தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. மதிப்பெண் பட்டியல், மாணவர்களின் மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக வரும். பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு, மார்ச்சில் நடந்த பொதுத் தேர்வில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள், இன்று காலை, 10:00 மணிக்கு, வெளியாகின்றன. தேர்வு முடிவு களை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in போன்ற இணையதளங்களில், பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு, தெரிந்து கொள்ளலாம்.
முடிவுகள் வெளியான சில நிமிடங்களில், மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். மாவட்ட கலெக்டர் அலுவலக, தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், தேர்வு முடிவுகளை கட்டணமின்றி பார்க்கலாம். இன்றைய தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படாது. அதேபோல், பள்ளிகளும், மாணவர்களுக்கு, 'ரேங்க்' போடக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
'104'ல் சிறப்பு ஆலோசனை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாவதால், '104' மருத்துவ சேவை மையத்தில், மாணவர், பெற்றோருக்கு சிறப்பு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. இதையொட்டி, '௧௦௪' மருத்துவ தகவல் மையத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, சிறப்பு மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதாலும், தோல்வி காரணமாகவும், மன அழுத்தத்தால், தவறான முடிவுகளை, மாணவர்கள் எடுத்து விடுகின்றனர். இதை தவிக்கவே, '௧௦௪' சேவை மையத்தில், சிறப்பு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
25ல் மதிப்பெண் சான்றிதழ் : பத்தாம் வகுப்பு தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 25ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். பள்ளிகளிலும், அன்றே சான்றிதழ் கிடைக்கும். தேர்வு முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதோர், மறுகூட்டல் தேவைப்பட்டால், இன்று முதல், வரும், 22 மாலை, 5:45 மணி வரை, பள்ளிகளிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையங்களிலும்
விண்ணப்பிக்கலாம்.