பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, தற்கால தொல்லியல் ஆய்வுகள் என்ற பாடத்தை, தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்று விளக்கினால், கடந்த கால வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
பள்ளி மாணவர்கள் மத்தியில், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், நினைவுச்சின்னங்கள், பழங்கால மக்களின் வாழ்க்கை முறை குறித்து, எடுத்துரைக்கும் நோக்கில், பல்வேறு தலைப்புகளில், பாடத்திட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், தற்காலக தொல்லியல் ஆய்வுகள் குறித்த, துணைப்பாடம் உள்ளது. இதில், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், செப்பேடுகள், கட்டடங்களின் தன்மை குறித்த, பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, தர்மபுரி, கரூர், மதுரை மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட, தங்கம், வெள்ளி, இரும்பு உலோகத்தால் ஆன காசுகள், அதில் பொறிக்கப்பட்ட சின்னங்கள் குறித்த, சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இப்பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண்களுக்கு, அகழாய்வு குறித்த தலைப்புகளில், கேள்வி இடம்பெறும். இதில், மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவதோடு, தொல்லியல் துறையின் பணிகள், அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க, அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்று, விளக்க வேண்டியது அவசியம். இதன்மூலம், பாடத்திட்டம் சாராத பல்வேறு, கூடுதல் தகவல்களை, மாணவர்கள் அறிந்து கொள்வர்.
கோவை மாவட்டத்தில், ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் ரோட்டில், தொல்லியல் துறையின் அருங்காட்சியகமும், வ.உ.சி., பூங்கா எதிரே, அருங்காட்சியத்துறையின் அருங்காட்சியமும் உள்ளன. இங்கு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, அதிகாரிகள் உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:
பல்வேறு பரிணாமங்களை கடந்து தான், நாகரிக உலகம் உருவெடுத்துள்ளது. கால்நடை வளர்ப்பு, விவசாயத்தில் காலுான்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பழங்கால வர்த்தக பரிமாற்றம், வெளிநாட்டினரின் படையெடுப்பு, நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, தொழில், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஆவணப்படுத்துவது அவசியம்.
இப்பணியை, தொல்லியல் துறை அகழாய்வு மூலம் மேற்கொண்டு வருகிறது. இதை மாணவர்களுக்கு வெறுமனே எடுத்துக்கூறுவதை விட, அருங்காட்சியத்திற்கு அழைத்து சென்று, பாடம் நடத்தலாம்.
இதன்மூலம், கோவை மாவட்டத்தின் சிறப்புகள், தொல்லியல் அகழாய்வு நடந்த இடங்கள், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அதன் பயன் குறித்து, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வர்.
எதிர்காலத்தில், தொல்லியல் துறை படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுக்கும், விதை போட்டது போலாகிவிடும். இதை, பள்ளிகளில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.