தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வெளிவர இருக்கிறது எனவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 491 தனியார் மெட்ரிக், 40 நர்சரி பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கும் விழா காட்பாடி தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
வேலூர், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கல்வி மாவட்டம் ஏற்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் குறித்த கமிட்டியில் இடம்பெற உள்ள கல்வியாளர்கள் குழு குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 17,000-த்துக்கும் மேற்பட்ட மெட்ரிக். மற்றும் 3,000 நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் நிர்வாகிகள் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
அதேபோல, தனியார் தொழிற்சாலைகள் உதவியுடன் கட்டப்பட்டு வரும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறும்.
யோகா, தேசப் பற்று, சாலைவிதி, பெற்றோரை மதிக்கும் நிலை, விளையாட்டு ஆகிய 5 அம்சங்களை உள்ளடக்கிய வகுப்பறைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வர இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கும் அரசாக இருப்பதால் 5 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றார்.
நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ-க்கள் என்.ஜி.பார்த்திபன், சு.ரவி, ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.