நீர் குடிக்கப் பயமா ?
ஆம், குடித்தால்
சிறுநீரகத் தொட்டி
கொள்ளளவு எட்டியதும்
விடுதலை கேட்கும்
மூத்திரத்திற்கு
விடையென்ன சொல்வேன் ?
ஆணைப் போல
அவசரத்திற்கு
திறந்துவிடப்படமுடியாத
உடல் வாகைவிட
நின்று சீறுநீர் கழித்தால்
ஒருத்தியை சமூகம்
எப்படி எடைபோடும்
என நினைக்கும்போதே
அடைத்துக் கொள்கிறது
அத்தனை துவாரங்களும் !
கழிவறைகள் ?
நீங்கள்
அரசுப் பள்ளி
பெண்கள் கழிப்பறையை
கண்டிருக்க வாய்ப்பில்லை,
கண்டபின் இப்படிக் கேட்கவும் தான் !
ஒரு ஆணின் சிறுநீரகத்தைவிட
ஒரு பெண்ணின் சிறுநீரகத்தில்
ஒரு பேக்டீரியப் படையெடுப்பு
எத்தனை இலகுவானதும்
இரக்கமற்றதும் தெரியுமா ?
நீவிர் கண்டறிந்த
எந்த மருந்தையும்
மயிருக்கும் மதிக்காத
எத்தனை பேக்டீரியாக்கள்
ஜனித்திருக்கின்றன தெரியுமா ?
ஒரு முறை தொற்றினால்
வலியென்ற சொல்லின்
உச்சபட்ச அர்த்தத்தை
நொடிக்கொரு முறை
நினைவூட்டிக் கொல்லும்,
மீண்டுவரத் தயங்காமல் !
சரி தீர்வு ?
நுழையும் படியான
ஒரு கழிவறை ?!
அன்றி
சிறுநீர்த் தொட்டியின்
கொள்ளளவு கூட்டல்
சாத்யமில்லை என்பதால்
அருந்தப் பயந்து சாதல் !
நீரின்றி அமையுமாம்
அரசுப்பள்ளி
மாணவியின் உலகம் !
- வினோதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக