யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/16

தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி

'சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ராஜேஷ் லக்கானி பேசியதாவது: நேர்மையான தேர்தல் நடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடு புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கவும், படங்கள் எடுத்து அனுப்பவும், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' வசதி அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள், என் அலைபேசி எண்ணுக்கே, 'வாட்ஸ் ஆப்'பில் புகார்அனுப்பலாம். ஆனால், தவறான தகவல் தர வேண்டாம்.

தேர்தல் நாளில் வீட்டிலிருந்து, 'டிவி' பார்த்து கொண்டிருக்காமல், முதலில் ஓட்டை பதிவு செய்யுங்கள். மாணவியர், இளைஞர்கள் அனைவரும், தேர்தல் துறையின் துாதராக, தலைமை தேர்தல் அதிகாரியாக நினைத்து, நேர்மையான தேர்தல், ஓட்டு போடுவதன் அவசியத்தை, குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

'ஊழல் கரங்களுக்கு ஓட்டு வேண்டாம்':

நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசியதாவது:நான், 2011 தேர்தலில் மதுரை கலெக்டராக இருந்த போது, 'பணநாயகம்வீழ்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகள் கூறினர். அதை மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து, பகலில் வாக்காளர்களுக்கு போதனையும், இரவில் வாகன சோதனையும் மேற்கொண்டோம். நேர்மையான தேர்தலை நடத்தினோம்.அதேபோல், இந்த தேர்தலும் கண்ணியமாக நடக்கும் என நம்புகிறேன். ஊழல் கரங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.நீங்கள் பொறுப்பாக ஓட்டு போட்டால் நாட்டில் புரட்சி நடக்கும். பணத்தை வாங்கி ஓட்டு போடாதீர்கள்.மாணவர்கள் மூலம், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கலாம். நீங்கள் நேர்மையாக இருக்க, உங்கள் குடும்பம் நேர்மையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் கண்ணியமான ஓட்டின் மூலம், வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்; 

விவசாயி தற்கொலை செய்ய மாட்டார்கள்; மன்னர்களை மண்டியிட வைக்கும் ஜனநாயக கடமை உங்களிடம் உள்ளது. நீங்கள் இந்த தேசத்தை நேசிப்பதை உறுதிப்படுத்த, ஊழலற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே, மழை, வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு, ஜன., 11ல் துவங்கும் நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வராமல் மாணவர்கள் தவித்தனர்.
செய்முறை தேர்வு தேதி தெரிந்தால் தான், 'ரிவிஷன்' தேர்வுகளை திட்டமிட முடியும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்பு 
அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறு 
பயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல் TNPTF கண்டனம்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த சில காலங்களாகவே ஆசிரியர் சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. வகுப்பறைக்குள்ளே ஆசிரியர்கள் கொலை செய்யபடுவதிலிருந்து பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி வணிக பொருளாக்கப்பட்டு கல்வியின் மகத்துவத்தை சின்னபின்னமாக்கிய  அரசுகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இலாப வேட்கை கொண்ட கார்ப்பரேட்டுகள் கல்வி நிறுவனங்களை தங்களின் மூலதனம் பெருகுவதை இலக்காக கொண்டதன் விளைவு, இந்த நாட்டின் எதிர்காலமாக திகழ வேண்டிய மாணவர் சமுதாயம் மாயை உலகின் பின்னால் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆசிரியர் சமுதாயம் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் பேராசியர் சிவராமன் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் சில சமூக விரோதிகளால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்ட ரீதியான தண்டனை பெற்றுத் தர வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் ஆசிரியர் சமுதாயம் அச்ச உணர்வின்றி பாதுகாப்பாக பணியாற்ற உரிய சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

16549 பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உதவிட புதிய அரசாணை வெளியிட கோரி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு

துணைவேந்தர் தேர்வு குழு அமைப்பு

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், ஓய்வுபெற்ற ஊழல் ஒழிப்பு மற்றும் வளர்ச்சி கமிஷனர் வேத நாராயணன், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக, அறிவியல் மற்றும் மனித நேய துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், சென்னை பல்கலைக் கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான, மூன்று பேரை தேர்வு செய்து, அவர்கள் குறித்த விபரங்களை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும்; அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு

ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. இதில், 2015-16 கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த மே மாதத்தில் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. இவற்றை அந்தந்த பயிற்சி பள்ளிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். பிரைவேட் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு






8/1/16

மத்திய அரசு முடிவு: ஜூன் மாதத்துக்கு பின்னர் 7வது ஊதியக்குழு சம்பளம்

வரும் ஜூன் மாதத்துக்கு பின்னர்தான் 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்படும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதிக்காலத்தில் 7வது ஊதியக்குழு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி தனது அறிக்கையை கடந்த டிசம்பரில் அரசிடம் தாக்கல் செய்தது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும் என கூறப்பட்டது. 


இந்த சம்பள உயர்வு ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும். தாமதமாக அமல்படுத்தப்பட்டால் அதிக நிலுவை தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது மத்திய அரசுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதனால் வெகுவிரைவில் 7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஊதியக் கமிஷன் பரிந்துரை குறித்த தனது ஒப்புதலை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி மாதம்தான் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையே, தமிழகம், புதுவை, கேரளா உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடுவில் வருகிறது. இந்த காரணங்களால் ஜூனுக்கு முன்னதாக 7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி புதிய சம்பளம் கிடைக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

திறனற்றவர்கள்’ என்று யாருமில்லை!

நாம் யாருமே திறமை குறைந்தவர்கள் இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் திறமை உள்ளது. அத்திறமை முழுமையாக வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடு உள்ளது. ஆகவே, ‘திறமையை முழுமையாக வெளிப்படுத்துபவர்கள்’, ‘முழுமையாக வெளிப்படுத்தாதவர்கள்’ என்று தான் பிரித்துக்கூற வேண்டுமே தவிர, ‘திறன் உள்ளவர்கள்’, ‘திறனற்றவர்கள்’ என்றல்ல!


நமது முழு திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் மட்டுமே, வெற்றியாளராக பரிணமிக்க முடியும்! வெளிப்படுத்துவதில் தான் சாதனையும் அடங்கி உள்ளது!

சாதனையாளர்களின் வாழ்க்கையை உற்று கவனியுங்கள். அனைவரும் தனது திறமையை முழுமையாக பயன்படுத்தியவர்கள். எந்த ஒரு செயலையும் பாதியில் அப்படியே விட்டுவிட்டு கடந்து வந்தவர்கள் அல்ல. நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை தனது முதுமையிலும் தினமும் நாதஸ்வரம் பயிற்சி எடுத்து கொண்டவர்.

அதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ஒருநாள் பயிற்சி செய்யாமல் கச்சேரிக்கு போனால் வாசிக்கும் சிறுசிறு குறைகள் கூட தனக்கே தெரியும்.  இருநாட்கள் பயிற்சி எடுக்காமல் போனால் என்னை போன்ற வித்துவான்களுக்கு குறைகள் தெரியும். மூன்று நாட்களுக்கு பயிற்சி எடுக்காமல் போனால் விஷயம் தெரிந்த ரசிகர்களுக்கு குறை தானாக தெரிந்துவிடும். எனவே, தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்”, என்றார்.

மாநிலத்தின் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களிடம் கேட்டுபாருங்கள், அவர்கள் தினமும் படிப்பதுடன் , தொடர்ந்து வினாவுக்கான விடையை எழுதிப்பார்த்ததாக கூறுவார்கள். தொடர்ந்து பல தேர்வுகளை எழுதி பிழை திருத்திப்பார்த்தே அனைத்து பாடங்களிலும் 100 சதவீதம் பெற்றோம் என்பார்கள்.  மருத்துவராக வேண்டும், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும், ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது; தினமும் படிக்க வேண்டும்; தினமும் எழுதிபார்க்க வேண்டும்!

ஒட்ட பந்தயத்தில் முதலாவதாக வர வேண்டுமென்று நினைப்பவன் நன்றாக ஓடினால் பயனில்லை. முழு திறமையும் வெளிப்படுத்தி ஓடினால் மட்டுமே வெற்றி கோட்டையை முதலில் தொட முடியும். ‘நன்றாக ஒடுவேன், நான் கிட்டதட்ட ஜெயித்து விடுவேன்’ என்ற நினைப்புடன் ஒடினால், எப்போதும் போல் தான் ஓட முடியும், அது வெற்றியை பெற்று தந்துவிடாது.

நம் மனது எதை முடிவெடுக்கின்றதோ அதுவே நமக்கு கிடைக்கும். நாம் வைத்திருக்கும் பாத்திரத்தின் அளவு மட்டுமே மழை நீரை சேகரிக்க முடியும். மனதை முழு ஈடுப்பாட்டுடன் இணைத்து முழுதிறனும் வெளிப்படும்படி செயல்படுங்கள்... வெற்றியாளராக உருவாகுங்கள். முழுதிறனுடன் ஈடுபடுதல் என்பது நம்மை வெற்றியாளராக மட்டும் அல்ல; விரைவில் சாதனையாளராகவும் மாற்றிவிடும்!

-க.சரவணன், மதுரை.

ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவு!

போலிச்சான்றிதழ் விவகாரத்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் சான்றிதழ்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றை சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆசிரியர் பணியிடங்களில், போலிச்சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போலிச்சான்றிதழ் தயாரித்து கொடுத்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். இவரிடம் பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து போலிச்சான்றிதழ் பெற்று, பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென ஒன்றியம் வாரியாக சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்பித்து, சரிபார்த்த பின், நகல் சான்றுகளை சுய சான்றொப்பம் இட்டு ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று நாளில் இப்பணியை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதில் சான்றிதழ்களை ஒப்படைக்காத ஆசிரியர்களின் பட்டியலையும் தயாரித்து, அதன் உண்மை தன்மை குறித்த நிலவரத்தையும், அதற்கான அறிக்கையையும் ஒரு வார காலத்துக்குள் சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வுத்தரவுகளை, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி பிறப்பித்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்வுக்கட்டணம் ஜன., 20க்குள் செலுத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு தேர்வுக்கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து, ஜன., 20ம் தேதிக்குள் வசூலித்து செலுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. இவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக, 115 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்கள், பிறமொழி எடுத்து படிப்பவர்களில், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஆகியோருக்கும், பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம், 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மற்ற மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணத்தை, ஜன., 20ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. ஜன., 21ம் தேதிக்குள், கட்டண விலக்கு பெற்ற மாணவர்களின் பட்டியல், கட்டணம் செலுத்திய மாணவர்களின் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை கல்வித்துறை அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை பணி நியமனத்திற்கு தடை!

அண்ணா பல்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தலாம். பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மண்டல அண்ணா பல்கலை விரிவுரையாளர் பிரபாகர் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையின் 13 உறுப்புக் கல்லுாரிகள், 3 மண்டல கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப, பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் இனசுழற்சி முறை சரியாக பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீடு முறையில் உள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. எங்களைப் போல் பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பதிவாளர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பிரபாகர் மனு செய்திருந்தார்.


திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், அண்ணா பல்கலை பதிவாளர் 102 பேராசிரியர், 178 இணை பேராசிரியர் பணியிடங்களை விதிகளுக்குப் புறம்பாக, நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார். அதை ரத்து செய்து 75 சதவீதம் பதவி உயர்வு, 25 சதவீதம் நேரடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.

நீதிபதி டி.ஹரிபரந்தாமன், நேர்காணல் நடத்தலாம். ஆனால், பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. பின்னடைவு பணியிடங்கள் எவ்வளவு என்பதை ஜன.,18 ல் பல்கலை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும், என்றார். உயர்கல்வித்துறை செயலர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கறிஞர்கள் லஜபதிராய், அருள்வடிவேல், பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜராயினர்.

சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் 100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் ஓட்டம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மேலும் பல போலி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது.


கடந்த 4ம் தேதி இந்த 5 மாவட்டங்களில் 40 ஆசிரியர்கள் திடீரென விடுப்பு எடுத்தனர். நேற்று முன் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் பணிக்கு வரவில்லை. இந்த விவகாரம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர். பலர் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சட்டரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், கடந்த 15-20 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர் தவிர, போச்சம்பள்ளி அருள்சுந்தரம் என்பவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை  இருந்து வரும் தகவல் அடிப்படையில் போலி ஆசிரியர்களை பிடிக்க கூடுதல் தனிப்படைகள் அமைக்கவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசிக்கின்றனர்.

வேலை வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊர்வலம். 

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கக்கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து லஸ் கார்டன் வரை ஊர்வலமாக சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். 

ஊர்வலத்தின் போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை கொடுங் கள், எதிர்கால பயம் எங்களை வாட்டி வதைக்கிறது என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், தகுதித்தேர்வில் ஒவ்வொருவரும் எடுத்த மதிப்பெண்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயகவிதா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 2 வருடங்களாக தவித்து வரும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் இது கண்டிப்பாக நடக்கும். அவரை சந்திக்க எங்களுக்கு ஒரு நிமிடம் வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பயம் கலந்த வாழ்வை மீட்டெடுக்க, எங்களுக்கு நம்பிக்கையும், எங்கள் தலைமுறை சிறக்க நியாயமும் வழங்க வேண்டும்.

டி.ஆர்.பி.,அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்

வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் பயிற்சிகளால், ஆசிரியர்கள் தவிப்பு!

தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும், 11ம் தேதி துவங்குகிறது.இதனால், மழை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால், கிடப்புக்குப் போன பாடங்களை விரைந்து முடிக்க, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஆசிரியர்களுக்கான பாடம் எடுக்கும் பயிற்சியை, ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு, நேற்று முதல், 9ம் தேதி வரை, மூன்று நாட்கள், மாவட்ட ரீதியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும், பள்ளி வேலை நாட்கள் என்பதால், ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்

சத்துணவு ஊழியர் போராட்ட அறிவிப்பு 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து

சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை நிர்வாகம் ரத்து செய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர். சிலருக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட ஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

பின் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில், சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கை டிச., 28 க்குள் ரத்து செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. காலக்கெடு முடிந்தும் நடவடிக்கை இல்லை. ஜன., 8 ல் திருப்பூரில் நடக்கும் மாநில மாநாட்டிற்குள் நடவடிக்கை இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்படும் என, சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து முதற்கட்டமாக 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.சத்துணவு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.முருகேசன் கூறியதாவது: ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து செய்ததை வரவேற்கிறோம். ஜன., 8 க்குள் 4 பேரின் 'சஸ்பெண்ட்' உத்தரவும், 17 பேரின் இடமாறுதலும் ரத்து செய்யப்படும் என, நிர்வாகம் உறுதியளித்துள்ளது. நிறைவேற்றாவிட்டால் அறிவித்தப்படி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

11 ஆயிரம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்!'

கோரிக்கைகளை வலியுறுத்தி, 11 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், நேற்று, ஒரு நாள், ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டன; மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழக அரசின் வருவாய்த்துறை அலுவலர்கள், நான்கு ஆண்டுகளாக, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அரசுடன் பலமுறை பேச்சு நடத்தியும், ஏற்கப்பட்ட கோரிக்கைகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த வருவாய்த்துறை அலுவலர்கள், நேற்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை நடத்தினர்.

'தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் பேர் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் பங்கேற்பர்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் வெள்ள நிவாரண பணிகள் காரணமாக, வருவாய் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.பிற மாவட்டங்களில், வருவாய்த்துறை பணிகள் முடங்கின. கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களுக்கு வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோரிக்கைகள்
* காலியாக உள்ள, 7,000 பணி இடங்களை நிரப்ப வேண்டும்
* தாசில்தார்களுக்கு ஏற்கனவே வழங்கபட்ட தனி ஊதியமான, 1,000 ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும்
* தாசில்தார் அலுவலகங்களில், இரவு நேர காவலரை நியமிக்க வேண்டும்
* அலுவலக உதவியாளர், 'ரிக்கார்டு' கிளார்க்குகளுக்கு, 400 ரூபாய் தர ஊதியம் வேண்டும்
* தேர்தல் பிரிவு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
போராட்ட பாதிப்புகள்
* வாக்காளர் பட்டியல் மறு ஆய்வுப்பணி முடக்கம்
* தேர்தல் தொடர்பாக பொறுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் ரத்து
* பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி முடக்கம்
* சான்றிதழ்கள் வழங்கும் பணி முடக்கம்
* இ - சேவை மையங்களில் பணிகள் பாதிப்பு.

ஜிலேபி, சிப்ஸ்' சாப்பிட மாணவர்களுக்கு தடை!: பாயசம், அல்வாவுக்கு அனுமதி

பள்ளி கேன்டீன்களில், 'ஜிலேபி, சிப்ஸ்' போன்ற உணவு பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது; பாயசம், அல்வாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில், கேன்டீன் உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர் உடல்நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி கேன்டீன்களில், மாணவர் உடல்நலனுக்கு தீங்கான உணவுப் பொருட்கள் விற்கப்படுவதும், வீடுகளிலும் அதே போன்ற பொருட்களை, பெற்றோர் வாங்கித் தருவதும் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும், உணவுப் பொருள் குறித்த பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் விவரம்:

தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்சிப்ஸ், உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற வறுத்த தின்பண்டங்கள், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமூன், கலாகந்த், நுாடுல்ஸ், பிட்சா, பர்கர், டிக்கா அனைத்து வகை சூயிங்கம் மற்றும் 'கேன்டீஸ்' எனப்படும் இனிப்பு மிட்டாய்கள்.

சர்க்கரை, 30 சதவீதத்துக்கு மேல் சேர்க்கப்படும் ஜிலேபி, பூந்தி, இமார்தி, சாக்லேட் மற்றும் கருப்பு சாக்லேட், 'பேக்' செய்யப்பட்ட அனைத்து வகை மிட்டாய், குளிர்பானங்கள், கேக், பிஸ்கட், பன், பதப்படுத்திய ஜாம் மற்றும் ஜெல்லி வகைகளை பயன்படுத்தக் கூடாது.

பரிந்துரைக்கப்பட்டவை: காய்கறி சேர்த்த கோதுமை பரோட்டா, ரொட்டி, அரிசி சாதம், புலாவ், பருப்பு வகை, கோதுமை அல்வா, கறுப்பு பட்டாணி கடலை, கோதுமை உப்புமா, காய்கறி வகை கிச்சடி, பருப்பு சாதம், சாம்பார், இட்லி, வடை, கீர், பிர்னி, பாயசம் மற்றும் பால் வகை பானங்கள், காய்கறி உப்புமா, காய்கறி, 'சாண்ட்விச்' புளி சாதம் மற்றும் கூட்டு வகைகள்.

பக்கோடா, சமோசா, வடை போன்ற சத்தான வகையில் சுத்தமாக தயாரித்து, வாரம், ஒருநாள் மட்டும் பள்ளி கேன்டீனில் வழங்கலாம். மீன், கொழுப்பு குறைந்த இறைச்சி, முட்டை, தானிய உணவு வகைகள்; மேலும் சுத்தமான பழ ரசம் மாணவர்களுக்கு தரலாம். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எப்படி தயாரிக்க வேண்டும்: மாணவர்களுக்கான உணவை, கொழுப்பற்ற சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில், அவ்வப்போது மாற்றி மாற்றி சமைக்க வேண்டும். ஒரே எண்ணெயில் சமைக்கக் கூடாது. நெய் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது மாணவர் உடல்நலனுக்கு நல்லது.

உடற்பயிற்சி அவசியம்:மாணவர்களை, முடிந்தவரை அவ்வப்போது நடக்க வைக்க வேண்டும். நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளில் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும். மாணவர்கள் சைக்கிள் ஓட்டவும், பள்ளிக்கு சைக்கிளில் வருவதற்கான பயிற்சி தரலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.