பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு, விடைக்குறிப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின், 'சென்டம்' வாய்ப்புக்கு, 'செக்' வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது.
ஏப்., 1முதல், மொழி பாடத்திற்கான விடைத்தாள் திருத்தம் துவங்கி உள்ளது. இதில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மொழி பாடத்திற்கான விடைக்குறிப்புகள், தரமான முறையில்தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய பாடங்களுக்கான, தலைமை விடைதிருத்துனர்களுக்கான விடை திருத்தம் நேற்று துவங்கியது.
இதில், தேர்வுத்துறையின் விடை குறிப்புகளை பெற்ற ஆசிரியர்கள், அவற்றை ஆய்வு செய்ததில், அறிவியல் பாட விடைக்குறிப்பு, குளறுபடியாக உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது, 50வது கேள்வியில், 'இரு வித்திலை தாவர விதையின் அமைப்பை படத்துடன் விவரிக்க' என்ற, ஐந்து மதிப்பெண் கேள்விக்கு, விடைக்குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், அவரை விதையின் படம் வரைந்து, நான்கு பாகங்களை குறித்தால், இரண்டு மதிப்பெண்களும், அவரை விதையை பற்றிய, ஒவ்வொரு சரியான குறிப்புக்கும், தலா அரை மதிப்பெண் வீதம், ஆறு குறிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண்களும், வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே வினா, 2014, பொது தேர்வில்வந்தபோது, மூன்று விடைக்குறிப்புகளை எழுதினாலே, ஒவ்வொன்றுக்கும், தலா ஒரு மதிப்பெண் வழங்கலாம் என, கூறப்பட்டிருந்தது. இதன்படி, படம் வரைந்து, மூன்று குறிப்புகள் எழுதினால் போதும், என, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்துள்ளனர்.
ஆனால், இந்த ஆண்டு ஆறு குறிப்புகளை எழுத வேண்டும் என, விடைக்குறிப்பில் மாற்றி கொடுக்கப்பட்டதால், பல மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.மூன்று குறிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண்களுக்கு பதில், ஒன்றரை மதிப்பெண் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, 'சென்டம்' பெறும் மாணவர்களுக்கு, ஒன்றரை மதிப்பெண், சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.