ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில், மாநில கல்வியியல் கவுன்சிலின் கருத்தை கேட்ட பின், பாடத்திட்ட மாற்றம் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, 'டெட்' என்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும், பி.எட்., மட்டும் படித்தால் போதாது; டெட் தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகளுக்கு செல்லும்.இந்த ஆண்டு, அக்டோபரில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றம், அரசு பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது எழுந்த முறைகேடு புகார்கள் போன்றவற்றால், தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது.ஆனால், அரசு பணிக்கு ஆள் எடுக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் சேர்வோருக்காக, டெட் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதன்படி, இன்னும் மூன்று மாதங்களுக்குள், டெட் தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வுக்கு, பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.பாடத்திட்டம் மாற்ற வேண்டும் என்றால், பாடத்திட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை புத்தகமாக தயாரிக்க வேண்டும். இதற்காக, புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், அறிவொளியிடம், டி.ஆர்.பி., சார்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவரது கருத்து கிடைத்த பின், அடுத்த நடவடிக்கை துவங்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.