யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/17

புரட்சிக்கு வித்திடுமா புதிய வரைவு பாடத்திட்டம் : கல்வியாளர்கள் கணிப்பு என்ன?

'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்துறை வெளியிட்ட புதிய வரைவு பாடத் திட்டத்தில் 20 சதவீதம் வரையே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு கூறுவது போல் புதிய வரைவு பாடத்திட்டம் புரட்சியை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே' என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'கற்றலை படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், தேர்வு முறையில் மாற்றங்கள், அறிவியல் தொழில் நுட்பத்திற்குமுக்கியத்துவம், தமிழர்களின் தொன்மை வரலாறு, பண்பாடு,கலாசாரம் மற்றும் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என புறப்பட்ட புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழு அதற்கான வரைவு பாடத்திட்ட அறிக்கையைவெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வகை பாடங்களையே மீண்டும் மீண்டும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு வடிவமைத்த இந்த வரைவு அறிக்கை குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:

சாந்தி, முதல்வர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி,மதுரை: பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் அடிப்படையில் தான் வரைவு திட்டத்தில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 1- 5 வகுப்புகளுக்கு ஏற்கெனவே மெட்ரிக் பள்ளிகளில் இருந்த பாடங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.கணிதம் பாடத்தில் 'ஜாமெட்ரிக்' பகுதியில் கிராம மாணவர்களும் எளிதில் புரிந்து படம் வரையும் வகையில் எளிமைப்படுத்தப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.மூன்று- ஐந்தாம் வகுப்புகளின் சமூக அறிவியலில் சமச்சீர்பாடத் திட்ட பாடங்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. இப்பகுதி பாடங்களை மேலும் தரமானதாக மாற்றியிருக்கலாம். மேல்நிலை அறிவியல் பாடம், மாணவர்களை 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தரமானதாக உள்ளது.பத்தாம் வகுப்பு அறிவியலில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பகுதி சம அளவில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பிளஸ் 1 பாடங்கள் இனி மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.பிளஸ் 2 பயாலஜி பகுதியில், மாணவர்கள் படிக்க தயங்கும் 92 பக்கம் கொண்ட 'மனித உடற்கூறுகள்' பாடத்தை ஐந்து பாடங்களாக பிரித்து மாணவர்கள் எளிமையாக படிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் சுற்றுச்சூழல் பகுதியில் 'இ வேஸ்ட்' உட்பட புதிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1ல் 'வகைப்பாட்டியல்' (டாக்ஸ்சானமி)உட்பட புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆசிரியரின் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சரவணன், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வியாளர், மதுரை: புதிய பாடத் திட்டம் வடிவமைப்பு என்பது தேசிய கலைத் திட்டம் (என்.சி.எப்.,) 2005ம் ஆண்டு வகுத்துள்ள வழிகாட்டுதல் படிதான் மாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மத்திய பட்டியலில் கல்வித்துறைஇருப்பதே இதற்கு காரணம். மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்படாத வரை சுதந்திரமான முறையில் பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது சாத்தியம் இல்லை. நிபந்தனைக்கு உட்பட்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளன.புதிய வரைவு திட்டத்தில், பழைய பாடத் திட்டத்தில் இருந்து 20 சதவீதம் வரையே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக ரோபோட்டிக், நானோ சயின்ஸ், பாலியல் பேதங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து புதிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன.உதாரணமாக 'மொழித்திறன்' என்ற தலைப்பில் பேசுதல், எழுதுதல்... என உட்தலைப்புகள் உள்ளன. அவை தற்போதைய நிலையில் இருந்து எவ்வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது பாடப் புத்தகங்கள்வெளியான பின் தான் தெரியும். மதிப்பீடு செய்வதன் மூலம் மட்டுமே மாற்றங்களை உணர முடியும். இயற்கையில் குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் படைப்பாக்கல் திறன் அதிகம். ஆனால், விளையாட்டிற்கு என தனி கலைத் திட்டம் உருவாக்கப்படவில்லை.

சாமி சத்தியமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்: வரைவு பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆங்கில மொழி கற்பதற்கும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி.,- சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள பாடத்திட்டங்களை ஆய்வு செய்து தேவையான பகுதிகள்உள்ளீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.தேர்வு முறைகள் மற்றும் மதிப்பீடு முறைகள், அகில இந்திய போட்டித் தேர்வுகள், உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளில் நம் மாணவர்கள் எளிதாக வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுபாராட்டுக்குரியது. உடற்கல்வி மற்றும் கைத்தொழில், ஓவியம், நெசவு போன்ற தொழில்கல்வி, கணினி கல்விக்கான புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அறிவியலில் தற்போதைய தொழில் நுட்பத்திற்கேற்ப பல வகை பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் தரமான தாள்களில் பல வண்ணங்களில் அச்சிட்டு வழங்க வேண்டும்.

பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்: கலாசாரம், பண்முக தன்மை மற்றும் தமிழக சமய நல்லிணக்கம் பேணும் வகையில் இடம் பெற்ற மொழிப் பாடங்கள் வரவேற்கத்தக்கது. பயன்பாட்டு முறையிலான இலக்கணம் கற்பித்தல் என்ற புதிய விதிமுறை மூலம் மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தல் என்பது எளிதாகும். பாலினம் சமத்துவம், மாற்றுத்திறனாளிக்கு மாற்று கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறை, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இடம் பெற செய்த முயற்சிவரவேற்கத்தக்கது.மெய்நிகர் வகுப்பறை (வெர்ச்சுவல் கிளாஸ்), திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) முறையால் கருவிகள் மூலமான கற்பித்தல் முறையில் கற்றலை முழுமையாக்கும் முயற்சியாக உள்ளது. தேர்வு பயத்தை போக்கும் வகையில் மாணவர்களின் அனைத்து திறன்களையும் மதிப்பிட மாற்று மதிப்பீட்டு முறை அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.பள்ளி மதிப்பீட்டு முறைகளில் ஓபன் புக், ஓபன் ரிசோர்சஸ் எனும் திறந்த வெளி புத்தக முறை மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவியலில் நானோ தவிர புதிய வரவுகள் குறைவாக உள்ளன. தமிழ், சமூக அறிவியல் தவிர அனைத்து வரைவுகளும் ஆங்கிலத்தில் உள்ளன.

நாராயணசாமி, முன்னாள் பாடநுால் ஆசிரியர் (சமச்சீர் கல்வி), பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, காமாட்சிபுரம், தேனி: புதிய பாடத்திட்ட மாற்றத்திற்கான வரைவு அறிக்கையில், 'நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் அளவில் பாடங்கள் இணைக்கப்படும்' என தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மத்திய பாடத்திட்டத்துடன் தமிழக பாடத்திட்டம் ஒத்துவராத ஒன்றாக இருந்தது. தற்போது மத்திய பாடத்திட்டத்திற்குஇணையாக வேதியியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் கணித பாடங்களின் விபரங்கள் மாற்றியமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. குறிப்பாக வேதியியலில் 'சுற்றுச்சூழல் வேதியியல்' பாடங்களை புதிதாக இணைத்துள்ளனர்.இது மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உதவும். நடப்பு நிகழ்வுகளை பாடவாரியாக சேர்த்திருப்பதும் நன்மையே. தமிழில் ஏற்கனவே உள்ள இலக்கண, இலக்கியம் தவிர்த்து 'வாழ்வியல் நெறிகள்' சார்ந்து புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இளைய சமுதாயத்தினரிடையே தமிழ் மொழியியல் குறித்த புரிதல் மேம்படும். எனினும் பாடத்தின் முழுமையான வடிவம் வெளிவந்த பின்தான் விரிவான கருத்துக்கள் வெளிவரும்.

பெர்ஜின், இயற்பியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,சாயல்குடி: அறிவியல் பாடத்தை பொறுத்தவரை உணவு, பருப்பொருள், உயிரினங்கள், நகரும் பொருட்கள், பொருட்கள் செயல்படும் விதம், இயற்கை வளங்கள், இயற்கை நிகழ்வுகள் என ஏழு பிரிவாக பிரித்துள்ளனர். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இப்படித்தான் உள்ளது. என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தில் இருந்து முழுமையான பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.முன்பு கருத்துருவாக இருந்த பாடங்களை தற்போது 'அப்ளிகேஷன் ஓரியன்ட்டடு' முறையில் படிப்பதை நடைமுறை வாழ்க்கையோடு நேரடி தொடர்புபடுத்தியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் செயல்பாட்டை நேரடி வாழ்க்கையோடு தொடர்புபடுத்தியுள்ளனர்.என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தில் முன்பு விடுபட்ட பாடங்கள் எல்லாம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. எல்லா பாடங்களுக்கும் தகவல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் விதமாக உள்ளன. நிறைய பாடங்களை மொபைல் ஆப்ஸ், ஸ்மார்ட் கிளாஸ் உடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.இதன்மூலம் ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், வேறு ஆசிரியர் உதவியுடன் அல்லது உபகரணங்கள் உதவியுடன் ஸ்மார்ட் கிளாசில் பாடங்களை படிக்க முடியும். இதே போல் மாணவர் வர முடியாத நிலையில், மொபைல் ஆப்ஸ் மூலம் பாடங்களை படிக்கலாம்.கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்து, அங்கு இல்லாத சில பாடங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்

 பாஸ்கர், வித்யாகிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர், காரைக்குடி : சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது, புதிய வரைவு பாடத்திட்டம் தரமுள்ளதாகஉள்ளது. போட்டி தேர்வுகளுக்கான எல்லா வித அம்சங்களும் புகுத்தப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களும், அடிப்படை கல்வியுடன் கூடிய தொலை நோக்கு கல்வியும் சேர்த்து உள்ளது. எந்தவிதமான போட்டி தேர்வுகளாக இருந்தாலும், இந்த வரைவு பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை கற்பிப்பதற்கான கால நேரத்தில், அதற்கான தேர்வுகளுக்கு மாணவர்களை தயாரிப்பது ஆசிரியர்களின் பெரும் பங்காக உள்ளது. வரும் காலங்களில் மாணவர்கள் இந்திய அளவில் உள்ள எந்த தேர்வையும் எதிர்கொள்ள முடியும். ஒவ்வொரு பாடத்திற்கான வெயிட்டேஜ் (புளூபிரின்ட்) மதிப்பெண் கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு நடப்பதால் இரண்டு ஆண்டில் பாடத்திட்டத்தை முழுமையாக படிக்க வாய்ப்பு உள்ளது. மாணவரை முழு தகுதியாக்கும் பாடத்திட்டமாக இது உள்ளது. மதிப்பெண்ணின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தும் போது இதில் மாற்றம் வரலாம். கடந்த 2006-ம்ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தும்போது வரைவு பாடத்திட்டத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

முருகேசன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, வீரசோழன்: மாணவர்கள் சிந்தித்து செயல்பாட்டுடன் படிக்கும் வகையில் புதிய பாடத் திட்ட வரைவுகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொருபாடத்திற்கும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும்வகையில் உள்ளது. சூத்திரங்கள், வரைபடங்கள் எல்லாம் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிதாக கற்கும் முறையில் உள்ளது. பாடப் புத்தகங்களை இணையதளத்தில் பி.டி.எப்.,வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறையும் எளிதாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை அலைபேசியிலேயே கூட பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வெளியிடப்படும் புதிய பாடத் திட்ட வரைவு தேசிய அளவில் பிற பாடத் திட்டங்களுக்கு நிகராகவும், தமிழக மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக