சென்னை:'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு பை வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு பையில், அரிசி, சர்க்கரை, கரும்புடன், 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகையின் போது, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பாசிப்பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன. அடுத்து, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.கடந்த, 2015ல், ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இல்லாததால், பொங்கல் பரிசு வழங்கவில்லை. இந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் வர உள்ளதால், பொங்கல் பரிசு வழங்கப்படும் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி, நேற்று சிறப்பு பொங்கல் பரிசு அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அவரது அறிக்கை:பொங்கல் திருநாளை கொண்டாட, அரிசிக்கான ரேஷன் கார்டு உடையவர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்பங்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.இப்பரிசுதொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
2 அடி கரும்பு: ஏகப்பட்ட குழப்பம்:
இதுவரை வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு இடம் பெற்றதில்லை; அரிசி, சர்க்கரை போன்றவை தான் இடம்பெற்றிருந்தன. இம்முறை, முதன் முறையாக, 'பொங்கல் பரிசு தொகுப்புடன், 2 அடி நீள கரும்பு துண்டு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார்; இது, பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எத்தகைய குழப்பம்:
* ஒரு குடும்பத்துக்கு ஒரு கரும்பு வழங்குவது, ஓரளவு எளிதாக இருந்திருக்கும். ஆனால், 2 அடி நீள கரும்பு துண்டு என கூறியிருப்பதால், ஒரு கரும்பை எத்தனைதுண்டாக்குவது?* கரும்பு துண்டுகளாக்கப்பட்டு ரேஷன் கடைக்கு வழங்கப்படுமா?* முழு கரும்பை வழங்கி, வெட்டி கொடுக்க உத்தரவிடுவரா?* 'நுனிக்கரும்பு வேண்டாம்; அடிக்கரும்பு வேண்டும்' என கேட்டால் என்ன செய்வது?என்பன போன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.