற்றுஉள்ளன.அதேபோல், தமிழகத்திலேயே மிக குறைவாக, அதாவது வெறும், 28 அரசு பள்ளிகளை உடைய, சென்னை மாவட்டம், 25ம் இடம் பெற்று, தேர்ச்சியில் வீழ்ச்சி அடைந்துஉள்ளது.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை, தனியார் பள்ளிகள் அதிகமாக செயல்படும் மாவட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தின் முன்னேறிய மாவட்டங்களில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடுமையாக சரிந்துள்ளது.அதுவும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை, சென்னை போன்ற
மாவட்டங்கள், பெரும் சரிவுக்கு சென்றுள்ளதால், அரசு பள்ளிகளின் எதிர்காலமும், அதில் படிக்க காத்திருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.