யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/18

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் :

இந்தியாவில் முதன்முறையாக பேஸ் ரீடிங் எனப்படும் மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு முறையை சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த 4 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்வானதற்கு அவசர கோலத்தில் பயிற்சி அளித்ததே காரணம் என்று கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 500 மாணவர்களாவது தேர்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 413 நீட் தேர்வு பயிற்சி மையங்களில் 26,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என அவர் தகவல் அளித்துள்ளார். அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் 4 வகையான வண்ண சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகிறது என்றும், அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறினார்.
இதனை தொடர்ந்து பாலிதீன் பொருட்களை பயன்படுத்த கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் அரையாண்டு வினாத்தாள் எதுவும் திருப்படவில்லை என்று கூறிய அவர், கதவை உடைத்த மாணவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் அளித்துள்ளார். 33 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர்கள்கூட இல்லை, 1324 அரசுப்பள்ளிகளில் ஒன்பதுக்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர் என்றும், பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வழக்குகளை முடித்து கொடுத்தால் உடனடியாக பணியிடங்களை நிரப்ப தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

வலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம் சென்னை சுற்றி மழை கொட்டும் :

சென்னை : 'வங்க கடலில் உருவாகியுள்ள, 'பெய்ட்டி' புயல் சின்னம், ஆந்திரா மற்றும் தமிழக கடற்பகுதி இடையே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வலுவாகுது,பெய்ட்டி,புயல் சின்னம்,சென்னை,மழை,கொட்டும்
புயல் சின்னத்தால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, மிக கனமழை பெய்யும் என, தெரிகிறது.தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை, நவ., 1ல் துவங்கியது. முதலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு, சென்னை முதல், தென் மாவட்டங்கள் வரை, பரவலாக மழையை கொடுத்தது.

பின், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 'கஜா' புயலாக மாறி, டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, வட மாவட்டங்களில் மழையை
கொட்டியது. டிச.,6 முதல், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், இந்திய பெருங்கடலை யொட்டி, வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இன்று நள்ளிரவுக்கு பின், புயல் சின்னமான, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மண்டலம், நாளை மறுநாள் புயலாக மாறி, வட மேற்கு திசையில் நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, தாய்லாந்து வழங்கியுள்ள, பெய்ட்டி என்ற பெயர், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புயல், அந்தமானுக்கு மேற்கு பகுதி வழியே சுழன்று, தமிழக கடற்பகுதியை நெருங்க உள்ளது.


கொட்டும் மழை :
இதனால், தமிழகத்தின் பாம்பன் முதல், ஆந்திராவின் நெல்லுார் வரை, கன மழையை கொடுக்கும். குறிப்பாக, நாகை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில், கனமழையை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புயல் சின்னம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
2 நாட்களுக்கு வறண்ட வானிலை:
வங்க கடலில் புயல் சின்னம் உருவாவதால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்காது என, வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடலை ஒட்டி, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதுவரை, இன்னும் இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில் குறிப்பிடும் படியாக மழை இருக்காது; வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களை பொறுத்தவரை, வரும், 13ம் தேதி வரை, வங்க கடலின் தெற்கு, தென் மேற்கு, தென் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அந்த பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். கடல் அலைகள் கொந்தளிப்பாகவும், மோசமான வானிலையும் இருக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு சலுகை :

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.


இனி, முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், இந்த வரி விலக்கு, பொருந்தும். இதனால், 2019 - 20 நிதி ஆண்டில், அரசுக்கு, 2,840 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளியில் தண்ணீரின் தரம் இணையதளத்தில் பதிவேற்றம் :

மத்திய அரசின் இணையதளத்தில், 15 அரசுப்பள்ளிகள், தண்ணீரின் தர அளவீட்டை, பதிவேற்றம் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் நினைவாக, மத்திய அரசு, தண்ணீர் பரிசோதிக்கும் புதிய திட்டத்தை அறிவித்தது.பள்ளி அறிவியல் புத்தகத்தில், துாய தண்ணீரை அடையாளம்காண்பதற்கான, சோதனை முறைகள் உள்ளன.

இதை செயல்வழியில் மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை,மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில், பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.கோவையில், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், இத்திட்டத்துக்கான செயல்விளக்கம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. தண்ணீரின் தரத்தை மாணவர்களை கொண்டு பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நுரை மிதப்பு முறை, தண்ணீரின் பி.எச்., தன்மை, உப்பு தன்மை ஆகிய மூன்று முறைகளில், சோதித்து கிடைக்கும் முடிவுகள், பதிவேற்றப்பட்டுள்ளன.இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள, ஆலோசனை நடப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகை பதிவுக்கு புதிய தொழில்நுட்பம் :

செயற்கை நுண்ணறிவு என்னும் ஆன்ட்ராய்டு ஆப் மூலம் மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் புதிய தொழில் நுட்பத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்வு சென்னை, அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. புதிய தொழில் நுட்ப வருகைப் பதிவை தொடங்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மாணவ மாணவியரின் முகத்தை அடையாளமாக வைத்து வருகைப் பதிவு செய்ய செல்போனில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருமுறை மாணவர்களின் போட்டோவை தனியாக படம் பிடித்து, அவர்களின் விவரங்கள் சேமித்து வைக்கப்படும். அதேபோல ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ மாணவியரின் போட்டோக்கள் அதில் சேமிக்கப்படும். அதற்கு பிறகு, தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் மாணவ மாணவியரை குழுவாக படம் பிடிப்பார்கள். வகுப்புக்கு வந்துள்ள மாணவர்கள், வராதவர்கள் குறித்த விவரங்களை செல்போனில் உள்ள செயலி காட்டிக் கொடுத்துவிடும்.

நெல்லை, குமரியை சேர்ந்த 80 இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் டிச.24ல் தொடக்கம் நாகர்கோவிலில் 15 நாள் நடக்கிறது :

நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் வரும் டிசம்பர் 24 முதல் 15 பதினைந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் துறையில் மேம்பாடு அளிப்பதற்காக இளம் மாணவர் அறிவியல் திட்ட விஞ்ஞானிகள் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மாணவர்களுக்காக வருகின்ற டிசம்பர் 24ம் தேதி தொடங்கி 15 நாட்கள் முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளது. பயிற்சிக்கு பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் கலந்து கொள்ள தகுதி உடையவர் ஆவர். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழியல் போன்றவற்றில் தரமிக்க வல்லுநர்களால் பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் மாணவ, மாணவியர் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ராஜாக்கமங்கலம் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவர்.

பயிற்சி நிறைவு நாட்களில் மாணவ மாணவியர் சுயமாக தயாரித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகளைக் கொண்டு அறிவியல் கண்காட்சி நடைபெறும். பயிற்சியில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் இந்துக் கல்லூரி அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்று இம்மாதம் 19ம் தேதிக்கு முன்னர் பூர்த்தி செய்து அளித்தல் வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் பட்டியல் 20ம் தேதி வெளியிடப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த 80 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். எனவே, முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். கலந்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சான்றிதழ் வழங்க உள்ளது.

TNPSC DEO Exam 2018 - தேர்வு அறிவிப்பு

பள்ளி கல்வியில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான போட்டி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்விலும்; 50 சதவீதம், நேரடி போட்டி தேர்வு வழியாகவும் நியமிக்கப்படுகின்றனர்.இதன்படி, தற்போது காலியாக உள்ள, 18 டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, மார்ச், 2ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. இந்த தேர்வின் வழியாக, நேரடியாக, 14 பேரும், அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், நான்கு பேரும் தேர்வு செய்யப்படுவர் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

JACTTO-GEO வழக்கு வதந்திகள்! உண்மை நிலவரம் உரைக்கும் - திண்டுக்கல்.எங்கெல்ஸ் :

ஜாக்டோ-ஜியோ வழக்கின் நேற்றைய (10.12.2018) விசாரணையின் நடவடிக்கைகளை 21 மாத நிலுவையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்களை பிளவுக்குட்படுத்தி மதிமயக்கும் செயலில் ஈடுபட்டு வரும் சில நபர்கள் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
🔥
🛡 இவர்களின் நோக்கம், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியமல்ல. மாறாக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான பிளவுகள் மட்டுமே.


🛡 இறுதியாக நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பங்கெடுக்க விடாது தடுத்தோர், வேலைநிறுத்தத்தில் தங்களின் ஒற்றைக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதாக கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அளிக்க பரப்புரை செய்தோர் இன்று ஜாக்டோ-ஜியோவை விமர்சிப்பது வேடிக்கையே.
🔥

🛡 இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருப்பின் ஊதியம் & ஓய்வூதியக் கோரிக்கையையும் வலியுறுத்தியிருப்பர். அப்படி கூறியிருப்பின் பிளவுபடுத்த இயலாது ஓய்வூதியக் கோரிக்கையால் மற்றவர்களுடன் பொதுமைப்படுத்தப்பட்டுவிடுவோம் என்பதாலேயே ஓய்வுக்கால வாழ்வாதாரக் கோரிக்கைக்காக குரல் எழுப்பாது மீறி எழுப்பும் குரல்களையும் ஒழித்து வருகின்றனர்.
🔥
🛡 இவர்களின் இத்தகைய போக்கு ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும் என்று கருதியும், இடைநிலை ஆசிரியர்களுக்குள் பரப்பப்பட்டுள்ள மிகத்தவறான பதிவுகளின் *உண்மை நிலையை உரைக்கும் நோக்கிலும், இடைநிலை ஆசிரியரும் CPS நீக்கம் குறித்த விழிப்புணர்வுப் பணிகளில் தொடர்ந்து களத்தில் நிற்பவருமான தோழர்.பிரடெரிக் எங்கல்ஸ்* சமூக வலைதளத்தில் பின்வரும் விளக்கத்தை அளித்துள்ளார்.
🔥
🔮 *"நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.*
🔥

🔮 *நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைக் காணாமல் தனது கற்பனை திறத்தால் நினைத்ததைத் தயவுசெய்து பொதுக்கருத்தாக பகிர வேண்டாம்.*
🔥
🔮 *21 மாத நிலுவை தொகையை மட்டும் ஜாக்டோ ஜியோ வலியுறுத்தவில்லை.*
🔥
🔮 *சித்திக் குழுவின் காலத்தை காலநீட்டிப்பு செய்யவும் ஜாக்டோ ஜியோ கேட்கவில்லை.*
🔥
🔮 *20.12.2018 அடுத்த கட்ட விசாரணை என்றும் அதற்குள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது அதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்பிறகே வழக்கு விசாரணை 07.01.2019 மாற்றம் செய்யப்பட்டது.*
🔥
🔮 *ஊதிய குறைதீர் குழுவினர் தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தான் அதில் யாருக்கு என்ன செய்யப்பட்டது என்பது தெரியவரும்.*
🔥
🔮 *சித்திக் குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய குறையை மட்டும் தீர்க்க அமைக்கப்படவில்லை.*
🔥
🔮 *CPS குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும்முன் தமிழக முதலமைச்சர் சேலம் கூட்டத்தில் பேசிய கருத்தும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.*

🔥
🔮 *CPS-ல் ஓய்வு பெற்ற, மரணம் அடைந்துள்ள 10,000 பேரின் நிலை குறித்தும் அரசிடம் கேட்கப்பட்டபோது, செட்டில்மென்ட் பற்றி மட்டும் குறிவிட்டு ஓய்வூதியம் குறித்த நமது வழக்கறிஞரின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்ததை அங்கிருந்தோர் அறிவர்.*
🔥
🔮 *மேலும், நீதிபதிகள் தமது உத்தரவு வெளிவந்தால் கூடுதல் விபரங்களை அறியலாம்.*
🔥
🔮 *அதற்கு முன்பு தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.*
🔥
🔮 எனவே, *போர்க்களங்கள் மாறலாம் போர்கள் மாறாது."*
🔥
🛡 இதுகுறித்து, அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, *"சார், நேற்று நீதிமன்றத்தில் இது தான் நடந்தது. நானே நேரில் சென்றிருந்ததால் நடந்ததைக் கூறியுள்ளேன். இனி இதனை நம்புவதா அல்லது கட்டுக்கதைகளை நம்புவதா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்."*
🔥
🛡 மேலும், *"CPS வல்லுநர்குழு அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் நாளை நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்தாக வேண்டும் என்பதையும், தமிழத்தில் உள்ள 149 துறைகளுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட One Man Commission report-ஐ 10 நாள் நீதிமன்ற விடுமுறை கழிந்து வரும் ஜனவரி 7-ற்குள் சமர்ப்பித்தாக வேண்டும் என்பதையும், 21 மாத ஊதிய நிலுவை குறித்த அறிவிப்பையும் ஜாக்டோ-ஜியோ-வின் வேலைநிறுத்த அறிவிப்பிற்குக் கிடைத்த முதல்கட்ட Positive Approach-ஆகவே பார்க்கிறேன்."*
🔥
🛡 *"அறிக்கைகளில் நமது கோரிக்கைகள் தீர்க்கப்படாது போனால் உறுதியான போராட்ட அறிவிப்பை ஜாக்டோ-ஜியோ அறிவிக்கும் எனவும் நம்புகிறேன்."* என்று கூறினார்.

மூன்றாம் பருவ பாடத்திட்ட புத்தகங்களை முறையாக அனைத்து வகுப்புகளுக்கும், உரிய நேரத்தில் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை:

'மாநில கல்வித்திட்டத்தின் கீழ், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய சிலபஸ் அடிப்படையில் புத்தகம் வழங்கப்படுகிறது

மூன்றாம் பருவத்திற்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. டிஜிட்டல் முறையில் இதற்கான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜன.,2ம் தேதி பள்ளி திறக்கும் போது, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, புதிய புத்தகம் வழங்க வேண்டும். இதற்கான ஆயத்த பணிகளில், தமிழ்நாடு பாடநுால் கழகம் ஈடுபட்டு வருகிறது.


கோவை மாவட்டத்தில், ஐந்தாம் வகுப்புக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், காலாண்டு விடுமுறைக்குப் பின், ஒரு மாதம் கழித்து வினியோகிக்கப்பட்டது. உரிய நேரத்தில் புத்தகம் வினியோகிக்காததால், ஆசிரியர்கள் சிலபஸ் முடிக்க இயலவில்லை.வரும் 17ம் தேதி, தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், தற்போது வரை, வகுப்புகள் எடுக்கப்படுவதால், தேர்வுக்கு தயாரிப்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

மூன்றாம் பருவ பாடத்திட்டத்துக்கு, இதேபோன்ற சிக்கல் எழுந்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். முன்கூட்டியே பாடப்புத்தக கொள்முதலுக்கு, திட்டமிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.



தாமதம் கூடாது:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில்,

''ஐந்தாம் வகுப்புக்கு தாமதமாக புத்தகம் வினியோகித்ததால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதம் நடத்த வேண்டிய பாடத்திட்டம், அவசர அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது மூன்றாம் பருவத்துக்கு, இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல், அனைத்து பள்ளிகளுக்கும், புத்தகம் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்

TET - முடித்தோரை அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் : அமைச்சர் செங்கோட்டையன் :

மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல் கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தரமான கல்வி வழங்குவது, புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளை நடத்துவது, பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சென்னையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினோம். அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளோம்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

11/12/18

நீதிக்கதை :சிந்தனை கதைகள்



சிறியதே அழகு


தாய் யானையுடன் நடை பயின்றுகொண்டிருந்த குட்டி யானை, அருகில் இருந்த புல்வெளியில் புள்ளிமான் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டது.

“அம்மா, அந்தப் புள்ளிமானோடு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமா?”

“மானோடு விளையாடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கவனமாக விளையாட வேண்டும். கல்லில் தடுக்கி கீழே விழுந்து, காயப்படக் கூடாது” என்று எச்சரித்தது தாய் யானை.

குட்டி யானையைக் கண்டதும் புள்ளிமான் மகிழ்ச்சியோடு ஓடிவந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.

“தினமும் வருகிறேன். நாம் இருவரும் ஜாலியாக விளையாடலாம்” என்றது குட்டி யானை.

“அது முடியாது. நீ பெரியவனாக வளர்ந்துவிட்டால், உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கும். அதனால் உங்க இனத்தினரோடு விளையாட ஆரம்பி” என்றது புள்ளிமான்.

“யார் சொன்னது? நான் பெரிசா எல்லாம் வளரவே மாட்டேன். எப்பவும் இப்படியே குட்டியா, அழகா இருப்பேன். இப்பவே அம்மா கிட்ட சொல்லி, என்னை வளர விடாமல் செய்துடறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது குட்டி யானை.

“அம்மா, மான் அழகா சின்னதா இருப்பதுபோல நானும் சின்னதாவே இருந்துடறேன். உங்களை மாதிரி பெரிய உடம்பு எனக்கு வேண்டாம்மா” என்று அப்பாவியாகச் சொன்னது குட்டி யானை.

”மான் சின்னதா இருக்கிறதும் நாம் பெருசா வளர்றதும் இயற்கை. இதை நீயோ நானோ நினைத்தால் மாற்ற முடியாது. பெரிய உடம்புதான் நம் இனத்துக்குப் பலம்” என்று தும்பிக்கையால் குட்டி யானையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னது அம்மா யானை.

குட்டி யானைக்கு இந்தப் பதிலில் திருப்தியில்லை. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வளர வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடச் சென்றுவிட்டது.

மறுநாள் புள்ளிமானைச் சந்தித்தது.

“என் அம்மாவிடம் நான் வளர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி கவலை இல்லை” என்று சிரித்தது குட்டி யானை.

“நீ ரொம்பச் சின்னவன். உனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது. வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.”

இரண்டும் சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று வந்தது. அதைக் கண்டதும் மானின் உடல் நடுங்கியது.

“குட்டி யானையே, வேகமாக ஓடிடு. சிறுத்தை வந்துகிட்டு இருக்கு. நானும் ஓடறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பாய்ந்து சென்றது புள்ளிமான்.

குட்டி யானைக்கு ஒன்றும் புரியவில்லை. சிறுத்தையின் கவனம் புள்ளிமானின் மீது இருந்ததால், குட்டி யானையை அது கண்டுகொள்ளவில்லை.


சிறுத்தையின் ஆக்ரோஷமான துரத்தலையும் புள்ளிமானின் உயிர் பயத்தையும் கண்ட குட்டி யானைக்கு முதல் முறையாகப் பயம் வந்தது.



தன்னை அறியாமல் அம்மா, அம்மா என்று கத்தியது குட்டி யானை. புள்ளிமானைப் பிடிக்க முடியாத சிறுத்தை மிகவும் ஏமாற்றமடைந்தது. குட்டி யானையைக் கண்டவுடன் மீண்டும் மகிழ்ச்சியடைந்தது. ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.

அதைப் பார்த்த குட்டி யானை, “அம்மா… அம்மா…” என்று அலறியது.

இலைகளைத் தின்றுகொண்டிருந்த அம்மா யானையின் காதில், குட்டியின் குரல் விழுந்தது. உடனே ஓடிவந்தது. அதற்குள் சிறுத்தை குட்டி யானையை நெருங்கிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையால் சிறுத்தையைப் பிடித்து, சுழற்றி வீசியது அம்மா யானை.

தூரத்தில் போய் விழுந்த சிறுத்தையால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வலியில் கதறியது.

“பொதுவா நம்மைக் கண்டால் சிறுத்தை பயப்படும். ஏனென்றால் நம் உருவம் அப்படி. தூக்கி வீசினால் ஒரு மாசத்துக்கு நடக்கக்கூட முடியாது. நீ சின்னவனாக இருப்பதால்தான் சிறுத்தை உன்னை நெருங்கியிருக்கிறது. நமது பலமே நமது பிரம்மாண்டமான உடல்தான். இப்பவாவது உனக்குப் புரியுதா?” என்று கேட்டது அம்மா யானை.


“நன்றாகப் புரிந்துவிட்டது அம்மா. புள்ளிமானுக்கு வேகமாக ஓடக் கூடிய கால்களும் நமக்கு பெரிய உருவமும் இயற்கை கொடுத்திருக்கு. நானும் நல்லா சாப்பிட்டு உங்களை மாதிரி பெரிய ஆளா வளரப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் வயிற்றுக்கு அடியில் போய் நின்றுகொண்டது குட்டி யானை.

School Morning Prayer Activities - 11.12.2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள் : 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

பழமொழி:

Even homer nods

யானைக்கும் அடி சறுக்கும்

பொன்மொழி:

மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1) ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை

2) கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
பர்மா

நீதிக்கதை :


ஒற்றைக் கொம்பனும் முதலை வாயனும்

பள்ளி இறுதி படிக்கும் மணி, நீலனைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்தான். ஒரு வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி, மணி அடித்தான். சத்தம் கேட்டு வெளியே வந்தான் நீலன்.

“என்ன மணி, இவ்வளவு தூரம்?”

“எனக்கு ஒரு உதவி செய்யணும் நீலன். பள்ளிக்கூடத்தில் காடு பற்றி ஒரு பிராஜக்ட் செய்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் காட்டைச் சுற்றிக் காட்டினால், எனக்கு உதவியாக இருக்கும். என்னைக் கூட்டிட்டுப் போறீயா?” என்று கேட்டான் மணி.

“இதெல்லாம் ஒரு உதவியா மணி? தினமும் நான் போற இடம்தானே? காடு பத்தி உனக்கு அதிகம் தெரியாது. அதனால காட்டுக்குள்ள நுழைஞ்சதிலிருந்து என்னோடதான் இருக்கணும். நான் சொல்றபடிதான் நடந்துக்கணும். அதுக்கு ஒத்துக்குறதுன்னா உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்றான் நீலன்.

“எதுக்கு இவ்வளவு பயம் காட்டறே? காட்டுக்குள்ள வீணா ஆபத்தில் சிக்கிக்கக் கூடாதுன்னு எனக்கும் தெரியும் நீலன். உன் சொல்படி கேட்கறேன், வா” என்றான் மணி.

இருவரும் பேசிக்கொண்டே காட்டுக்குள் நுழைந்தனர். ஓரிடத்தில் இரண்டு மரங்கள் ஒன்றாகப் பிணைந்திருந்தன. சற்றுத் தூரத்தில் சுவர் எழுப்பியதுபோல் மரங்கள் நெருக்கமாகவும் வரிசையாகவும் நின்றன. இந்தக் காட்சிகளை எல்லாம் படம் எடுத்துக்கொண்டான் மணி.

அப்போது தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. உஷாரானான் நீலன். “மணி, ஒத்தக் கொம்பன் வர்ற மாதிரி இருக்கு. நாம ரெண்டு பேரும் அந்தப் பாறைக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிடலாம். வேகமா வா” என்று மணியை அழைத்துக்கொண்டு சென்றான் நீலன்.

சில நிமிடங்களில் இரண்டு கொம்புகளுடன் கம்பீரமாக ஒரு யானை அந்தப் பக்கம் நடந்து சென்றது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பாறையை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“என்னப்பா, ஒத்தக் கொம்பன்னு சொன்னே, அதுக்கு ரெண்டு தந்தம் இருக்கே?” என்று கேட்டான் மணி.

“நான் சொன்னதுக்கு கொம்பு இருக்கிற ஒத்தை யானைன்னு அர்த்தம். இந்த மாதிரி யானை எப்பவும் கோபமா இருக்கும். மனுசங்களைக் கண்டால் விடாது. இது யானைக் கூட்டத்துல இருந்து விரட்டப்பட்ட யானை” என்று நடந்துகொண்டே சொன்னான் நீலன்.

விதம்விதமான பறவைகள், பறவைகளின் கூடுகள், தேன் கூடு, மான் கூட்டம், குரங்குகள் என்று வரிசையாகப் படம் பிடித்தபடி நடந்தான் மணி.

சிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் ஒரு குளத்தை அடைந்தனர்.

“இந்தப் பாறையில் உட்கார்ந்து ஓய்வு எடு மணி. நான் இந்த மரத்தில் ஏறி, உனக்கு ஈச்சம் பழங்களைப் பறித்துப் போடுறேன்” என்று சொல்லிவிட்டு, மரத்தில் ஏறினான் நீலன்.

குளத்தில் தண்ணீர் தெளிவாக இருந்தது. களைப்பில் தாகம் எடுத்தது. மெதுவாகக் குளத்துக்குள் இறங்கினான் மணி. தண்ணீர் குடித்தான். திடீரென்று குளத்தில் குளிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. கைப்பையைப் பாறையில் வைத்துவிட்டுத் திரும்பலாம் என்று நினைத்தபோது, நீலன் கத்தினான்.

  
“மணி, கையில் இருந்த பையை அந்த முதலை வாயில் வீசிட்டு, வேகமா கரையேறு” என்று சொல்லிக்கொண்டே மரத்திலிருந்து குதித்தான் நீலன்.

மணியும் பையைக் கழற்றி முதலையின் வாய் மீது வீசினான். இரை என்று நினைத்த முதலை, பையைக் கவ்வியபடி தண்ணீருக்குள் மூழ்கியது. மணி வேகமாகக் கரையேறினான்.

“நல்லவேளை நீலன், உன்னாலதான் இப்ப உயிரோட இருக்கேன். தண்ணியில நின்ன நானே கவனிக்கல. நீ எப்படிக் கவனிச்சே?” என்று படபடப்புடன் கேட்டான் மணி.

“பாறையிலதானே உன்னை உட்காரச் சொன்னேன். நீ என்கிட்ட சொல்லாமல் குளத்தில் இறங்கிட்டே. அதான் உன்னைக் கவனிச்சிட்டே இருந்தேன். முதலை மெதுவா உன்னை நோக்கி வாயைத் திறந்துகிட்டு வந்தது. உன்னை இறங்கி வந்து காப்பாத்த நேரமில்லை. அதான் பையை வீசச் சொன்னேன்.”

“ரொம்ப நன்றி நீலன். அந்தப் பையில் கொஞ்சம் ரூபாயும் நீ சொன்ன விஷயங்களின் குறிப்புகளும் வச்சிருந்தேன். எல்லாம் போச்சே…”

“போகட்டும் மணி. உயிர் பிழைச்சதே பெரிசு. இந்த ஈச்சம் பழங்களைச் சாப்பிட்டுக்கிட்டே நட” என்று ஈச்ச மரக் குச்சிகளைக் கொடுத்தான் நீலன்.


நீலனின் அனுபவ அறிவை நினைத்து வியந்தபடி, ஈச்சம் பழங்களைச் சுவைத்துக்கொண்டே நடந்தான் மணி.


இன்றைய செய்தி துளிகள் : 


1.அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

2.பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை : கியூ.ஆர்., கோடுடன் வழங்க, 'டெண்டர்' -க்கு அரசு அனுமதி

3.சிறப்பு வகுப்பில் பங்கேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு1.69கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க முடிவு.

4.ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்

5.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை : கியூ.ஆர்., கோடுடன் வழங்க, 'டெண்டர்'

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, கியூ.ஆர்., கோடுடன் கூடிய, அடையாள அட்டை வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனை, வரும், 14ம் தேதி நடக்கிறது.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு தொழில்நுட்ப திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன்படி, அனைத்து மாணவ - மாணவியருக்கும், 'சிப்' பொருத்தப்பட்ட, 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில், மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, வகுப்பு, பள்ளியின் பெயர், ரத்தப் பிரிவு, ஆதார் எண் உட்பட, அனைத்து விபரங்களும் இடம் பெறும்.கல்வி மேலாண்மை தகவல் அமைப்பால், மாணவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, 'எமிஸ்' என்ற, ஒருங்கிணைந்த அடையாள எண்ணும் இருக்கும். மாநிலம் முழுவதும் உள்ள, 37 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 71 லட்சம் மாணவர்களுக்கு, அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டம், 12.70 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அட்டை களில், சுய விபரங்கள் அடங்கிய, கியூ.ஆர்., கோடும் இணைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் நேற்று அறிவிக்கப்பட்டது. தேசிய அளவில் தரம் வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த நிறுவனங்களுக்கான முன் விளக்க கூட்டம், வரும், 14ம் தேதி, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கிறது. அதில், அடையாள அட்டைக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் குறித்து, அதிகாரிகள் விவரிக்க உள்ளனர். வரும், 18ம் தேதிக்குள், தனியார் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

'இ - மார்க்கெட் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும்' : அரசு அலுவலங்களுக்கு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு தேவையான, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை, 'இ - மார்க்கெட்' எனப்படும், 'ஆன்லைன்' வர்த்தக முறையில் வாங்க, செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர், எழுது பொருட்கள், கணினி சார்ந்த பொருட்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. இப்பொருட்களை, எங்கு, எப்படி வாங்குவது என்பதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.இதில், கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை, தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' வாயிலாக வாங்க வேண்டும். இதற்கும், துறை ரீதியாக கருத்துரு அனுப்புவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இருப்பினும், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், அதற்கான சார்பு பொருட்களை வாங்குவதில், குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. இதில், வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, இந்த நடைமுறையை, ஆன்லைன் முறைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, எல்காட் நிறுவனம், இ - மார்க்கெட் என்ற ஆன்லைன் சேவையை துவக்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள், வழக்கமான முறையில் பொருட்களை வாங்குவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தலைமை செயலகத்தில், சமீபத்தில் நடந்த அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில், இ - மார்க்கெட் தளத்தில், அரசு துறைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பொருட்கள் வாங்கும் அதிகாரி, அத்துறை சார்பில், இத்தளத்தில் பதிவு செய்து, பொருட்களை வாங்க, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.துறை வாரியாக, இ - மார்க்கெட் திட்டத்தில் பதிவு செய்த விபரத்தை தெரிவிக்கவும், செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், எந்தெந்த அரசு துறைகள், என்னென்ன பொருட்களை வாங்கியுள்ளன என்ற விபரம், அரசுக்கு நேரடியாக சென்றுவிடும்.

'குரூப் - 1' தேர்வு : 1.37 லட்சம் பேர் காத்திருப்பு

சென்னை: 'குரூப் -- 1' தேர்வு முடிவுக்காக, 1.37 லட்சம் பேர், எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் - 1 பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டது.இதன்படி, துணை கலெக்டர் - 29; டி.எஸ்.பி., - 34; வணிகவியல் உதவி கமிஷனர், தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி பதவிகளுக்கு தலா - எட்டு. துணை பதிவாளர் - ஒன்று, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - ஐந்து என, மொத்தம், 85 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.முதல் நிலை தகுதி தேர்வு, 2017 பிப்., 19ல் நடந்தது. இதில், 1.37 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, 2017 அக்., 13, 14, 15ம் தேதிகளில், பிரதான எழுத்து தேர்வு நடந்தது. முடிவுகள், 2018 ஜூனில் எதிர்பார்க்கப்பட்டன.ஆனால், 14 மாதங்களாகியும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு கள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

புகைப்படம் எடுத்து வருகை பதிவு : பள்ளி கல்வியில் இன்று அறிமுகம்

சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறையின் புதிய முயற்சியாக, மாணவ - மாணவியரை புகைப்படம் எடுத்து, வருகையை பதிவு செய்யும் திட்டம், இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பு, நவீன கணினி ஆய்வகம், பயோ மெட்ரிக் என, பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வகையில், வகுப்பில் உள்ள மாணவ - மாணவியரை வருகைப்பதிவு செய்வதில், புதிய தொழில்நுட்பத்தை, பள்ளி கல்வித்துறை, இன்று அறிமுகம் செய்கிறது.சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடக்கிறது. பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, புகைப்படம் எடுத்து வருகையை பதிவு செய்யும், ஆன்ட்ராய்ட் செயலி தொழில்நுட்பத்தை, அறிமுகம் செய்கிறார்.பெங்களூரைச் சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற நிறுவனம் சார்பில், 'ஆன்ட்ராய்ட்' வகை ஆப் வழியாக, இந்த தொழில்நுட்பம் அமலாகிறது.இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ் மாறன் கூறியதாவது:மாணவ - மாணவியரை, வகுப்பில் புகைப்படம் எடுக்கும்போது, அவர்களின் முக அடையாளம் அடிப்படையில், வருகைப்பதிவு செய்யப்படும். சீனாவில், ராணுவத்திலும், வேறு சில துறைகளிலும் இந்த திட்டத்தை பயன்படுத்துகின்றனர்.இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில், அசோக் நகர் பள்ளியில், இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.எப்படி செயல்படும்?வகுப்பில் உள்ள மாணவ - மாணவியரின் புகைப்படங்கள், முதலில் சேகரிக்கப்பட்டு, அவை, ஆன்ட்ராய்ட் ஆப் மற்றும் கணினி சர்வரில் உள்ளீடு செய்யப்படும். வகுப்பு ஆசிரியர், தங்கள் மொபைல் போனில் ஆன்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாட வேளையும், வகுப்பில் உள்ள அனைத்து மாணவ - மாணவியரின் முகம் பதிவாகும் வகையில், ஒரே ஒரு புகைப்படம் எடுத்தால் போதும். அந்த புகைப்படத்தில் பதிவாகும் மாணவ - மாணவியரின் முகங்கள், செயலி வழியாக வருகைப்பதிவு பட்டியலில் இணைந்து விடும்.இந்த தொழில்நுட்பத்தால், வருகைப்பதிவு எடுக்கும் நேரம் குறையும். கணினி முறையில், வருகைப்பதிவு விபரங்களை தொகுத்து வைக்கலாம். அவற்றை யாரும் போலியாக திருத்த முடியாது. இது, முழுக்க முழுக்க, 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' என்ற, கணினி வழி செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தில் செயல்படும்.

தகுதி இல்லாத ஆசிரியர் பட்டியல் வெளியிட்டு, காலியிடங்கள் அறிவிக்க வேண்டும் பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

தகுதி இல்லாத கலையாசிரியர் பட்டியலை வெளியிட்டு, களையெடுப்பதோடு, பள்ளிகளில் தகுதியானவர்களை பணியமர்த்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.நுாறு மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில், கலையாசிரியர் நியமிக்க வேண்டுமென, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில், 2012ல், 16 ஆயிரத்து, 548 பேர் பணி அமர்த்தப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாள் பணிபுரியும் இவர்களுக்கு, மாதம், 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.இப்பணியில், உரிய கல்வித்தகுதியின்றி பலர் பணிபுரிவதாக புகார் எழுந்தது. ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன், மாவட்டம் வாரியாக கலையாசிரியர்களின் கல்வி தகுதியை சரிபார்க்க உத்தரவிட்டார்.கோவை மாவட்டத்தில், 400 ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள், இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இதை ஆய்வு செய்யும் பணி நடப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தகுதியற்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதோடு, கல்வி தகுதி கொண்ட பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கலைப்பாடங்களில் கல்வி தகுதி கொண்ட பலர், பணிவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ''இவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். தகுதியற்றவர்கள் பட்டியல் வெளியிட்டு, காலியிடங்கள் அறிவிக்க வேண்டும்.

தகுதியானவர்களிடம் விண்ணப்பம் பெற்று, பணிவாய்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார்

பள்ளி மானிய தொகையை செலவிட புதிய கட்டுப்பாடுகள் - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. 

பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை தற்போது 4 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். மேலும் அவர்களது தேவைக்கு ஏற்பஉதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சில இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைக்காக ஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவது என்பது வேறு, அரசாணையை எரிப்பது என்பது வேறு. அரசு சார்பிலும் அரசாணையை எரித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பெற்றோருக்குப்பின் பராமரிக்க, காப்பகம் தேவை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, விரைவில் அனுமதி பெற்று  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு பள்ளிகளில், இரு பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க, கெடுபிடி காட்டுவதால் அதிருப்தியடைந்துள்ளனர்.


தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. புத்தக பக்கங்கள் அதிகமாக இருந்ததால், இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. முதல்பகுதி பாடத்திட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் பகுதி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. பாடங்கள் நடத்துவது குறித்து, முதுகலை ஆசிரியர்களுக்கு, இரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.

 சேலம் மாவட்டத்தில், பல மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவால், உயிரியல், தாவரவியல் பாடங்களை, ஒரே ஆசிரியர் நடத்தும் நிலை காணப்படுகிறது. கடந்த, 6, 7ல், தாவரவியல் ஆசிரியர்களுக்கு, இரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, டிசம்பர் 10 (நாளை), 11ல், மேட்டுப்பட்டி, சேலம் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், ஏற்கனவே தாவரவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்கக்கூடாது என, அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்