மன அழுத்தம் என்பதற்கான சரியான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காரணம், தினசரி வாழ்க்கையில், அந்தந்த நேரத்தில், யார் மீதேனும் கோபம், எதன் மீதாவது வெறுப்பு, ஏமாற்றம் வந்தால், உடனே, 'பயங்கர டிப்ரஷ்ன்னா இருக்கு' என்று சொல்வது சகஜமாகி விட்டது. இவையெல்லாம், வெளிக்காரணிகளால், தற்காலிகமாக ஏற்படும் எதிர்மறை உணர்வுகள்.
மருத்துவ ரீதியில், மன அழுத்தம் என்பது இதைக் காட்டிலும், சிக்கலான, உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம். நமக்கு நெருக்கமானவர்கள், சோகமாக, கவலையாக இருந்தால், என்ன காரணம் என்பதை அக்கறையாக விசாரிக்க வேண்டியது முக்கியம்.
பகிர்ந்து கொள்ளுவதே, பாதுகாப்பு உணர்வைத் தரும். தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு, இதே மனநிலையில் இருந்து, உடல் நிலையிலும் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், கண்டிப்பாக மனநல ஆலோசனை பெறுவது அவசியம்.
மன அழுத்தத்திற்கான பொதுவான அறிகுறிகள்
* வெளியில் செல்லாமல், வீட்டிலேயே அடைந்து கிடப்பது.
* எதிலும் ஆர்வம் இல்லாமல், நண்பர்கள், குடும்பத்தினருடன் விலகியே இருப்பது.
* கவனமின்மை; வழக்கமாகச் செய்யும் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது.
* குற்ற உணர்வு, எரிச்சல், சோகம், விரக்தி, தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது.
* உடல் ரீதியில் சோர்வு, தலைவலி, தசைகளில் வலி, இறுக்கம், துாக்கமின்மை, செரிமானப் பிரச்னை, காரணம் இல்லாமல் உடல் எடை குறைவது.
இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமான பிரச்னைகளோ மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
மன அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மனநல ஆலோசனையுடன் மருந்துகளும் தேவைப்படும்.
மன அழுத்தம், எந்த அளவு தங்களை பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அல்லது அதே வலியை உடலிலும் உணர விரும்பி, கிள்ளுவது, அடிப்பது என்று தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வர். இதை புரிந்து, அந்த மனநிலையில் இருந்து வெளியில் வர அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம்.
மனநலம் தொடர்பான எந்த பிரச்னை வந்தாலும், இது குறித்து, வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
இதயத்தில் பிரச்னை என்றால், எந்தத் தயக்கமும் இல்லாமல், உடனடியாக டாக்டரைப் பார்க்கிறோம். மன அழுத்தம் என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களில் ஏற்படும் மாற்றத்தால் வரும் பிரச்னை.
முறையான ஆலோசனை, மருத்துவ சிகிச்சையோடு, யோகா, தியானம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தில் அவசியமான மாற்றங்களை செய்தால், மன அழுத்தத்தில் இருந்து, முற்றிலும் வெளியில் வரலாம்.
டாக்டர் அன்னா சாண்டி
மனநல ஆலோசகர்,
லிவ் லவ் லைப் பவுண்டேஷன், பெங்களூரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக