யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/6/17

NEET : மாநில அளவில் கோவை மாணவர் முதலிடம்



இவர் நீட் தேர்வில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 260-ஆவது இடம் பெற்றுள்ளார்.

2015-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வை முடித்த இவர், முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், அதே ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். எனினும் முதலாமாண்டு முடித்ததும் பொறியியல் படிப்பைக் கைவிட்டு, நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த எனக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தேர்வெழுதுவதற்கு பயிற்சி மையத்தில் பெற்ற பயிற்சிதான் உதவியது என்றார்.
சென்னை மாணவர்: தமிழக அளவில் இரண்டாவது இடத்தை சென்னை மாணவர் கே.ஆதித்யா பிரணவ் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 648 மதிப்பெண்ணும், அகில இந்திய அளவில் 351-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். தேர்வு முடிவு குறித்து அவர் கூறுகையில், ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வைக் காட்டிலும் நீட் தேர்வு எளிதாகவே இருந்தது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலானோர் தேர்வு எழுதியதால், என்னுடைய தரவரிசை குறைந்துவிட்டது என்றார்.
மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன் பிடித்துள்ளார். இவர் 646 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 391-ஆவது இடத்தையும், டி.ஆர்.ஜீவா என்ற மாணவர் 645 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 404-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டம்!அமலுக்கு வரும் கல்வியாளர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு 2018-19 முதல் 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கடுத்த ஆண்டில் 2,7,10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-2021 கல்வியாண்டில் 3,4,5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.


முன்னதாக, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. இப்போது உலக அளவில் அறிவியல் சமூக, பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் கணக்கில்கொண்டு, அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர். அது மட்டுமின்றி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றிபெறும்வகையில் அவர்களைத் தயார்செய்யவேண்டிய தேவையும் எழுந்தது. இது குறித்து அரசுக்கு கல்வியாளர்களும் ஆசிரியர்கள் தரப்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அதையடுத்து பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வல்லுநர் குழுவும் அதன் கருத்துப்படி மூன்று உட்குழுக்களும் அமைக்கப்பட்டு, ஆலோசனை பெறப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சரின் தலைமையில் வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில்தான் இந்தப் பாடத்திட்ட மாற்றம் குறித்து மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஒன்று, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலான பாடத் திட்டம் மாற்றம் பற்றியது. இரண்டாவதாக, மேல்நிலைக் கல்வியில் கற்பிக்கப்படும் தொழிற்கல்வியை மாற்றும் திட்டம். மூன்றாவதாக, தகவல்தொழில்நுட்பவியல் பாடத்தைச் சேர்ப்பது.
தற்போது தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை, கணினி பற்றியோ தகவல் தொழில்நுட்பவியல் பற்றியோ பாடம் சேர்க்கப்படாத நிலையே நீடிக்கிறது. அதனால் உயர்நிலையின் ஐந்து வகுப்புகளிலும் அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்பவியல் பாடம் சேர்க்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தொழில்கல்வியைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 12 வகையான பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பாடத்திட்டமானது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டன. அதனால், இப்போது அதிவேகமாக நடந்துவரும் தொழில்வளர்ச்சிக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இது மட்டுமில்லாமல் தொழிற்கல்வி மாணவர்கள், சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி பெறும்படியாகவும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்ற தொழில்சார் பல்கலைக்கழகங்களின் உதவியோடு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது, தொழிற்கல்விப் பாடத்திட்டத்தில் மாற்றத்தைச் செய்யும்.

மற்ற பாடத்திட்டக் குழுக்களைப் போல அல்லாமல், தமிழக நிலைமைக்கு ஏற்ற தொழிற்கல்வி எது எனத் தீர்மானிக்க, தனியான ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும். இதில் தற்போது கற்பிக்கப்படும் 12 வகைப் பாடங்களை மாற்றியமைப்பதா அல்லது புதிய பாடங்களை அமைப்பதா என அக்குழு அலசி ஆராயும். அதன்படி முதலில் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் ஐந்து பாடங்களுக்கு புதிய பாடநூல்கள் தயாரித்து வழங்கப்படும். மீதமுள்ள வகையினங்களுக்கு அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

மேலும், இணையவழிக் கல்வியை ஊக்குவிக்கும்வகையில் விரிவான கல்வி மேலாண்மைத் தளத்தை உருவாக்கவும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய செயலிகளை உருவாக்கவும் பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான தேவைகளைப் பற்றி அரசுக்கு கருத்துரு அனுப்பவும், ஆறு மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றும் பணியை முடிக்கவும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநருக்கு, பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் த. உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வூதியம் என்றால் என்ன?

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்காக தங்களுடைய இளமை
காலம் முழுவதும் உடல் பலமாக இருக்கும் போது அரசுக்கும் மக்களுக்கும் இடையே அச்சாணியாக சுழன்று  அரசுக்கும் மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம்
முழுவதும் முழு உழைப்பை செலுத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் முதுமை அடைந்து நாடி நரம்புகள் சுருங்கிய பின்பு எந்த வேலையும் செய்ய இவர்களது
உடல் தகுதியற்றது எனும் போது 58 வயதில் பணியிலிருந்து அரசால் ஓய்வு
அளிக்கப்படுகிறது. அவ்வாறு ஓய்வு பெற்றவர்கள் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் சமுதாயத்தில் கெளரவமாகவும் வாழ்வதற்கும்           
  மற்றவர்நகளை    நம்பி இருக்காமல் வாழ்வதற்கும், 20 ஆண்டுகளுக்கு
மேல் அரசாங்கத்திற்காக உழைத்த உழைப்பிற்காக அரசால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓர் ஊதியம் வழங்கப்படுகிறது.அந்த ஊதியமே ஓய்வூதியம் எனப்படுகிறது.ஓய்வூதியம் என்பது முதுமை வாழ்க்கையின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. அந்த ஓய்வூதியம் என்பது 2003க்கு பின்னர் அரசு பணியில்
சேர்ந்தவர்களுக்கு கேள்வி குறியாகவே உள்ளது.  

கேள்வி குறியான ஓய்வூதியம்
 அதாவது 1.4.2003க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றோர்
மற்றும் பெறுவோரின் ஓய்வுக்கு பின் உயிர்வாழ அடிப்படை தேவைகளான உணவு ,உடை,மருத்துவம் போன்றவற்றிற்காக முதுமையில் சாலையில் கண்டவர்களிடம் கையேந்தி நிற்றல், யாராவது கொடுப்பாரா ?என எதிர்பார்த்திருத்தல், தள்ளாடும் நிலையில் மருந்துகள் வாங்க காசு இல்லாமல் சாகுதல், பணமில்லாததால் உறவுகளால் வீதியில் தள்ளப்படுதல், ஒரு வேலை சாப்பாட்டிற்காக வேறுவழிஇல்லாமல் ஏரி வேலை செல்லுதல் போன்ற அவலநிலைகளுக்குஉள்ளாகுகின்றனர்.இதற்கு காரணம் தற்போது நடைமுறையிலுள்ள cps என்னும் புதிய பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் தான். இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும்/  
பெறுபவர்களுக்கும் ஓய்வூதியம் என்பதே இன்று வரை கிடையாது. Cps பணிபுரியும் ஊழியர்களாகிய நாம் ஓய்வு பெற்ற பின்
ஓய்வூதியம் இல்லாமல் அடிப்படை தேவைகளுக்காக நடுரோட்டில் கையேந்தி நிற்போம் என்பதில் எந்த வித மாற்றமில்லை என்பதை அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்.

ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்

ஓய்வூதியத்திற்கு நீதித் துறையின் அங்கங்கமான நீதி மன்றத்தாலும், இந்திய
அரசியலமைப்பாலும் ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமையென பல்வேறு
வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இனி காண்போம்.

நீதித் துறையின் படி ஓய்வூதியத்தின் வரையறைகள்
நமது நாட்டின் நீதித் துறையின் மிக உயர்ந்த அங்கமான உச்ச நீதி மன்றத்தால்
வழங்கப்படும் தீர்ப்புகள் என்பது எழுதப்படாத சட்டமாக கருதப்படுகிறது.அவ்வாறே ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளில் ஓய்வூதியம் என்பதை  உரிமையென்றே வரையறை செய்யப்பட்டுள்ளது. அவைகளான
# ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி 17.12.1982 அன்று
நகரா என்பவர் இந்திய அரசின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பின் படி ஓய்வூதியம் என்பது நன்கொடையோ அல்லது கருணை தொகையோ அல்ல. அது ஓய்வூதியர்களின் மதிப்புமிகு உரிமை என்றும் அரசு ஊழியர்களின்
நீண்ட கால மற்றும் திறமையான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

# ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த ஜித்தேந்திர குமார் என்பவர் ஓய்வூதியம்
தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஓய்வூதியம் என்பது ஊழியரின்
உரிமையாகும்.இதனை இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 31 B உறுதி செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் படி ஓய்வூதியத்தின் வரையறைகள்

@ ART-14 சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்.(உரிமைகளை வழங்கும் போது முன்/பின் என்று வேறுபடுத்தி உள்ளது.)

@ ART-31B, சில சட்டங்களையும், ஒழுங்கு விதிமுறைகளையும் செல்லத்தக்கவனவாக்குதல்.

@ ART-41,முதுமை நோய் இயலாமை மற்றும் உடல் ஊனம் போன்ற நேர்வுகளின் போது அரசு வழங்க வேண்டிய உதவிகளை செய்து சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட வாழ்க்கை
வாழச் செய்வதே சேமநல அரசு செய்யும் பணி என்று வரலாற்று சிறப்புமிக்க
தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

@ ART-148 நகரா வழக்கின் தீர்ப்பில் அரசியல் சட்டம் 309 மற்றும்
148(5)ன்படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட்ட வேர்
ஊன்றி நிலைத்த உரிமையாகும் என்று ஓய்வூதியர்களுக்கு ஒரு உரிமை சாசனம்
(Magna carta) வழங்கியுள்ளது.

@ ART-309 ஒரு மாநிலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணியின்  
 வரையறைகள், விதிகள் மற்றும் ஊதியங்கள் போன்றவற்றை மாநில அரசு வரையறை செய்யப்படவேண்டும். மேலும் அவ்வொழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்கள் உயிர்வாழ்வதற்க அந்தந்த மாநில அரசிடமிருந்துஓர் ஊதியம் பெற உரிமை உடையவராவார். இச்சரத்தின் அடிப்படையிலே தமிழக அரசும் தமிழ்நாடு ஓய்வூதிய
விதிகளை  1978இல் உருவாக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்குவது நடைமுறையில்
உள்ளது.ஆயினும் 01.04.2003க்கு பின் தமிழக அரசில்  பணிநியமனம்
பெற்றவர்களுக்கு இந்த பழைய ஓய்வூதிய திட்டம் பொருந்ததாது. 
இதன் தொடர்ச்சி  அடுத்த பதிவில்.
 இவன்
அ.ஜெயப்பிரகாஷ்
அரூர் ஒன்றியம்.தருமபுரி.

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம்

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது.தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும்.

இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்.

ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்குதனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும்வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார்.

ஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..! #Kiddle

குழந்தைகள் வளர்ப்பில் மிக முக்கியமானது குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது எதைக் கொடுக்க கூடாது என்பதுதான். மூன்று வயதுள்ள குழந்தைகள் தொடங்கி  பத்து வயதுள்ள குழந்தைகள் வரை மொபைல் மற்றும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகம். 
அடம்  பிடிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக குழந்தைகளிடம் மொபைல் போனைக் கொடுப்பது அவர்களின் வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வீடியோ கேம்ஸில் ஆரம்பித்து இணையத்தில் தேடுவது வரை இணையத்தில்  நினைத்து பார்க்க முடியாத  ஆபத்துகளும், நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைத்தான் கொடுக்கிறோமா?தன்னுடைய குழந்தை மொபைல் வைத்திருக்கிறது என்பதை பெற்றோர் ஒரு வித கெளரவமாக  பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான்கு வயது குழந்தையின் அப்பா ஒருவர் பேசும் போது "என்னோட பையன் மொபைலை கைல குடுத்தா தான் அமைதியா இருக்கான், நா எப்போ வீட்டுக்கு வருவேன்னு பாத்துட்டே இருப்பான், அப்பாவ  எதிர்பார்த்து இல்ல, என்னோட மொபைலை எதிர்பார்த்து, நாபோனதும் மொதல்ல மொபைலை வாங்கிடுவான், அதுலயே தான் இருக்கான், எனக்கு தெரியாத எது எதையோ கண்டு பிடிச்சு சொல்றான், எனக்கே ஆச்சர்யமா இருக்கும்" என்கிறார் பெருமையாக.அனேக வீடுகளில் இணையதள சுதந்திரம் என்பது  வரையறுக்கப்படாததாகவே இருக்கிறது. பெற்றோர், ஆசிரியரிடம் கேட்கத் தயங்குகிற சில விஷயங்களை இப்போதெல்லாம்  குழந்தைகள், நேராக இணையத்தில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இணையத்தை தேடிப் போகிற குழந்தைகள் பார்க்க கூடாத விஷயங்களை எல்லாம் பார்ப்பது, அதைப்  பற்றி சிந்திப்பது  எல்லாம்  உளவியல் ரீதியாக குழந்தைகளுக்கு  பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தைகளிடமிருந்து இணையத்தையும் மொபைலையும் பிரிக்க முடியாது எனும்போது  அவர்களின் எதிர்காலம் கருதி என்னவெல்லாம்செய்யலாம், அதிலிருந்து எப்படி குழந்தைகளை மீட்பது என யோசிக்கிற பெற்றோர்களுக்காகவே வந்திருப்பதுதான் கிடில் (Kiddle)மற்ற சர்ச் எஞ்சின்களில் நாம் எதைத் தேடினாலும் அந்தப்பக்கங்களில் தேவை இல்லாத ஒரு தளத்தின் பாப் அப் வந்துவிடுகிறது.

 தவறுதலாக அப்பக்கங்களை தொட்டு விட்டால் அவை ஆபாச பக்கங்களுக்கோ விளம்பர பக்கங்களுக்கோ கொண்டு சென்று விடுகிறது. அப்படி எந்தஇடையூறுகளும் இல்லாத, குழந்தைகளின் உலகத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதை மட்டும் கருத்தில்கொண்டு கூகுள் வடிவமைத்திருக்கிற சர்ச் எஞ்சின்தான் "கிடில்". கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு , சினிமா, அரசியல் எனஎதைப் பற்றி தேடினாலும் ஆபாசங்கள் இல்லாத பயனுள்ள தகவல்களை மட்டுமே தருகிறது கிடில். குழந்தைகளுக்காக சிறந்த எடிட்டர்களைக்கொண்டு ஆக்கபூர்வமான விஷயங்களைமட்டும் பதிவேற்றுகிறது. குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக செய்திகளோடு படங்களையும் இணைத்திருக்கிறது கிடில்.  கிடிலின் ஸ்லோகனாக"விசுவல் சர்ச் எஞ்சின்" என அடை மொழி வைத்திருக்கிறார்கள்.

kiddle - கிடில்

ஆபாச வலைத்தளங்களுக்கு அழைத்துச் செல்லும் எந்த பெயரை  டைப் செய்தாலும் நகர மாட்டேன் என அடம்பிடிக்கிறது கிடில். உதாரணத்துக்கு சினிமா சார்ந்த விஷயங்களை தேடினால் ஆபாசங்கள் இல்லாத பயோடேட்டாக்களை மட்டுமே காட்டுகிறது. கார் என்று தேடினால் கார்கள் பற்றிய தகவல்களுடன் கார் பற்றிய பாடல்கள், கட்டுரைகள் என குழந்தைகளின் பயணம் பற்றிய விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது.

எல்லாத் தேடல்களிலும் எதிர்மறையான விஷயங்களை தவிர்த்து நேர்மறையான விஷயங்களை மட்டுமே அள்ளி வந்து தருகிறது கிடில்.மொபைலில்  கிடில் சர்ச் எஞ்சினை  அப்டேட் செய்து விட்டு குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் தவறான பல தளங்களுக்கு   செல்வது கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு மொபைலையோ கணினியையோ கொடுத்து விட்டு தைரியமாக இருக்கலாம். ஆனால்,  அவ்வப்போது அவர்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம், நவீன அப்டேட் காலத்தில் நமக்கு தெரியாத பல விஷயங்களை குழந்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. 
முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை அரசு எதிர்த்து வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க சட்டம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு, அதை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த சட்டம் ஒப்புதலுக்காக மத்திய அரசால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதன் காரணமாக தமிழகம் உட்பட நாடுமுழுவதும் நீட் தேர்வுகள் நடந்து, நேற்று முடிவுகளும் வெளியானது. இதில், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவின் கீழ் பயின்றவர்கள்.

இந்நிலையில், நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இது மாணவர்கள், கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவிலான ரேங்கிங் வெளியிடப்படாது என்பதால், மாநில அளவில் யார் முதலிடம் பிடித்தார்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

நீட் தேர்வு சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவை மையப்படுத்தி நடந்தது என்பதால், தமிழகத்தில் பெரும்பாலும் சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவில் பயின்றவர்களே மருத்துவ பாடத்தைப் பயில முடியும் என்ற சூழல் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பலர் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே எடுத்துள்ளனர். இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பலருக்கு, மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடை தவிர்த்த இடங்களில், 85 சதவிகிதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவிகிதம் இடங்கள் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

ஓரிரு நாளில் விண்ணப்ப வினியோகம் துவங்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு ஓரளவு ஆறுதலைத் தரக்கூடும் என நம்பப்படுகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை ஏற்கெனவே குஜராத் மாநிலம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்  மருத்துவ பாடச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என தமிழக அரசு ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு அனுமதி பெற தொடர்ச்சியாக முயற்சிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செல்லாததாகிவிடும். தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது என்பதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில், தற்போது மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி அரசு அறிவிக்கும்போது அதற்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவ கல்விக்கான சேர்க்கை என்பது இந்த முறை மிகுந்த குழப்பத்துக்குள்ளாகியுள்ளது.

எம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் - விஜயபாஸ்கர்

மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் நீட் தர வரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது மருத்துவ கனவுகளுடன் கொண்ட மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவபடிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களைமாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணையை இன்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார்.

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்சரோஜா அறிவிப்பு

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமானிய கோரிக்கைமீது நடந்த விவாதத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் பேசுகையில், 

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 3 சக்கர ஸ்கூட்டர் மோசமான நிலையில் இருந்தால் திமுக ஆட்சியின் போது புதியவாகனம் வழங்கப்பட்டது. தற்போது புதியவானகங்கள் இருப்பு இல்லை.அதே நேரம் பழுதுபார்த்தும் தரப்படுவதில்லை. இதற்கு ஒதுக்கப்பட்ட தொகையும் பயன்படுத்தப்படவில்லை.பள்ளிக்கல்வித்துறை மற்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாநிலஆணையர், துறை செயலர் பதவிகள் காலியாக உள்ளன. சமூக நலத்துறையில் குறிப்பிட்ட திட்டங்களில் அதன் இலக்குகள்எட்டப்படவில்லை. திருநங்கை நலவாரியம் செயல்படாமல் உள்ளது. அங்கன்வாடிகளில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும்'' என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரோஜா, ''பிச்சைக்காரர்கள், தெருவோர வாசிகளை மறுவாழ்வுக்காக நேரடியாக சமூக நலத்துறை ஏற்க முடியாது. காவல்துறையினர் அவர்களை ஒப்படைத்தால் மட்டுமே அடுத்த கட்டமாக மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.சிறப்பாசரியர்களுக்கு ரூ.5ஆயிரமாக இருந்த தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

NEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்குஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு, மானபங்கத்திற்கும் உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தது போலவே, தமிழகத்துக்கு இத்தேர்வு சாதகமாக அமையவில்லை.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

*தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி ?*

ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா?
நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா?
அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
MBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்!
*1)* தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 
அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப்படும்.
*2)* இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.
*3)* அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.
அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.
*4)* இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.
*5)* அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் 
தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள் பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.
*6)* (SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்
பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்)
PERCENTILE வேறு PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
*7)* பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில்
பதியப்படும்.
*8)* இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
*9)* அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.
*10)* இதுவரை கூறிய அனைத்தும் தமிழ்நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை 
பூர்த்தி செய்ய வேண்டும்.
அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.
(domicile status: Tamilnadu)
ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் 
பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.
*11)* இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.
*12)* இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.
*13)* பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு 
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது
45 சதம் ஆகும்.
*14)* இப்படித்தான் அட்மிஷன் நடைபெறுகிறதே 
அல்லாமல் வேறு எப்படியும் அல்ல.
*பின்குறிப்பு-1:* 
தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் 
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசிப்பிடச் 
சான்றிதழ் (DOMICILE CERTIFICATE) சமர்ப்பிக்கத் தேவையில்லை
*பின்குறிப்பு-2:* 
பெற்றோரின் இடமாற்றல் காரணமாக மாணவன் வெளி மாநிலத்தில் படிக்க நேர்ந்தால், அவன் DOMICILE CERTIFICATE சமர்பிக்க வேண்டும்.

24/6/17

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - RTI

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89
லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய்ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை.தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது.இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார்.


அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு ஊழியர் கூட்டுறவு தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு

பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் அரசு, பொது மற்றும் தனியார்துறை பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு தனிநபர் கடன் 7 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது.
விலைவாசி மற்றும் சம்பள உயர்வு காரணமாக அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென, சிக்கன நாணயச் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் வங்கிகளில் பணியாளர்களின் ஊதியம் அடிப்படையில் தனிநபர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பை 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த உத்தரவில், கடனை 120 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். மொத்த சம்பளத்தில் 25 மடங்கு (அ) 12 லட்சம் ரூபாய் இதில் எது குறைவோ அத்தொகையே கடனாக வழங்கப்படும். பணியாளர்களின் மொத்த ஊதியத்தில் அனைத்து பிடித்தங்களும் போக வீட்டிற்கு கொண்டு செல்லும் ஊதியம் 25 சதவீதத்திற்கு குறைவாக இருக்காதபடி கடன் வழங்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்:
தரவரிசை பட்டியலை www.annauniv.edu, www.tnea.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
*பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 27ம் தேதிநடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
*பொறியியல் 200க்கு  200 கட்- ஆப்  59பேர்.இந்தாண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இன்ஜி., கலந்தாய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் 59பேர் 200க்கு 200-ம், 811 பேர் 199-ம், 2,097 பேர் 198, 3,766 பேர் 197 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.பொது தேர்வு முடிவுகளை போன்று முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

டிப்ளமா' ஆசிரியர்: இன்று ஹால் டிக்கெட்

டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்றுமுதல், ஜூலை, 5 வரை, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பில், இரண்டாம் ஆண்டுக்கு, ஜூன், 28 முதல், ஜூலை, 12 வரையும், முதல் ஆண்டுக்கு, ஜூன், 29 முதல், ஜூலை, 14 வரையிலும் தேர்வு நடக்கிறது.இதற்கு விண்ணப்பித்த, தனித்தேர்வர்கள் மற்றும் தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள், தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல்ஜூலை, 5 வரை, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் இன்று(ஜூன் 23ம் தேதி) வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.மறு கூட்டலில் மாற்றம் இல்லையெனில் இணையதளத்தில் முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு :

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அந்த பணியை செய்ய இருக்கிறது. அதில் கலைதிட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தயாரித்து  வடிவமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணியை அனுபவம் மிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இணைய தளம் மூலம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த கால அவகாசம் ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இன்ஜி., மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.
பின் அவர் அளித்த பேட்டி: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஜூன் 27ல் துவங்க திட்டமிட்டுள்ளோம்.ஆனால், நீட் தேர்வு முடிவு தாமதமானால், கவுன்சிலிங் தேதி தள்ளிப்போகும். தற்போதைய நிலையில் 200க்கு 200, 'கட் ஆப்' பெற்றவர்கள் 59 பேர் உள்ளனர். இவர்களில் 36 பேர் மருத்துவப் படிப்பில் இடம் பெற வாய்ப்புள்ளது. 199 கட் ஆப் பட்டியலில் உள்ள 811 பேரில் 645 பேரும்; 198 கட் ஆப் பட்டியலில் உள்ள 2,097 பேரில் 1,681 பேரும்; 197 கட் ஆப் பட்டியலில்உள்ள 3,766 பேரில் 3,014 பேரும் மருத்துவப் படிப்புஇடம் பெற தகுதியுடன் உள்ளனர்.இவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால், அவர்கள் இன்ஜி., படிப்புக்கு வர மாட்டார்கள். எனவே இன்ஜி., கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்தினால் மருத்துவம் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் இன்ஜி., இடங்கள் காலியாகி,அதை மீண்டும் நிரப்ப முடியாத சிக்கல் ஏற்படும்.எனவே, மருத்துவ கவுன்சிலிங்குக்கு பின்பே இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 31க்குள் இன்ஜி., கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும்.தற்போது நீட் தேர்வால், இன்ஜி., கவுன்சிலிங் தள்ளிப்போகும் என்பதால் ஜூலை 31க்கு பிறகும் கவுன்சிலிங் நடத்த, சட்டரீதியாக அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 11 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 67 படிப்புகள், கல்லுாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 527 கல்லுாரிகளில், இரண்டு லட்சத்து, 85 ஆயிரத்து 844 இடங்களுக்கு, அரசுமற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இடங்களின் எண்ணிக்கை, இறுதி நேரத்தில் மாறும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் தர்ணா - கைது :

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டில் கணினிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 330 பேர் கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு மாதம் ரூ.4000 என தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது.
இவர்கள், கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கால முறை ஊதியம் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு தரப்பில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு அறப்போராட்டம் நடத்தினர்.


நேற்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்த கணினி பயிற்றுநர்கள் அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு போவதாக பதிவு செய்துவிட்டு உள்ளே வந்தனர். பின்னர் 11.30 மணி அளவில் இரண்டாவது நுழைவாயில் அடுத்துள்ள அருங்காட்சியகத்தின் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சட்டப்பேரவை கூட்ட நிகழ்ச்சி தொடங்கி உள்ளே விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது கணினி பயிற்றுநர்கள் அந்த வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பதற்றம் அடைந்தனர். அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.கூடுதல் ஆணையர் கேள்வி : தர்ணாவில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பயிற்றுநர்களைபோலீசார் தூக்கி தலைமைச் செயலகத்துக்கு வெளியில் கொண்டு சென்றனர். அங்கும் அவர்கள் தர்ணாவில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

 இந்த பரபரப்பு சம்பவத்தால் அங்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்த கூடுதல் ஆணையர் ஜெயராமன், போலீசாரை கடுமையாக எச்சரித்தார். தர்ணாவில் ஈடுபட்டவர்கள் எப்படி உள்ளே வந்தனர். அவர்களை எப்படிஅனுமதித்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.இதனால் போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

CLICK HERE FOR NEET - 2017 RESULTS
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் கடந்த 12 ஆம் தேதி அனுமதி அளித்திருப்பதை அடுத்து, இன்று அல்லது நாளை என எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுவை சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) மே 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 11.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது சிபிஎஸ்இ பதில் விளக்கம் அளித்திருந்தது. அப்போது, ஜூன் 8 ஆம் தேதியே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

சிபிஎஸ்இ விளக்கத்தை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நீட் தேர்வு முடிவுகளை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.