நீட்' தேர்வால், மருத்துவப் படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படுமா என்ற குழப்பத்திற்கு, சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு களில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபை யில் மசோதா நிறைவேற்றப் பட்டது. அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் இன்னும் கிடைக்க வில்லை. 'நீட்' தேர்வுக்கு இன்னும், 25 நாட்களே உள்ளன. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில், 'நீட்' தேர்வு மதிப்பெண்படி, மாணவர்கள் சேர்க்கப்படுவரா; பிளஸ் 2 மதிப்பெண்ணும் கணக்கிடப்படுமா என, பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.மாநிலங்களே முடிவு செய்யலாம்
இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: 'நீட்' நுழைவுத் தேர்வு என்பது, தகுதியை முடிவு செய்யும் தேர்வாகவே கருதப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால் போதும். கடந்த ஆண்டில், 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மேல், எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்பதை, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச மதிப்பெண் : தமிழகத்தில், 'நீட்' தேர்வில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள், முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது போன்று, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கும், 'நீட்' தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி பெறலாம்.
அவர்களில், பிளஸ் 2வில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கின்றனரோ, அவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை கொடுத்து, 'அட்மிஷன்' நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், 'நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அட்மிஷன் குறித்த வழிமுறைகளை, தமிழக சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.