தொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!
தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல்திட்ட இயக்குநராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த மாதம் 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதையடுத்து இம்மாதம் 3-ம் தேதி தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத்துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார். புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். தற்போது, தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், இந்தத் துறையிலும் பல புதுமைகளை, மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.தமிழக தொல்லியல் துறை தொல்பொருளியல், ஆய்வியல், ஆய்வகம், நூலக ஆய்வு கையெழுத்துகள், புகைப்படம் அச்சிடும் தளம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தளங்களில் செயல்பட்டு வருகிறது. அதோடு, மிகப் பழைமையான கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயக் கடமை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக் கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.
கோயில்கள் பாதுகாப்பு:
தொன்மையான கோயில்களைப் பராமரிக்க, அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறது தொல்லியல் துறை. அப்படி இருந்தாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல கோயில்கள் இடிந்து போகும் நிலைக்குச் செல்கின்றன.
நடுகற்கள் பாதுகாப்பு:
வேலூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. 2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவிலும், இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள், ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ளவற்றையும் தற்போது அறிய முடிகிறது. இந்த நடுகற்கள் இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதுபோல தமிழகத்தில் பல நடுகற்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.
செப்பேடுகள் பாதுகாப்பு:
2,300 ஆண்டுகளுக்கு முன், செப்புப் பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளைக் குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்படாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.
பெருங்கற்கால கல்திட்டு:
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் திட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைச் சுற்றி எண்கல் வட்டங்கள் அமைக்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்து, இது 'பெருங்கற்காலம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியில், கி.மு., 1000 முதல் கி.பி. 500-ம் ஆண்டைச் சேர்ந்த மக்கள் வசித்துள்ளனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்ததன் நினைவாக கல்திட்டுக்களும் இங்கு உள்ளன. கட்டடக் கலையின் தொடக்கம் இதுபோன்ற கல்திட்டுகள் தான் என்கிறார்கள் அறிஞர்கள். இதுபோன்ற கல்திட்டுகள், இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. இவற்றையும் கண்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.
மலை சிற்பங்கள்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், தொல்லியல் துறை இதை முறையாகப் பராமரிப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் இம்மலையை வழிபாட்டுத் தலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மிகவும் பழைமையான அரியச் சிற்பங்கள் இங்கு உள்ளன. இதுபோன்ற மலைச் சிற்பங்கள் தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைக் கண்டுபிடித்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.
அகழ்வாராய்ச்சி:
திண்டுக்கல் அருகே பாடியூர் மேட்டுப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதிலமடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்த இடத்தில் போர் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் பல பொருட்கள் கிடைக்கும் என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். இன்னும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் அதிக இடத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றை சேமித்து, அதைப் படியெடுத்து சேமிக்க வேண்டும்.
கீழடி:
கீழடியில் தற்போது 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லை. இதுவரை கீழடியில் நடந்த அகழாய்வு குறித்த முழு விவரத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக