யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/1/17

அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்! நிபுணர்கள் கருத்து

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இதன்படி, ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விட்டன. 
முக்கிய இடங்களில் நடத்த முடியாவிட்டாலும் அவசர சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.மத்திய அரசு இயற்றிய பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது. இதில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கைவிட மறுப்பு
'இந்த சட்டம் தற்காலிகமானது தான்; ஆறு மாதங்களுக்கு தான் செல்லும். இது தேவையில்லை; நிரந்தர சட்டம் தான் வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிடவும் மறுக்கின்றனர்.பார்லிமென்ட் அல்லது சட்டசபை நடக்கும் போது சட்ட மசோதா தாக்கல் செய்து, விவாதம் நடத்தி, அது நிறைவேறும் போது சட்டமாக மாறுகிறது. அதன்பின், அந்த சட்டத்துக்கு கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அப்போது, சட்டம் முழு வடிவம் பெறுகிறது.
சட்டசபையோ, பார்லிமென்ட்டோ கூடாத போது சூழ்நிலையை மற்றும் அவசர தன்மையை கருத்தில் கொண்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. அதாவது, சட்டசபை கூடும் வரை காத்திருக்காமல், அவசர தேவையை கருதி, அவசர சட்டம் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவசர சூழ்நிலை உள்ளது என்பதில் கவர்னர், ஜனாதிபதி திருப்தியடைய வேண்டும்.இந்த அவசர சட்டத்தின் ஆயுள், அதிகபட்சம் ஆறு மாதங்கள் தான்; சட்டசபை கூடியதும், ஆறே வாரங்களில் அவசர சட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். அவசர சட்டம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகலாம். இல்லையென்றால் புதிய சட்டமும் கொண்டு வரலாம்.
முதல்வர் உறுதி
'தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தொடர்பாக, இன்று துவங்க உள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்படும்; மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.இந்த அவசர சட்டம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அவசர சட்டம் என்பது தற்காலிகமானது தான்; ஆனால், இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது; அப்போது, அது நிரந்தமானதாகி விடும்.
ஒரு சட்டத்தை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தால், அது வெற்றி பெறாது; ஏனென்றால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 254(2)ன் கீழ், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால், சிலரது யூகங்களுக்கு அடிப்படை இல்லை. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது:தமிழக அரசு, 2009ல், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம், மத்திய சட்டத்துக்கு முரணாக இருந்ததால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்போது, மத்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால், மாநில சட்டத்துக்கும், மத்திய சட்டத்துக்கும் இடையே முரண்பாடு எழாது.சட்டசபை கூடாத போது அவசர சட்டம் தான் பிறப்பிக்க முடியும். சட்டசபை கூடும் போது அவசர சட்டத்தையே சட்டமாக நிறைவேற்றினால் போதும்; அது, சட்ட வடிவம் பெற்றுவிடும். அவசர சட்டத்துக்கும், நிரந்தர சட்டத்துக்கும் இது தான் வித்தியாசம். இதை புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரமுள்ளது
உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டருமான பி.வில்சன் கூறியதாவது:அவசர சட்டம் பற்றிய முழு தகவல்களும் கிடைக்கவில்லை. அரசின் உத்தரவை பார்த்தால், இந்த அவசர சட்டம், நீதிமன்றத்தின் பரிசீலனையின் போது நிற்காது. ஏனென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது.
அதேநேரத்தில், அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், பொதுவாக நீதிமன்றம் தடை விதிப்பதில்லை. அவசர சட்டம் பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றால் தான் தடை விதிக்க முடியும். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக