யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/9/16

சமீபகாலமாக ஆசிரியர்களை ஆட்கொள்ளும் அச்சம் தவிர்க்கமுடியுமா?


முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..

டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 

இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை,www.tnhealth.orgஎன்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

379 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது

தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதா
கிருஷ்ணன் விருதை, தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, 379 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளியில்,இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் விழாவில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், விருதுகளை வழங்குகிறார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'விருதுக்கான ரொக்கப் பரிசு,5,000 ரூபாயிலிருந்து, இந்தஆண்டு முதல், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது' என, தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வியில் காலியிடம் அதிகரிப்பு

இணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில் திணறி வருகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி துறையில், மேல்நிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த பழனிச்சாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, முறைசாரா கல்வி பிரிவுக்கும், பணியாளர் பிரிவு இணை இயக்குனரான கருப்பசாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மெட்ரிக் இயக்குனரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.

இவர்களின் பதவி உயர்வால், காலியான இரண்டு இணை இயக்குனர் பணியிடங்களுக்கும், மூன்று மாதங்களாக புதியவர்கள் நியமிக்கப்படவில்லை.
இடைநிலை பிரிவு இணை இயக்குனர் நரேஷ் மற்றும் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி ஆகியோர், இரண்டு பொறுப்புகளையும், மூன்று மாதங்களாக கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
இதுதவிர, தமிழகம் முழுவதும், 40 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ., பணியிடங்கள், 32 வருவாய் மாவட்டங்களில், கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பள்ளிக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் உதவியாளர், அலுவலக பணியாளர் இடங்களும் காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வியின் மற்ற துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, பெரும்பாலான பணிகள் முடங்கி உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறுகையில், ''காலியாக உள்ள அதிகாரிகள், ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாததால், கல்வித்துறையில் குறித்த நேரத்திற்குள் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகின்றன. அந்தந்த பதவிக்குரிய ஆட்களை நியமித்தால் தான் குழப்பம் தீரும்,'' என்றார்.

மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்வித் துறையில் ஆசிரியர்களாக பணிபுரிந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் சிறந்த தொண்டாற்றுபவர்களின் ஆசிரியர் பணியைப் பாராட்டும் விதமாக தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2015-16ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆரணி வட்டம், சத்தியவிஜயநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயன், செய்யாறு வட்டம், பல்லி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நாராயணன், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயக்குமாரி, சாணாப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பாலமணி, கீழ்ப்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, புதுப்பாளையம் ஒன்றியம், நந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சென்னம்மாள், துரிஞ்சாபுரம் வி.நம்மியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆனக்காவூர் ஒன்றியம், ஆனக்காவூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆரணி ஒன்றியம், மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி, செய்யாறு ஒன்றியம், வடதண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 39 பேருக்கு உடனடி ஆணை

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 39 பேருக்கு மாறுதல் நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 306 ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதுவரை ஆன்-லைன் முறையில் நடைபெற்ற கலந்தாய்வு சனிக்கிழமை மட்டும் ஆப்-லைன் முறையில் நடைபெற்றது.

ஏனெனில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பணிநிரவல் முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததால் விடுபட்ட இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை மூலமே தயார் செய்யப்பட வேண்டியிருந்தது. எனவே, உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மட்டும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களைச் சேகரித்து அவர்களையே நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதியளித்திருந்தது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை சேகரித்து பட்டியல் தயார் செய்திட ஒவ்வொரு பாட வாரியாக தனியாகக் குழு அமைக்கப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இக் குழுவினர், காலிப் பணியிட விவரங்களைச் சேகரித்து அறிவிப்பு பலகையில் வெளியிட்டனர். இதில் ஆசிரியர்கள் தங்களுக்குரிய விருப்பப் பணியிடங்களைத் தேர்வு செய்தனர். ஆங்கிலம், கணிதப் பாடங்களைத் தவிர்த்து இதர பாட ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் இருந்தன. இதில் தமிழ் ஆசிரியர்கள் 54 பேர் கலந்து கொண்டனர். 14 பேருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியர்கள் 127 பேர் கலந்து கொண்டனர். 8 பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர்கள் 49 பேர் கலந்து கொண்டதில் 11 பேர் பணிமாறுதல் உத்தரவு பெற்றனர்.

மனமொத்த மாறுதல் மூலம் 8 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் 39 பேருக்கு பணிநியமன மாறுதல் உத்தரவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் வழங்கினார்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

ஆவணியில் சதுர்த்தி கொண்டாட காரணம்
ஒரு காலத்தில் ஆவணியே மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாக உள்ளது.
இம்மாதத்தில் தான் முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்தார் என்பதால் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான், நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.

இனி திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்பு படிக்கலாம்

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
 இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்பு களில் மற்ற முழுநேரப் பல்கலைக் கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள் ஆய்வு செய் யும் பாடங்களை ஒட்டி மூன்று யூனிட் அளவிலாக பாட வகுப்பு களும் அவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்தி அதில் வெற்றி பின்னரே ஆய்வு களை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக் படித்த மாணவர் களுக்கான ஆய்வு மற்றும் தொழில் வகுப்புகள் கொண்ட பாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்த ஆண்டு முதல், மொழிப் பாடங்கள் மற்றும் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில் பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள் உள்ளன. இதில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும் மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போது திறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்திய தொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்து வந்தது. இந்தப் புகார் களை ஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு 2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப் படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப் படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டு ஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் ?

ஆழ்வார்கள்

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை

அர்த்த சாஸ்திரம்

Today useful news TET TNPSC

TNPSC STUDY MATERIAL

How to Improve Fath

Block list SMS

200 வருடத்துக்கு எந்த தேதிக்கும் நீங்களே எளிமையாக கிழமை காணலாம் தேதி எண்ணிக்கை

பொது அறிவு