மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அண்ணா சாலையில்
உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடலூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற இளைஞர் சென்னை அண்ணா சாலையில் உள்ள செல்போன் டவரில் ஏறி இன்று (நவம்பர் 18) காலை போராட்டம் நடத்தியுள்ளார். சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கொண்டு மேலே இருந்து கீழே குதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இதைகண்ட சிலர் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இளைஞரைக் கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதனை மறுத்த ரவிச்சந்திரன் மேலே இருந்து சில துண்டு பிரசுரங்களை கீழே போட்டுள்ளார். அதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பா.ஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஆகியோர் பதவி விலக வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். ரேசன் கடைகளில் அனைவருக்கும் ரூ.10 விலையில் சர்க்கரை வழங்க வேண்டும். எழும்பூர் கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ், மாணவி அனிதா ஆகியோர் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தது தெரியவந்தது.
இதனிடையே செல்போன் டவரில் ஏறிய தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரவிச்சந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரைக் கீழே அழைத்து வந்துள்ளார்.
செல்போன் டவரில் இருந்து இறங்கியதும் அவரைக் கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவர் இதற்கு முன்னதாக நான்கு முறை செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக