2012 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால்
கிங்ஃபிஷர் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது, மீண்டும் ஏர் டெக்கான் விமான சேவையை தொடங்கவுள்ளதாக அதன் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவையைத் தொடங்கினார். குறைந்த கட்டணமாக ஒரு ரூபாய் கட்டணத்தை அறிமுகப்படுத்தி, சிம்ஃபிளி ஃபிளை என்ற வாசகத்துடன் செயல்பட்டது.
பின்னர், இந்த விமான சேவை 2008ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுடன் இணைந்து செயல்பட தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனது சேவையை வரும் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தனது முதல் சேவையை மும்பை- நாசி வழித்தடத்தில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் சிறுநகரங்களை இணைக்கும், மத்திய அரசின் உடான் சேவையை தற்போது பல விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இந்த உடான் சேவை சிறிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டணத்தில் விமான பயணம் மேற்கொள்வது. சாதாரண மனிதர்களை விமானத்தில் பயணிக்கச்செய்வதே இந்த உடான் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் படி ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 மட்டுமே. மீதமுள்ள தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கும்.
இந்த உடான் சேவையுடன் இணைந்து ஏர் டெக்கான் நிறுவனமும் தனது இரண்டாவது சேவையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் கூறுகையில், ''நாசிக்கில் இருந்து மும்பைக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல 4 மணி நேரமாகும். விமானத்தில் 40 நிமிடத்தில் சென்று சேரலாம். டிக்கெட் கட்டணம் ரூ.1400. சில அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.1 கட்டணத்திலும் டிக்கெட் கிடைக்கும். இவர்கள் முதலில் டிக்கெட் புக் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
2018, ஜனவரி மாதம் டெல்லியில் இருந்து ஆக்ரா, சிம்லா, லூதியானா, டேராடூன், குலு பகுதிகளை டெல்லியுடன் இணைக்கும் வகையில் விமான சேவை தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.