யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download
சிந்தனை கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4/1/19

நீதிக்கதை---சிந்தனை கதைகள்

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்..

அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்..

ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது..

தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது..

ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்..

அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்.._

அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன..
அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது..

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது..

ஆனால், அந்தோ பரிதாபம்..

அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை..

எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.. அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது..

அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை..

ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்..

கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா..

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது..

கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்..

நீதிக்கதை :

பறக்கும் போட்டி

அழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.

அந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.

வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.

போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.

“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக்? பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா?” என்று சிரித்தது மினு.

உடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.

“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே? பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.

“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.

“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.

பயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.

இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.

“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.

ஜிக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.

சிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.

அன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.

“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.

“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.

கொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.

“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.

நம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.

“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.

ஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.

மினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.

3/1/19

நீதிக்கதை :

நட்புக்கு ஏங்கிய புலி!

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள ஓர் அடர்த்தியான காடு. அங்கே பெரிய மரங்களும் குகைகளும் பசுமையான புல்வெளிகளும் நிறைந்து இருந்தன.

பறவைகள் அங்கும் இங்கும் பறந்துகொண்டு கத்தும் சத்தம், விலங்குகள் குதித்தும் ஓடும் ஓசை, அருவியில் தண்ணீர் விழும் சத்தம் எல்லாம் சேர்ந்து ரம்மியமானா சூழலை உருவாக்கியிருந்தது.

மலை உச்சியில் ஒரு குகை. அந்தக் குகையில் புலி ஒன்று தனியே வசித்துவந்தது. அதுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அதைப் பார்த்தாலே காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் சிதறி ஓடிவிடும். அதனால் யாரிடமும் சிரித்துப் பேசச்கூட முடியவில்லை. இதை நினைத்து புலி மிகவும் வருந்தியது. தனக்கு யாரும் நண்பராக வர மாட்டார்களா என்று ஏங்கியது.

அன்று வேட்டையாடச் செல்லும் வழியில், வேடன்  வைத்த பொறியில் மான் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்தது புலி.  உடனே அதைக் காப்பாற்ற முடிவெடுத்தது. புலி அருகில் வருவதைக் கண்ட மான், பயத்தில் நடுங்கியது. அருகில் சென்ற புலி, பொறியை ஒரே அடியில் அடித்து உடைத்தது. மான் வெளியே வந்தது. நிம்மதியாகச் சென்றுவிட்டது புலி.

மான் தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தியது. புலியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தது. மறுநாள் புலியின் குகைக்குச் சென்றது.

மானைக் கண்டதும் புலிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அருகில் சென்றால் பயப்படும் என்பதால், உள்ளே அமர்ந்தபடியே வந்த காரணத்தைக் கேட்டது.

“நேற்று உன்னைத் தவறாக நினைத்துவிட்டேன். அதற்கு மன்னிப்பும் என்னைக் காப்பாற்றியதற்கு நன்றியும் சொல்ல வந்தேன்” என்றது மான்.

“நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும்” என்றது புலி.

மானுக்குத் திக்கென்றது.

“உனக்கு நம்பிக்கை வரும்போது என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும். நீ கிளம்பு” என்றது புலி.

“இல்லை, இப்போதே உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிடப் போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டது மான்.

புலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே மானுடன் கிளம்பியது. இதைப் பார்த்த சில விலங்குகள் ஆச்சரியமடைந்தன. சில விலங்குகள் மானை எச்சரித்தன. இன்னும் சில விலங்குகள் மானுக்கு மரியாதை அளித்தன.

நாட்கள் சென்றன. அன்று மான் காட்டில் தனியாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த சிங்கம், நல்ல வேட்டை என்று நினைத்தது. மெதுவாக மானை நோக்கிச் சென்றது. அப்போது மானைத் தேடிக்கொண்டு வந்த புலி, சிங்கத்தைப் பார்த்துவிட்டது. மானைக் காப்பாற்றும் அவசரத்தில் பாய்ந்துவந்தது.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மான், புலிதான் தன்னைத் தாக்க வருகிறது என்று எண்ணியது. சட்டென்று தாவிக் குதித்து ஓடியது.

மானைத் தப்பிக்க விட்ட புலி மீது சிங்கத்துக்குக் கோபம் வந்தது. உடனே சண்டைக்கு வந்தது. புலியும் சிங்கமும் சண்டையிடுவதைப் பார்த்து மற்ற விலங்குகள் ஆச்சரியமடைந்தன.

“நண்பனுக்காகப் புலி எப்படிச் சண்டை போடுகிறது!” என்றது குரங்கு.

“நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதை உணராத மான் பயந்து ஓடிவிட்டது” என்றது யானை.

நீண்ட நேரச் சண்டையில் சிங்கம் காயமடைந்து, களைப்புற்றது.

“என் நண்பன் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய நினைத்த உனக்கு, இனி இந்தக் காட்டில் இடமில்லை. இப்பொழுதே ஓடிவிடு” என்று கோபத்துடன் கூறியது புலி.

விட்டால் போதும் என்று சிங்கமும் ஓடிவிட்டது.

நடந்ததை அறியாத மான் தன் கூட்டத்தினரிடம் சென்று,  புலியைத் திட்டித் தீர்த்தது.

“நடந்தது என்ன என்பதை அங்கே இருந்து பார்த்திருந்தால் உனக்குத் தெரிந்திருக்கும். நட்புக்காகச் சிங்கத்திடம் சண்டையிட்டது. புலிக்கும் காயம் அதிகம். பாவம் குகையில் தனியாக வலியோடு போராடிக்கொண்டிருக்கும்” என்றது ஒரு புள்ளிமான்.

“ஐயோ… தவறாக நினைத்துவிட்டேனே. இதோ மூலிகையை எடுத்துக்கொண்டு, புலியைச் சந்திக்கிறேன்” என்று கிளம்பியது மான்.

புலி வலியில் துடித்துக் கொண்டிருந்தது. மருந்திட்ட மான், “என்னை மன்னித்துவிடு. வேகமாக நீ வருவதைப் பார்த்தவுடன், நீ என் நண்பன் என்பதை மறந்து ஓடிவிட்டேன். இனி இப்படி நடக்க மாட்டேன்” என்றது மான்.

“நான் உயிரினங்களைக் கொன்று திங்கும் இனத்தைச் சேர்ந்தவன்தான். அதற்காக நண்பனைக் கொல்வேனா? உன்னோடு நட்பு உருவான நாளில் இருந்து இன்றுவரை உன்னை மட்டுமில்லை, மான்கள் இனத்தையே நான் கொல்வதில்லை. நட்பு என்ற பெயரில் கேடு நினைக்க என்னால் முடியாது. என்னுடன் சண்டையிட்டு நீ சென்றாலும் கூட உன்னையோ, உன் இனத்தையோ நான் வேட்டையாட மாட்டேன். அதனால் என் மீது எப்போதும் உனக்குச் சந்தேகம் வேண்டாம்” என்றது புலி.

மானும் புலியும் மீண்டும் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்தன.

நீதிக்கதை

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.

20/12/18

நீதிக்கதை :---சிந்தனை கதைகள்

 புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.

புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.

மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை  அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:
 கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

19/12/18

நீதிக்கதை :

 விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டூம் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.

13/12/18

நீதிக்கதை :சிந்தனை கதைகள்

நான் கத்தவே இல்லை

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.

12/12/18

நீதிக்கதை---சிந்தனை கதைகள்

துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..

இளைஞன் ஒருவன் வந்தான் *_சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._* *உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..*
*_ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..??_* என்று கேட்டான்..

துறவி  அவனிடம் சொன்னார்..
*தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..*

_*ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..*_
*_நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.._*

*தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு* _என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.._

_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._

_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.._

_இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.._

_அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி.._
*தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..??* என்று கேட்டார்..

_அதற்கு அவன்,_
*என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?*

_*திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?*_

_இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..*

*நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..*

இளைஞன் கேட்டான்.. *சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன..?*

_அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,_

_பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.._
*இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?*

*ஆகாது சாமி..* என்றான்..

துறவி  கூறினார்.. *உன் கேள்விக்கு இதான் பதில்..*

*நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..*

*இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..* _*என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,*_  *அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,*

 *_அன்று வரை மனிதனை நன்னெறி படுத்த வேண்டும் என்றார்,”

11/12/18

நீதிக்கதை :சிந்தனை கதைகள்

சிறியதே அழகு

தாய் யானையுடன் நடை பயின்றுகொண்டிருந்த குட்டி யானை, அருகில் இருந்த புல்வெளியில் புள்ளிமான் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டது.

“அம்மா, அந்தப் புள்ளிமானோடு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமா?”

“மானோடு விளையாடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கவனமாக விளையாட வேண்டும். கல்லில் தடுக்கி கீழே விழுந்து, காயப்படக் கூடாது” என்று எச்சரித்தது தாய் யானை.

குட்டி யானையைக் கண்டதும் புள்ளிமான் மகிழ்ச்சியோடு ஓடிவந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.

“தினமும் வருகிறேன். நாம் இருவரும் ஜாலியாக விளையாடலாம்” என்றது குட்டி யானை.

“அது முடியாது. நீ பெரியவனாக வளர்ந்துவிட்டால், உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கும். அதனால் உங்க இனத்தினரோடு விளையாட ஆரம்பி” என்றது புள்ளிமான்.

“யார் சொன்னது? நான் பெரிசா எல்லாம் வளரவே மாட்டேன். எப்பவும் இப்படியே குட்டியா, அழகா இருப்பேன். இப்பவே அம்மா கிட்ட சொல்லி, என்னை வளர விடாமல் செய்துடறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது குட்டி யானை.

“அம்மா, மான் அழகா சின்னதா இருப்பதுபோல நானும் சின்னதாவே இருந்துடறேன். உங்களை மாதிரி பெரிய உடம்பு எனக்கு வேண்டாம்மா” என்று அப்பாவியாகச் சொன்னது குட்டி யானை.

”மான் சின்னதா இருக்கிறதும் நாம் பெருசா வளர்றதும் இயற்கை. இதை நீயோ நானோ நினைத்தால் மாற்ற முடியாது. பெரிய உடம்புதான் நம் இனத்துக்குப் பலம்” என்று தும்பிக்கையால் குட்டி யானையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னது அம்மா யானை.

குட்டி யானைக்கு இந்தப் பதிலில் திருப்தியில்லை. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வளர வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடச் சென்றுவிட்டது.

மறுநாள் புள்ளிமானைச் சந்தித்தது.

“என் அம்மாவிடம் நான் வளர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி கவலை இல்லை” என்று சிரித்தது குட்டி யானை.

“நீ ரொம்பச் சின்னவன். உனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது. வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.”

இரண்டும் சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று வந்தது. அதைக் கண்டதும் மானின் உடல் நடுங்கியது.

“குட்டி யானையே, வேகமாக ஓடிடு. சிறுத்தை வந்துகிட்டு இருக்கு. நானும் ஓடறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பாய்ந்து சென்றது புள்ளிமான்.

குட்டி யானைக்கு ஒன்றும் புரியவில்லை. சிறுத்தையின் கவனம் புள்ளிமானின் மீது இருந்ததால், குட்டி யானையை அது கண்டுகொள்ளவில்லை.

சிறுத்தையின் ஆக்ரோஷமான துரத்தலையும் புள்ளிமானின் உயிர் பயத்தையும் கண்ட குட்டி யானைக்கு முதல் முறையாகப் பயம் வந்தது.

தன்னை அறியாமல் அம்மா, அம்மா என்று கத்தியது குட்டி யானை. புள்ளிமானைப் பிடிக்க முடியாத சிறுத்தை மிகவும் ஏமாற்றமடைந்தது. குட்டி யானையைக் கண்டவுடன் மீண்டும் மகிழ்ச்சியடைந்தது. ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.

அதைப் பார்த்த குட்டி யானை, “அம்மா… அம்மா…” என்று அலறியது.

இலைகளைத் தின்றுகொண்டிருந்த அம்மா யானையின் காதில், குட்டியின் குரல் விழுந்தது. உடனே ஓடிவந்தது. அதற்குள் சிறுத்தை குட்டி யானையை நெருங்கிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையால் சிறுத்தையைப் பிடித்து, சுழற்றி வீசியது அம்மா யானை.

தூரத்தில் போய் விழுந்த சிறுத்தையால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வலியில் கதறியது.

“பொதுவா நம்மைக் கண்டால் சிறுத்தை பயப்படும். ஏனென்றால் நம் உருவம் அப்படி. தூக்கி வீசினால் ஒரு மாசத்துக்கு நடக்கக்கூட முடியாது. நீ சின்னவனாக இருப்பதால்தான் சிறுத்தை உன்னை நெருங்கியிருக்கிறது. நமது பலமே நமது பிரம்மாண்டமான உடல்தான். இப்பவாவது உனக்குப் புரியுதா?” என்று கேட்டது அம்மா யானை.

“நன்றாகப் புரிந்துவிட்டது அம்மா. புள்ளிமானுக்கு வேகமாக ஓடக் கூடிய கால்களும் நமக்கு பெரிய உருவமும் இயற்கை கொடுத்திருக்கு. நானும் நல்லா சாப்பிட்டு உங்களை மாதிரி பெரிய ஆளா வளரப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் வயிற்றுக்கு அடியில் போய் நின்றுகொண்டது குட்டி யானை.

10/12/18

7/12/18

நீதிக்கதை :---சிந்தனை கதைகள்

தங்க இறகு

பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. “விவசாயி கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழிப்படி பல ஆண்டுகளாகப் பாடுபட்டும்கூட அவன் வறுமையிலேயே வாடிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, “இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும். இத்தனை நாள் நாம் இதை வணங்காமல் போனதால்தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை. இன்று முதல் இதை நாம் வணங்குவோம்’ என்று தீர்மானித்தான்.

“”எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னித்துவிடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன். சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,” என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்றான் விவசாயி.

நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான். மறுநாள் காலையில் ஒரு தங்க இறகு இருக்கும். இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான்.

விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்த்த விவசாயியின் மகன், “இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம். எப்படியும் பறவைக்கு தங்க இறகு முளைத்துவிடும். மீண்டும் பிய்க்கலாம்,’ என்று நினைத்து அவன் மறுநாள் ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான். அதன் இறகை பிய்க்க முயன்றபோது பறவை அவன் கண்களை குத்தி குருடாக்கி விட்டுச் சென்றது.

விவசாயியின் மகன் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான். கிடைப்பதை கொண்டு திருப்தி அடையணும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் 

6/12/18

நீதிக்கதை :--சிந்தனை கதைகள்

முதல் முட்டாள்!

அரேபிய தேசத்திலிருந்து, குதிரை வணிகன் ஒருவன் ஆக்ராவுக்கு வந்திருந்தான். அரபிக் குதிரைகள் என்றால், அக்பர் சக்கரவர்த்திக்கு மிகவும் பிரியம். இதை அறிந்து, சிறந்த குதிரைகள் கொண்டு வந்துள்ளதாக கூறினான் வணிகன். மிக உற்சாகத்துடன், குதிரை லாயத்திற்கு சென்று பார்த்தார், அக்பர்.

எல்லா குதிரைகளையும் பிடித்து விட்டது; அனைத்தையும் விலை கொடுத்து வாங்கினார். மேலும், பல குதிரைகள் கொண்டு வர சொல்லி, முன் பணமாக, 1000 தங்க நாணயங்களை கொடுத்தனுப்பினார்.

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள்- 
''பீர்பால் எவ்வளவோ அறிவாளிகளை ஆதரித்து வருகிறோம். அப்படியிருந்தும் கூட, நாட்டில் முட்டாள்கள் அதிகம் இருப்பதாக அறிகிறேன். 

''நாளை, நாட்டில் உள்ள முட்டாள்களின் பட்டியல் தயாரித்து தர வேண்டும்; அவர்களை, எப்பாடுபட்டாவது திருத்தி விடலாம்...'' என்றார் அக்பர்.
அடுத்த நாள், முட்டாள்கள் பெயர் பட்டியலை, கொடுத்தார் பீர்பால். அதில், முதல் பெயராக, அக்பர் சக்கரவர்த்தி என்று இருந்தது.

இதை கண்ட அக்பர் கோபத்துடன், ''என்ன பீர்பல், என்னையும் ஒரு முட்டாளாக எழுதியிருக்கிறாயே... என்ன ஆணவம் உனக்கு... நான் என்ன முட்டாளா...'' என்று கேட்டார்.
''அரசே... தயவு செய்து சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும். தங்களை உண்மையிலேயே மிகச் சிறந்த அறிவாளியாகத்தான் மதித்து வந்தேன். சில நாட்களுக்கு முன், ஒரு காரியம் செய்தீர்கள். அதை பார்த்த பின் தான், உங்கள் பெயரையும், பட்டியலில் சேர்த்தேன்...'' 

''முட்டாள் தனமான செயலை செய்தேனா... வியப்பாக இருக்கிறதே... அது என்னவென்று சொல்...'' 
''அரசே... எங்கிருந்தோ ஒரு குதிரை வியாபாரி வந்தான். அவன் பெயர் தெரியாது; ஊர் தெரியாது; அவனை நம்பி, முன் பணமாக, 1000 தங்க நாணயங்களை, கொடுத்தனுப்பினீரே... இம்மாதிரி செயலை, மிகச் சாதாரண முட்டாள் கூட செய்ய மாட்டான்...'' 
''ஆமாம்... ஆமாம்... நீ சொல்வது உண்மை தான். அவன் பெயரையும், ஊரையும் அறியாமல், 1000 தங்க நாணயங்கள் கொடுத்தனுப்பியது, முட்டாள் தனமான செயல் தான். ஆனால், அவன் குதிரைகளை கொண்டு வந்து விட்டால்...'' 

''கொண்டு வந்தால் என்ன... உங்கள் பெயரை அடித்து விட்டு, அவன் பெயரை எழுதிவிட்டால் போகிறது...'' என்று சிரித்தபடியே பதிலளித்தார், பீர்பால்.
''ஆம்... இனி எவராயிருப்பினும், தீர விசாரிக்காமல், முன் பணம் தரமாட்டேன்...'' என்ற அக்பர், முட்டாள்கள் பற்றிய விவரங்களை அடியோடு மறந்து விட்டார்.

குட்டீஸ்... துணிச்சலுடன் உண்மையை, சொல்ல பழகுங்கள்.

5/12/18

நீதிக்கதை---சிந்தனை கதைகள்,

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

*நீதி*: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

4/12/18

நீதிக்கதை----சிந்தனை கதைகள்,

காளான்களின் ராணி!

நிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும ் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.

ஒரு நாள், அங்கே வந்த ஒருவர்  செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.

இவ்வளவு நன்மைகள் செய்யும் ராணிக்கு, சிறப்பான பரிசு தர வேண்டும் எனப் பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் காளான்களோடு ஆலோசனை நடத்தின.

‘‘நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.

பல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.

திரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.

அதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.

அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின.

29/11/18

நீதிக் கதை

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்

கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!
வையத்தியரும் சொன்னதில்லை!
மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!

ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக்
 காணவில்லை.
மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
 வையித்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள். வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை.
யாரம்மா நீ என்று கேட்டார்.
அதற்கு அந்த யுவதி நான்தான் உங்கள் மனைவி என்றாள்.

 வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.
என்ன நடந்தது என்று கேட்க மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
"  உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" என்றாள்

வைத்தியர் பதறி அடித்துபோய் " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த மனைவி "அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்.

 வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!

நீதி 1.பெண்டாட்டிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..

நீதி 2. அப்படி செஞ்சா பொண்டாட்டிக்கு தான் லாபம்..
நமக்கு எப்பவுமே அல்வா தான்.

சிந்தனை கதைகள்

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் - இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம்j விட்டுவிட்டு watsapp தான் குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதையை மிக சுவாரசியமாக   வாசித்துக்கொன்டு  நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடி  படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் **ஆள்!”
அடடா அடடா அடடடடடடடா  கக்கக்க போ

 மத்தவங்களுக்கு அனுப்பி மனசை தேத்திக்கங்க... நானும் அதை தான் செஞ்சேன்.

நீதிக்கதை

வனத்துக்கு வந்த வானவில்!

அந்த மலை பச்சையாக நீண்டு சென்றது. உச்சியில் நிமிர்த்திவைத்த ரம்பம்போலச் சிகரங்கள் இருந்தன. கீழே அடிவார வனம், அடர்ந்து விரிந்திருந்தது. தூரத்தில் தூறல் விழுந்து கொண்டிருந்தது.

 வெயிலும் மெள்ள மறையத் தொடங்கியிருந்தது. சிவகிரி மலைக்கும் அய்யனார் கோயில் மலைக்குமாக வானவில் பளீரெனப் பிரகாசித்தது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, நீலம், கருநீலம்,  பச்சை வண்ணங்கள் மேகங்களினூடே ஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. வனத்தில் விலங்குகள் வானவில்லை ரசித்துக்கொண்டிருந்தன.

யானை ஒன்று அடுத்த யானையை அழைத்தது. ``என்ன அண்ணா கூப்பிட்டீங்க?’’ என்றது.

``தம்பி, நாம் மலை உச்சிக்குப் போய் வானவில்லைத் தூக்கிவந்து, நமது வனத்துக்கு வாசல் வளைவாக வைப்போம். வனம் மேலும் அழகாகும்'' என்றது பெரிய யானை.

``நல்ல யோசனை அண்ணா. இப்பவே போகலாம்’’ என்றதும், இரண்டும் மலைமீது ஏறத்தொடங்கின. மேலே செல்லச் செல்ல, வானவில்லின் அழகு கம்பீரம் கூடிக்கொண்டே செல்வதைப் பார்த்து வியந்தன. அந்த வியப்பில் மேலே ஏறிய களைப்பே தெரியவில்லை.

கொஞ்ச நேரத்தில் வானவில்லை நெருங்கிவிட்டன. தங்கள் தும்பிக்கையால் பிடித்து இழுத்து, முதுகுகளில் தாங்கிக்கொண்டன. இரண்டு யானைகளுக்கும் அவ்வளவு ஊற்சாகம். பாட்டுப் பாடியவாறு தூக்கிவந்து, வனத்தின் நுழைவுவாயில் வளைவாக வைத்தன. அடுத்தடுத்த வனங்களிலிருந்த விலங்குகளும் வேடிக்கை பார்க்கக் கூடி, தமக்குள் பேசிக்கொண்டன. மற்ற வனங்களின் விலங்குகள், ``இது நம் வனத்தில் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா'' என்று பேசிக்கொண்டன.

அடுத்த வனத்தின் புலி ஒன்று வந்து, ``யானை அண்ணா! இயற்கையான வானவில் அனைவருக்கும் சொந்தமானது. இங்குள்ள மற்ற வனங்களுக்கும் நுழைவாசல் வளைவாக இது இருக்க வேண்டும். ஆகவே, ஒரு நாள் ஒரு வனம் என வைத்துக்கொள்வோம்’’ என்றது.

கரடி ஒன்று வந்தது. ``இல்லை... இல்லை... ஒரு வனத்துக்கு ஒரு வண்ணம் எனப் பிரித்துக்கொள்வோம்’’ என்றது.

``அப்படிச் செய்தால் அழகு குறைந்துவிடுமே’’ என்றது மான்.

``அப்புறம் என்னதான் செய்வது?’’ என்றது மிளா.

``இதைப் பல பகுதிகளாக உடைத்து, ஒவ்வொரு துண்டிலும் ஏழு வண்ணங்கள் வருமாறு எடுத்து, ஒவ்வொரு வனத்திலும் தொங்க விடலாம்’’என்றது நரி.

``மனிதர்கள் உடைப்பதற்கும் அறுப்பதற்கும் கத்தி, ஈட்டி, வாள், அரிவாள், வில் அம்பு, சுத்தியல் என்று வைத்திருப்பார்கள். அப்படி நம்மிடம் என்ன இருக்கு?’’ எனக் கேட்டது கழுகு.

உதட்டில் விரல்வைத்து யோசித்த புலி, ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்தது.

``நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்ற குரல் 
மேலிருந்து வர, அனைத்து விலங்குகளும் தலையைத் தூக்கிப் பார்த்தன. மரக்கிளையில் தொங்கியவாறு குரங்கு ஒன்று கீழே குதித்தது.

``நண்பர்களே... வானவில்லை உடைக்கவோ, சிதைக்கவோ, பிரிக்கவோ இயலாது. இது இயற்கையின் கொடை. மனிதர்கள், இயற்கையைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றுகிறார்கள். அழகுக்காக, பொழுதுபோக்குக்காக, மன நிம்மதிக்காக என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். 

அதே தவற்றை நாமும் செய்யலாமா? எந்த ஒன்றும் அதனதன் இடத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு. அதோடு, அப்படி இருப்பதுதான் இயற்கையின் சமநிலையையும் கட்டுக்குலையாமல் வைத்திருக்கும்'' என்றது.

``யாரடா இவன்? பெரிய ஞானி மாதிரி உபதேசிக்க வந்துவிட்டான்'' என்றபடி குரங்கை அடிக்கப் பாய்ந்தது சிறுத்தை.

சட்டென தடுத்த யானை, ``அவன் சொல்வது சரிதான். நான் இருக்கும் இந்தக் கானகத்தில் மனிதர்கள் நுழையும்போதும், மரங்களை வெட்டும்போதும் நாம் கோபப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம் அல்லவா? அப்படித்தான் இதுவும். 

சொல்பவன் சிறியவன் என்பதால் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏதோ ஆர்வத்தில் வானவில்லைக்கொண்டுவந்தது நாங்கள் செய்த தவறுதான். மீண்டும் வானிலேயே வைத்துவிடுகிறோம்’’ என்றது பெரிய யானை.

பெரிய யானை சொன்னதை மற்ற விலங்குகளும் ஆமோதித்தன. ``நாங்களும் வருகிறோம். எல்லோருமாக வானவில்லை வழியனுப்பி வைப்போம்'' என்றன.

அனைத்து விலங்குகளும் வானவில்லைத் தூக்கி யானைகளின் முதுகில் வைத்தன. ஆட்டம் பாட்டத்துடன் மலை உச்சிக்குச் சென்று வானில் வீச, மேகங்களுக்கு மத்தியில் மிதந்தவாறு சென்ற வானவில், இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தது. மேகங்களும் மகிழ்ச்சியாகி மழையைப் பொழிந்தன. சூரியனும் மகிழ்ச்சியாகி இதமாக வெளிச்சம் பரப்பியது.

அந்த மழைச்சாரலிலும் இதமான சூரிய வெளிச்சத்திலும் வானவில் இன்னும் இன்னும் அழகுடன் ஜொலித்தது.

நீதிக்கதை

பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.

""இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள்,'' என்றார்.

""அரசே! நீங்கள் சொன்னது போலவே நடந்து கொள்வேன்,'' என்றான் விவேகன்.

அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் விவேகன்.

பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.

தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான்.

பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.
ஒரு வாரம் சென்றது-

தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக்கிடப்பதைப் பார்த்தார்.

கோபம் கொண்ட அவர், ""நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லாக் கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்?'' என்று கத்தினார்.

""அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை,'' என்றான்.

இதைக் கேட்ட அரசர், "இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே...' என்று தலையில் அடித்துக் கொண்டார்.

"அப்பாடா! தப்பித்தோம்!' என, பெருமூச்சு விட்டான் விவேகன்
கதை கருத்து: இதனை இவன் செய்வான் என்று அறிந்து அதனை அவன் கண் விட வேண்டும்.