மத்திய அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருத பாடம் கட்டாயம் என்றும், யோகா கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இந்த புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட கல்வி பணிக்குழு மற்றும் துறவியர் அமைப்பு சார்பில் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் சாதிக், லயோலா கல்லூரி முதல்வர் சேவியர் ஆரோக்கிய சாமி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வர் ஆக்னஸ் ரொசாரியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறியதாவது:
கல்வி கொள்கையை ஆய்வு செய்யவும், கொள்கை எல்லோருக்குமானது என்பதை புரிந்து கொள்ளவும் கால அவகாசம் தேவை. ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. மதவாத அரசு முன்வைக்கும் கல்வி திட்டம் எல்லோருக்கும் உரியதாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதை தீர ஆய்வு செய்த பிறகே ஏற்போம்.
எனவே, இந்த புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம். வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழக கவர்னரை சந்தித்து புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய கோருமாறு மனு அளிக்க உள்ளோம். தேவைப்பட்டால் முதல்வரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக