வனத்துக்கு வந்த வானவில்!
அந்த மலை பச்சையாக நீண்டு சென்றது. உச்சியில் நிமிர்த்திவைத்த ரம்பம்போலச் சிகரங்கள் இருந்தன. கீழே அடிவார வனம், அடர்ந்து விரிந்திருந்தது. தூரத்தில் தூறல் விழுந்து கொண்டிருந்தது.
வெயிலும் மெள்ள மறையத் தொடங்கியிருந்தது. சிவகிரி மலைக்கும் அய்யனார் கோயில் மலைக்குமாக வானவில் பளீரெனப் பிரகாசித்தது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, நீலம், கருநீலம், பச்சை வண்ணங்கள் மேகங்களினூடே ஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. வனத்தில் விலங்குகள் வானவில்லை ரசித்துக்கொண்டிருந்தன.
யானை ஒன்று அடுத்த யானையை அழைத்தது. ``என்ன அண்ணா கூப்பிட்டீங்க?’’ என்றது.
``தம்பி, நாம் மலை உச்சிக்குப் போய் வானவில்லைத் தூக்கிவந்து, நமது வனத்துக்கு வாசல் வளைவாக வைப்போம். வனம் மேலும் அழகாகும்'' என்றது பெரிய யானை.
``நல்ல யோசனை அண்ணா. இப்பவே போகலாம்’’ என்றதும், இரண்டும் மலைமீது ஏறத்தொடங்கின. மேலே செல்லச் செல்ல, வானவில்லின் அழகு கம்பீரம் கூடிக்கொண்டே செல்வதைப் பார்த்து வியந்தன. அந்த வியப்பில் மேலே ஏறிய களைப்பே தெரியவில்லை.
கொஞ்ச நேரத்தில் வானவில்லை நெருங்கிவிட்டன. தங்கள் தும்பிக்கையால் பிடித்து இழுத்து, முதுகுகளில் தாங்கிக்கொண்டன. இரண்டு யானைகளுக்கும் அவ்வளவு ஊற்சாகம். பாட்டுப் பாடியவாறு தூக்கிவந்து, வனத்தின் நுழைவுவாயில் வளைவாக வைத்தன. அடுத்தடுத்த வனங்களிலிருந்த விலங்குகளும் வேடிக்கை பார்க்கக் கூடி, தமக்குள் பேசிக்கொண்டன. மற்ற வனங்களின் விலங்குகள், ``இது நம் வனத்தில் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா'' என்று பேசிக்கொண்டன.
அடுத்த வனத்தின் புலி ஒன்று வந்து, ``யானை அண்ணா! இயற்கையான வானவில் அனைவருக்கும் சொந்தமானது. இங்குள்ள மற்ற வனங்களுக்கும் நுழைவாசல் வளைவாக இது இருக்க வேண்டும். ஆகவே, ஒரு நாள் ஒரு வனம் என வைத்துக்கொள்வோம்’’ என்றது.
கரடி ஒன்று வந்தது. ``இல்லை... இல்லை... ஒரு வனத்துக்கு ஒரு வண்ணம் எனப் பிரித்துக்கொள்வோம்’’ என்றது.
``அப்படிச் செய்தால் அழகு குறைந்துவிடுமே’’ என்றது மான்.
``அப்புறம் என்னதான் செய்வது?’’ என்றது மிளா.
``இதைப் பல பகுதிகளாக உடைத்து, ஒவ்வொரு துண்டிலும் ஏழு வண்ணங்கள் வருமாறு எடுத்து, ஒவ்வொரு வனத்திலும் தொங்க விடலாம்’’என்றது நரி.
``மனிதர்கள் உடைப்பதற்கும் அறுப்பதற்கும் கத்தி, ஈட்டி, வாள், அரிவாள், வில் அம்பு, சுத்தியல் என்று வைத்திருப்பார்கள். அப்படி நம்மிடம் என்ன இருக்கு?’’ எனக் கேட்டது கழுகு.
உதட்டில் விரல்வைத்து யோசித்த புலி, ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்தது.
``நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்ற குரல்
மேலிருந்து வர, அனைத்து விலங்குகளும் தலையைத் தூக்கிப் பார்த்தன. மரக்கிளையில் தொங்கியவாறு குரங்கு ஒன்று கீழே குதித்தது.
``நண்பர்களே... வானவில்லை உடைக்கவோ, சிதைக்கவோ, பிரிக்கவோ இயலாது. இது இயற்கையின் கொடை. மனிதர்கள், இயற்கையைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றுகிறார்கள். அழகுக்காக, பொழுதுபோக்குக்காக, மன நிம்மதிக்காக என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள்.
அதே தவற்றை நாமும் செய்யலாமா? எந்த ஒன்றும் அதனதன் இடத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு. அதோடு, அப்படி இருப்பதுதான் இயற்கையின் சமநிலையையும் கட்டுக்குலையாமல் வைத்திருக்கும்'' என்றது.
``யாரடா இவன்? பெரிய ஞானி மாதிரி உபதேசிக்க வந்துவிட்டான்'' என்றபடி குரங்கை அடிக்கப் பாய்ந்தது சிறுத்தை.
சட்டென தடுத்த யானை, ``அவன் சொல்வது சரிதான். நான் இருக்கும் இந்தக் கானகத்தில் மனிதர்கள் நுழையும்போதும், மரங்களை வெட்டும்போதும் நாம் கோபப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம் அல்லவா? அப்படித்தான் இதுவும்.
சொல்பவன் சிறியவன் என்பதால் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏதோ ஆர்வத்தில் வானவில்லைக்கொண்டுவந்தது நாங்கள் செய்த தவறுதான். மீண்டும் வானிலேயே வைத்துவிடுகிறோம்’’ என்றது பெரிய யானை.
பெரிய யானை சொன்னதை மற்ற விலங்குகளும் ஆமோதித்தன. ``நாங்களும் வருகிறோம். எல்லோருமாக வானவில்லை வழியனுப்பி வைப்போம்'' என்றன.
அனைத்து விலங்குகளும் வானவில்லைத் தூக்கி யானைகளின் முதுகில் வைத்தன. ஆட்டம் பாட்டத்துடன் மலை உச்சிக்குச் சென்று வானில் வீச, மேகங்களுக்கு மத்தியில் மிதந்தவாறு சென்ற வானவில், இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தது. மேகங்களும் மகிழ்ச்சியாகி மழையைப் பொழிந்தன. சூரியனும் மகிழ்ச்சியாகி இதமாக வெளிச்சம் பரப்பியது.
அந்த மழைச்சாரலிலும் இதமான சூரிய வெளிச்சத்திலும் வானவில் இன்னும் இன்னும் அழகுடன் ஜொலித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக