அரசு பள்ளி இல்லாத இடங்களில் மட்டும் தனியார் பள்ளிகளில் 25% சேர்க்கை நடத்துவது, நிதி வழங்குவது குறித்தும் அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கும் வகையில் அங்கன்வாடி மையங்களை துறைமாற்றம் செய்வது குறித்தும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பை வரவேற்போம். மழலையர் வகுப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.
---------------------------------------------------------
அ.தி.மு.க., - செம்மலை:
பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர், பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.சில தனியார் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல், இரண்டு ஆண்டுகள், பிளஸ் 2 பாடங்களை படிக்க வைத்தனர். இதை தடுக்க, பிளஸ் 1 பொதுத்தேர்வை, அமைச்சர்அறிமுகப்படுத்தி உள்ளார்.ஜெ.,வின் எண்ணங்களுக்கு, இந்த அரசு, செயல் வடிவம் கொடுத்து வருகிறது.
கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம், நலிவுற்றப் பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நாமே மாணவர்களை, தனியார் பள்ளிக்கு அனுப்புவதால், அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது.எனவே, அரசு பள்ளி இல்லாத இடங்களில் மட்டும், இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள் இருந்தால், அங்கு மாணவர்களை சேர்க்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்:
இந்த சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்திற்கு, மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு நிதி தரவில்லை.எனினும், சட்டத்தை அமல்படுத்தி வருகிறோம். உறுப்பினர் கூறியது, கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
செம்மலை:
அரசு பள்ளிகள் இல்லாத இடங்களில் மட்டும், தனியார் பள்ளிகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, முழு மானியம் வழங்க வேண்டும். தனியார் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,வகுப்புகள் உள்ளன.குழந்தைக்கு இரண்டரை வயதானாலே, பள்ளிக்கு அனுப்ப நினைக்கின்றனர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள், சீருடை, 'டை, ஷூ' அணிந்து செல்வதைக் கண்டு, செலவு அதிகமானாலும், தங்கள் குழந்தைகளை, அங்கு அனுப்புகின்றனர்.இதை பயன்படுத்தி, அப்பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இதை தவிர்க்க, அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க வேண்டும். மெட்ரிக் பள்ளி மோகத்தை தவிர்க்க, அரசு பள்ளிகளில், ஆரம்ப நிலையிலே, ஆங்கிலம் கற்பிக்க வேண்டும்.மெட்ரிக் பள்ளிகள் என்பதை மாற்ற வேண்டும். முன்னர், தனி பாடத்திட்டம் இருந்தது. தற்போது, சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மெட்ரிக் பள்ளி என, தனியாக இருக்க வேண்டியதில்லை. 'தனியார் சுயநிதிப் பள்ளி' என, பெயர் மாற்றினால், அந்த மோகம் குறையும்.
அமைச்சர் செங்கோட்டையன்:
அங்கன்வாடி மையங்கள், 90 சதவீதம், அரசு பள்ளி வளாகங்களில் தான் உள்ளன. எனவே, அங்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்குவது தொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், ஆலோசனை நடந்து வருகிறது.அங்கன்வாடி மையங்களை, துறை மாற்றம் செய்வது, ஆசிரியர்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ஆலோசித்து, விரைவில், நல்ல முடிவு எடுக்கப்படும்.எதிர்காலத்தில், தனியாரால் பள்ளிகள் நடத்த முடியுமா... என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளை மேம்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.
செய்தி: தினமலர்.