மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது:
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும் துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம் போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக