அவிநாசி அருகே கிராமப்புற அரசு பள்ளி நிர்வாகத்தினர், அதிகளவில், மாணவரை பள்ளியில் சேர்க்க, ‘பிளக்ஸ்’ வைத்து, விளம்பரம் செய்து அசத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பஞ்சலிங்கம்பாளையத்தில், அரசு துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. கிராமப்புற பள்ளியாக உள்ளதால், குறைந்தளவிலேயே மாணவர் எண்ணிக்கை உள்ளது.
இதை அதிகரிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக்குழு, மேலாண்மை மற்றும் கிராமக்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டனர்.
அதற்காக, பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள், கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை குறித்து, ‘பிளக்ஸ்’ பேனர் அச்சடித்து, அருகிலுள்ள கிராமங்களில் வைத்துள்ளனர்.
அதில், ‘திறமையான, கனிவான ஆசிரிய, ஆசிரியைகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி, தமிழக அரசின், 14 நலத்திட்டங்கள், முற்றிலும் இலவச கல்வி, மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி வகுப்பு.
புரொஜெக்டர் முறையில் கற்றல் செயல்பாடு, யோகா மற்றும் கணிப்பொறி கல்வி, சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள், அறிவியல் அரங்கம், தரமான மதிய உணவு, குழந்தை நேயப்பள்ளி,’ உள்பட பல வசதிகள் குறி த்து விளக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ‘கல்வித்துறையின் அறிவுரைப்படி, எங்களது பள்ளியில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதற்காக, அனைத்து வசதிகள் குறித்து, பேனரில் அச்சடித்து, பல இடங்களில் வைத்துள்ளோம்.
ஊர் மக்களின் ஒத்துழைப்போடு, சிறந்த முறையில் பள்ளியை செயல்படுத்தி வருகிறோம். பொதுத்தேர்விலும், 100 சதவீத தேர்ச்சி, நல்ல மதிப்பெண் பெற்று வருகிறோம்,’ என்றார்.