கோவை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்காக, 'வெற்றிப்படி' என்ற, சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2,480 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மாநகராட்சி பள்ளிகளில், அரையாண்டு தேர்வுக்கு பிறகு, காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கவும், தேர்வு எழுதும் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கவும், 'வெற்றிப்படி' என்ற திட்டத்தை மாநகராட்சி துவங்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகமும், 'அறம் அறக்கட்டளை'யும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. கடந்த அக்டோபரில் திட்டம் துவங்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், காலாண்டு தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சிறப்பு வகுப்பில், பயிற்சி அளிக்கப்படுகிறது.
'அறம் அறக்கட்டளை' நிர்வாக அறங்காவலர் லதா கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், குறைந்த மதிப்பெண் பெற்ற, 300 மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சித்தாபுதுார், ராமநாதபுரம், வெங்கிட்டாபுரம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ஒக்கிலியர் காலனி,
வடகோவை, ரத்தினபுரி, வெரைட்டிஹால் ரோடு மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
திட்டத்துக்காக, கமிஷனர், மாநகராட்சி கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி வகுப்புக்கு, 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்துக்காக, 3.5 லட்சம் ரூபாய் அறக்கட்டளை மூலம் செலவிடப்படுகிறது.
வழக்கமாக, வகுப்பறையில் பாடம் நடத்துவது போன்றில்லாமல், 'விஷூவல்' முறையில் பாடம் நடத்தப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.பொதுத்தேர்வில், 35 மதிப் பெண் பெற்று, வெற்றி பெறுவதற்கு பாடத்திட்டத்தில், எந்தெந்த பாடங்களுக்கு, எந்த வினாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒரு மதிப்பெண் வினாக்கள் எந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் என, பல்வேறு தகவல்களுடன் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
'விஷூவல்' முறையில் வகுப்பு நடப்பதால், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றனர். இந்த முறையில் கல்வி போதிப்பதால், மாணவர்களின் மனதில், 80 சதவீதம் ஞாபக சக்தி அதிகரிக்கும். வாரத்தில், புதன் கிழமையில் மாலை நேரத்திலும், சனிக்கிழமையில் முழு நேரமும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. இவ்வாறு, லதா தெரிவித்தார்.
இந்தாண்டு 'சூப்பர் 50'
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், கடந்த ஆண்டு, 'சூப்பர் 30' என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்தாண்டும் அதே திட்டத்தை செயல்படுத்த, பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு நடக்கிறது.
கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''மருத்துவம், பொறியியல் படிப்புக்கு செல்ல, கடந்தாண்டு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இந்தாண்டு, அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை கொண்டு, 'சூப்பர் 50' பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக