தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களின் கலை, இலக்கிய, தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் கலைத்திருவிழா என்ற
தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கலை, இலக்கியம், நுண்கலை உள்ளிட்ட 150 பிரிவுகளில் பள்ளி, ஒன்றிய, கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் கொண்ட மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.4 கோடி செலவிடப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை:
4 பிரிவுகளில் போட்டிகள்: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி அடுத்தடுத்த நிலைகளான கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில அளவில் நடைபெறும். ஒவ்வொரு நிலையிலும் தேர்வு பெற்றவர்கள் அடுத்தடுத்த நிலைகளில் கலந்துகொள்ளலாம். இருப்பினும் பிரிவு 1-ன் கீழ் நடைபெறும் போட்டிகள் ஒன்றிய நிலையிலும், 2-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் கல்வி மற்றும் வருவாய் மாவட்ட அளவிலும், பிரிவு 3-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் மாநில அளவிலும் நிறைவு பெறும்.
வெற்றி பெற்றால் மதிப்பெண்: போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு தரமதிப்பு (கிரேடு) வழங்கப்படும். 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் ஏ கிரேடு மற்றும் 5 புள்ளிகள், 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் பி கிரேடு மற்றும் 3 புள்ளிகள், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் சி கிரேடு மற்றும் 1 புள்ளி வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான போட்டிகளில் அதிக மதிப்பெண் பெறும் 3 போட்டியாளர்களுக்கு ஒரு போட்டிக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 வீதம் வழங்கப்படும். இது தவிர அந்தந்தப் பிரிவுகளுக்கு உரிய பரிசுகளும் வழங்கப்படும். இததற்குத் தேவைப்படும் ரூ.4 கோடி நிதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து பெறுவதற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பள்ளிக் கல்வி நிறுவன இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி வாரம் அல்லது பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கு ஏற்றவாறு போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிகளின் முடிவுகள் குறித்து மேல்முறையீட்டு மன்றம், மலர் தயாரிப்பு, பரிசுப் பொருள்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.