யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?----உடல்நலம் மருத்துவம்,




சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை...!
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...
14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

கைகண்டஅனுபவமருத்துவம்!----உடல்நலம் மருத்துவம்,




கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-

கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!

நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.

அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."

சில எளிய மருத்துவம்: !!!

வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.

கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.

டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.

தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.

வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.

ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை அழவான இலைஎன்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.

கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.

கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.

குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.

தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.

ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.

வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.

தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.

வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.

காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.

கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.

காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.

பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.

வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

நாட்டுப்புற மருந்துகள்

நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.

தொப்பையை குறைக்க ஒரு அற்புதமான இயற்கை மருந்து ஓமம்!!
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

மகளிர் மருத்துவம்
********

திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

ஆடவர் மருத்துவம்
*******

ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :

1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.

2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.

3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.

4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.

5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.

குழந்தையர் மருத்துவம்
**********

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.

2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.

3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.

4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.

5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

பொது மருத்துவம்
*******

ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :

1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.

2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.

3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.

4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.

5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.

கால்நடை மருத்துவம்
*********

கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.

1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.

2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.

3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது.
உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது.
உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.

TNPSC - ஏழு தேர்வுகளுக்கான 'ரிசல்ட்' தேதி அறிவிப்பு :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், போட்டி தேர்வுகளின் முடிவுகளை, திட்டமிட்ட தேதியில் வெளியிட, முடிவு செய்யப்பட்டது. குரூப் - 1 பதவியில், 85 பணியிடங்களுக்கான தேர்வின் முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாகிறது. வனத்துறை காவலர் பணி தேர்வு, குரூப் - 4 பதவியில், 12 ஆயிரம் காலியிடங்களுக்கான தேர்வு உட்பட, ஏழு தேர்வுகளுக்கான முடிவு தேதி, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.தொழில் மற்றும் வணிக துறையில், விலை நிர்ணய உதவியாளர் என்ற, 'காஸ்ட் அசிஸ்டென்ட்' பதவியில், ஒரு காலியிடத்துக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.மார்ச், 2ல் நடக்கும் இந்த தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. ஜன., 2 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட்' தேர்வுக்கான பதிவு நாளை மறுநாள் நிறைவு :

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, நவ., 1ல் விண்ணப்ப பதிவு துவங்கியது. ஆன்லைன் வழியில், நவ., 30ல் விண்ணப்ப பதிவு முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பொது பிரிவினரில், 25 வயதுக்கு அதிகமானவர்களும், நீட் தேர்வில் பங்கேற்கலாம் என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அந்த கூடுதல் அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது.மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுமாறு, மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிட தேர்வு- விடைக் குறிப்புகள் வெளியீடு :

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் நடத்தப்பட்ட அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றின் மீதான ஆட்சேபனைகளை தேர்வர்கள் வரும் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஆர்.பி. சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பு-
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான தற்காலிக தேர்வுக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் வரும்10- ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனி படிவத்தில் உரிய ஆதாரங்களுடன் அனுப்பவேண்டும்

ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்:

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது.
இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. பள்ளிக்கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை!

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. பள்ளிக்கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை! மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.  மழை பெய்தால் உடனே பள்ளிக்கு விடுமுறை விடக்கூடாது என்று தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் , மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.  மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக புதிய விதிகளை அமல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் திறமையை வளர்த்தெடுக்க புதிய திட்டம்: பள்ளிக் கல்வித்துறை அமல் :

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளி களில் மாணவர்களின் திறமையை வளர்த்தெடுக்க புதிய செயல் திட்டத்தை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தியிருக்கிறது.
தேசிய கலைத்திட்ட வடி வமைப்பு- 2005 கல்வியை தேர்வுச் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதன் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை வகுப் பறையில் மட்டும் அடக்கிவிடாமல், அதன் வேறு பரிமாணங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.குழு மனப்பான்மை, எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன், சமுதாயத்திலிருந்து தனக்கு வேண்டியதை பெறும் திறன், அறிவியல் பூர்வமாக முடி வெடுக்கும் ஆற்றல், சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்து அறிதல், பகுத்தாய்ந்து முடிவெடுத்தல், பிரச்சினைகளை அறிவு பூர்வ மாக அணுகுதல் போன்ற திறன்களை மாணவர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை இடைநிலை கல்வியில் பல்வேறு செயல் திட்டங்களை வடி வமைத்துள்ளது.
புதிய திட்டம் வடிவமைப்பு
தற்போது , வகுப்பறை பங்கேற்றலை உயர்த்துதல் (IMPART- Improving Participation) என்ற செயல் திட்டத்தை தமிழ கத்தில் அனைத்து மாவட்டங்க ளிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் செயல்படுத்தியிருக்கிறது. சுற்றுப்புறம், மக்களின் வாழ்க்கை முறை, நில அமைப்புகள், இயற்கை வளங்கள், பண்பாட்டுச் சின்னங்கள், சமுதாய அமைப்பு கள், மொழி, கலாச்சாரம், வளங்க ளின் பயன்பாட்டு முறைகள் போன்றவற்றை மாணவ, மாணவி யர் கூர்ந்து ஆராய்ந்து அறியும் வண்ணம் கற்பித்தல் முறைகள் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எம்.பில், பிஎச்டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் மாண வர்கள் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிப்பதுபோல், பள்ளிப் பரு வத்திலேயே மாணவர்களை ஆய்வுதளத்தில் ஈடுபடுத்தவும், அவர்களிடம் உள்ள திறமைகளை வளர்த்தெடுக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (RMSA) மூலம் கடந்த 2016-2017-ம் கல்வி யாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னோடி சிறப்பு செயல்திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து 2017-18-ம் கல்வியாண்டில் இத்திட்டம் கல்வியில் பின்தங்கிய நாகப்பட்டி னம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து நடப்பு கல்வியாண்டில் (2018-19) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல் திட்டம் (IMPART) நடை முறைப்படுத்தப்பட்டி ருக்கிறது.

செயல்வழி திட்ட கற்றல்
செயல் திட்ட வழி கற்றல் எனப்படும் (Project Based Learning) முறையை அடிப்படையாக கொண்ட இத்திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பள்ளிகளை தேர்வு செய்துள்ள னர். ஒவ்வொரு பள்ளிக்கும் 5 ஆய்வு கள் வீதம் 500 ஆய்வுகள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மேற்கொள்ளப்பட வுள்ளன. 9-ம் வகுப்பு மாணவர்கள் இந்த செயல்வழி திட்ட முறை கற்றலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆய்விலும் 4 மாணவர்கள் வீதம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். இதற்காக 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வழிகாட்டியாக செயல்படுவார்கள்.
மாணவ, மாணவியர் மேற்கொள்ளும் ஆய்வுக்குப்பின் வட்டார அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்டு, அவை மாவட்ட அளவில் சமர்ப்பிக்கப்படும். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கவும் திட்ட மிடப்பட்டிருக்கிறது.
இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்கும்
மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் த.தனசிங் கூறியதாவது:
இத்திட்டம் தொடர்பாக இதுவரை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் 100 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் செயல் திட்டங்களை எவ்வாறு வடிவமைப்பது?, மாணவர் குழுக்களை எவ்வாறு தேர்வு செய்வது?, செயல் திட்டத்தின் படிநிலைகள், செயல் திட்டத்தை செயல்படுத்துதல், தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வை செயல்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த வாரத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 ஆசிரியர்கள் வீதம் 400 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து மாணவர் குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து தரப்பு மாணவர்களையும் கற்றல் நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்து, பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்க இச்செயல் திட்டம் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்றார்.
- அ.அருள்தாசன்

ஜாக்டோ ஜியோ போராட்டம் 10ஆம் தேதி மதுரையில் முடிவு :-மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி!

வருவாய் மாவட்ட அளவிலான புதிர் போட்டியில் முதலிடம் பிடித்த எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப்பள்ளி அணியினருக்கு பாராட்டு.

வருவாய் மாவட்ட அளவிலான புதிர் போட்டியில் முதலிடம் பிடித்த எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப்பள்ளி அணியினருக்கு பாராட்டு.

புதுக்கோட்டை,டிச.4: புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளிக் கூட வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.

இதில் கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளான செம்பாட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி,அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி,எண்ணை ஆதிதிராவின நல அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டன.அவற்றுள் எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப் பள்ளி அணியினர் முதலிடத்தையும்,அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.


போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன் வாழ்த்திப் பேசினார்.போட்டியின் நடுவர்களாக கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் சரவணப்பெருமாள்,காயாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

போட்டிகளை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜீ ஒருங்கிணைத்தார்..போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்ச்செல்வம்,அறந்தாங்கி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.