யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/3/17

1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகள் ஒரே மாதத்தில் அழிப்பு: பரிசு வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்



பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த 1.24 லட்சம் சீமைக் கருவேல மரங்களை ஒரே மாதத்தில் அழித்து அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஓந்தாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளில் 174 பேர் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் குழுவாகவும், தனியாளாகவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்பயனாக, இதுவரை 1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தவிழிப்புணர்வு நடவடிக்கைக்கு பள்ளித் தலைமையாசிரியர் துரைராஜ், முதுநிலை பொருளியல் ஆசிரியர் ராஜசேகரன், முதுநிலை தமிழாசிரியர் சிவக்குமார் ஆகியோர் தூண்டுகோலாக அமைந்துள்ளனர். இதுதொடர்பாக ஆசிரியர் ராஜசேகரன் கூறியது:

சீமைக் கருவேல மரங்களை அழிப்பது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கடந்த மாதம் 20-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமிருந்து தலைமையாசிரியருக்கு இ-மெயில் வந்தது. இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியரின் அறிவுரையின்படி நானும், ஆசிரியர் சிவக்குமாரும் சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பள்ளி இறைவணக்க நேரத்தில் மாணவர்களிடம் பேசினோம்.

வளர்ந்த சீமைக் கருவேல மரங்களை மாணவ, மாணவிகளால் வெட்ட முடியாது என்பதால், சீமைக் கருவேல செடிகளை வேருடன் பறிக்குமாறும், இதன்மூலம் ஓரிரு ஆண்டுகளில் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தினோம்.
 

அதன்படி, கடந்த 20-ம் தேதி 69 மாணவ, மாணவிகள் 81,276 செடிகளையும், 21-ம் தேதி 18 மாணவர்கள் சேர்ந்து 2,479 செடிகளையும் பறித்து வந்தனர். தொடர்ந்து, பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஊர் முழுவதும் சீமைக் கருவேல செடிகளை அகற்றி வருகின்றனர். ஒரு மாதத்தில் இப்பகுதியில் இருந்த 1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகளைப் பறித்துள்ளனர்.

சீமைக் கருவேல செடிகள் ஒழிப்பு ஒருங்கிணைப்புப் பணியில் பள்ளியின் பிற ஆசிரியர்கள் சார்லஸ், அழகு சுப்பிரமணியன், முனியசாமி, சாந்தி, பவானி ஆகியோரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுத் தேர்வு முடிந்தபின், கோடை விடுமுறை நாளிலும் இப்பணியை தொடருவோம் என்று மாணவர்கள் உறுதியளித்துள்ளனர். மாணவ, மாணவிகளின் ஆர்வத்தை ஊக்குவிக்க, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் சொந்த செலவில் பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வருகின்றனர் என்றார்.


8,000 செடிகளை அழித்த ‘தனியொருவர்’
 

ஆசிரியர் ராஜசேகரன் மேலும் கூறும்போது, “பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் கிஷோர் மட்டும் ஒரே நாளில் தனியாளாக சுமார் 2,000-க்கும் அதிகமான சீமைக் கருவேல செடிகளை பறித்துவந்தார். அவரை ஊக்குவிக்க டீ-சர்ட் பரிசு வழங்கினோம். தொடர்ந்து அவர் இதுவரை 8,000-க்கும் அதிகமான சீமைக் கருவேல செடிகளை பறித்துள்ளார். அதேபோல, 9-ம் வகுப்பு மாணவிகள் கஜப்பிரியா, தனலட்சுமி, சவுமியா, தீபிகா, ராகவி, யுவஸ்ரீ ஆகியோர் இணைந்து 12,500 சீமைக் கருவேல செடிகளை பறித்துள்ளனர். யார் யார் எத்தனை செடிகளை பறித்து வருகின்றனர் என்று தனியாக பதிவேடு வைத்து பதிவு செய்து வருகிறோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக