யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download
சிந்தனை கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12/9/18

நீதிக்கதை :




மூளை இல்லாத கழுதை

(The Donkey Without Brain - Panchatantra Stories)


அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.

சிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது? சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே?”, என்று யோசித்தது.

யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.


 உடனே சிங்கம் நரியை வரவழைத்தது.

“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.

நரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.

“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா? அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.

நரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.

சிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.

சிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? எங்க போயிட்ட?” என்றது.

“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன்? என்ன விஷயம்?” என்று கழுதை கேட்டது.

“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.

“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும்? ஆளை விடு” என்றது கழுதை.

“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.


அப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.


 நரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.

கழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.

சிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா?” என்று சிங்கத்திடம் நரி கூறியது.

சிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.

நரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.

குளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது? உள்ளே ஒன்றுமே இல்லையே?” என்று சிங்கம் கேட்டது.

“என்ன மகாராஜா! உங்களுக்குத் தெரியாதா? கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.

சிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும்? பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.

“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா?” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.

நரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.

நீதிக்கதை



மௌனம் ஒரு மகாசக்தி

ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை. 'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமர்சித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.

நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்". வின்ஸ்டன் சர்ச்சில் "தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்குரியவர்களாவோமாக.

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.

எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.

பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்.

மௌனத்தை விட சிறப்பானதாக இருந்தால்
வார்த்தைகளை
பயன்படுத்துங்கள்.

நீதிக்கதை



பொய் சொல்லாதே

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.

 பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....

அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,

 இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....

 அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

 உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,

இல்லையேப்பா..,
நல்லா தானே இருக்கு" என்பார்.

உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

ஏங்க..
"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!

 "என் தினமும் இப்படி நல்லா இல்லைனு
சொல்லி டிராமா போடறீங்க"

 உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்.....,

"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!

ஆனாலும்...,
 "தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!

நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்.....,
 " தினம்
அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்"......!!

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு......,

அந்த பாட்டியிடம்,

"அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்".....!!

 "இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்"....?

 உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு....,

அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி....,

"கொடுத்து சாப்பிட வைக்கிறான்"......!!

இது எனக்கு தெரியாது என்று
நினைக்கிறான்...!!

"நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை"..!!

 மாறாக...
 " அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது"...
என்றார் அன்போடு....,

இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்
ஜீவன் இன்னும் இருக்கு.....!!

"அன்பை விதையுங்கள்"....!!

*"அதையே அறுவடை செய்வீர்கள்".......!!

மூட நம்பிக்கைகள், தீண்டாமை வேரறுப்போம்
அன்பினால் உலகத்தை நிரப்புவோம்

நீதிக்கதை :



நன்றி ஓடுகளே!
   


ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
   



  "முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
   


ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

நீதிக்கதை


முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.
அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.
"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.
தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.
அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.
மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.
"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.
"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.
சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.
இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்
பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.
"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.
"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.
அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது.
"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த
கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.
"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.
அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து
 விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.
"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.
உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.
"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''
"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.
"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.
"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.
சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.
"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.
"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.
நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.


நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

8/9/18

நீதிக்கதை :

மூன்று தலைகள்! - ஜென் கதைகள்


மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

Also Read: ஜென் குருவும் ஒன்பது திருடர்களும்

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

நீதிக்கதை



 ‘நான்தான் பலசாலி’ ‘நான்தான் பலசாலி’ என்று சொல்லி சிங்கம் எப்பொழுது பார்த்தாலும் காடு மேடெல்லாம் தற்பெருமை அடித்துக் கொண்டிருந்தது.

இந்த செயல் மற்ற விலங்குகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் சிங்கத்தின் தற்பெருமையை ஒருவரும் அடக்கமுடியாமல் அடங்கி ஒடுங்கி இருந்தனர்.

அந்தக் காட்டில் ஒரு குளம் இருந்தது. அதில் நட்சத்திர ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தை ஒட்டி ஒரு நாவல் மரம் இருந்தது. அதில் விச்சித்திரன் என்ற அணில் வாழ்ந்து வந்தது. நட்சத்திர ஆமையும், விசித்திரனும் உயிர்த் தோழர்களாகப் பழகி வந்தனர்.

சிங்கம், அணிலைப் பார்த்து ‘மூடனே நான் கீழே இருக்கிறேன். நீ மரியாதை இல்லாமல் மேலே இருப்பதா? நீ என்னைவிட பெரியவனா?  கீழே வந்து என்னை வணங்கி நில். இல்லை தோலை உரித்து கழுகுக்குப் போட்டு விடுவேன்.’ என்று அதட்டியது.

அணில் பயந்து போய்ச் சிங்கம் சொன்னது போல் நடந்தது.

சிங்கம் சென்றதும் குளத்தை விட்டு வெளியே வந்தது நட்சத்திர ஆமை.

தன் நண்பன் அவமானத்தால் தலை குனிந்து நிற்பதைக் கண்ட ஆமை, ‘வசித்திரா சிங்கம் சொன்னதற்கு ஏன் கவலைப்பட்டுத் தலைகுனிந்து நிற்கறே? உலகில் வலிமை உள்ளவர்கள் வலிமை அற்றவர்களை அடக்கி ஆள்வதுதானே வழக்கம்? யானையிடம் இப்படி அதனால் சொல்ல முடியுமா? என்று ஆறுதல் சொன்னது.

நண்பா சிறியவர்  பெரியவர் என்றாலும் தன்மானம் பொதுதானே? தேவை இல்லாமல் இன்னொருவருக்கு அடங்கி ‘சலாம்’ போடுவது கேவலம் இல்லையா? அவரவர் படைப்புக்கும், வேற்றுமைக்கும் ஏற்றபடி அவரவர் பலசாலிகள்தானே? என்று கொதித்தது.

‘நன்பா உன் ஆதங்கம் புரிகிறது. இதன் கொட்டத்தை அடக்கத்தான் வேண்டும். என் அம்மா இதன் கெடுபிடிக்கு அடங்க மறுத்ததற்காக அதை கொன்றுவிட்டது, எனக்கும் இதைப் பழிக்குப்பழி வாங்க தான் ஆசை. அதை எப்படி செய்யலாம்?’

அப்போது அங்கே ஒரு கட்டெறும்பு வந்தது.

‘நண்பர்களே! நீங்கள் பேசியதைக் கேட்டு நானும் கோபம் கொண்டேன். சிங்கத்தின் கொட்டத்தை நான் அடக்குகிறேன்.

அதோ அந்த ஆலமரத்தடியில் தானே சிங்கம் உறங்கும். நாளை அங்கு வந்துவிடுங்கள். ‘யார் பலசாலி’ என்று நிரூபிக்கிறேன்’ என்று ஆலமரத்தில் சென்று தங்கியது.

வழக்கம்போல சிங்கம்  ஆலமரத்தடியில் இளைப்பாறியது.

ஆமை கல்லுக்கடியில் மறைந்துகொண்டது. அணில் புதருக்குள் ஒளிந்துகொண்டது.

எறும்பு சிங்கத்தின் காதுக்குள் மெதுவாகச் சென்று நுழைந்து கொண்டு குடைந்தும் கடித்தும் இம்சைப்படுத்தியது.

சிங்கம் வலி தாங்க முடியாமல், ‘அய்யோ... அய்யோ... வலி உயிர்போகுதே. காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலறியது.

‘நீ பெரிய பலசாலிதானே, முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளவும்’
என்று சிரித்தது எறும்பு.

அணிலும், ஆமையும் தைரியமாக வெளியே வந்து சிரித்துக் கூத்தாடின.

ஒரு கட்டெறும்பிடம் தன்பலம் பலிக்காமல் போகவே, சிங்கம் தன் ஆணவத்தை கைவிட்டது.

ஆமையும், அணிலும், சிங்கத்தை விட்டுவிடும்படி கூறவே, எறும்பு சிங்கத்தின் காதுக்குள் இருந்து வெளியே வந்தது.

அன்றில் இருந்து சிங்கம் தான் மட்டும் பலசாலி என்று சொல்வதை விட்டுவிட்டது.

5/11/17

நேரத்தின் முக்கியத்துவம் குறித்து கதை

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

2/12/16

சிந்தனை கதைகள்

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.
அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.
சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை.
இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.
இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது.
சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.
நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.
இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
---
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம்,
அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.
"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்". --