தங்கள் வசம் உள்ள குரூப்–1 முதன்மை தேர்வு விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
குரூப்–1 தேர்வை கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. இதில் நான் தேர்ச்சி பெற்றேன். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப்–1 முதன்மை தேர்வு நடந்தது. இந்த தேர்வை நன்றாக எழுதியிருந்தேன். ஆனால், நான் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரத்துடன் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, குரூப்–1 தேர்வை ரத்து செய்யவேண்டும். மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிட்டு, குரூப்–1 தேர்வை நடத்த டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனரையும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, ‘டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த 7–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுவிட்டது. குரூப்–1 தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத்தாள் என்று கூறி, அதை காட்டி தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விடைத்தாள் போலியானவை. அதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 1–ந் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது’என்றார்.
இதற்கு நீதிபதி, ‘நேர்முக தேர்வின் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், தேர்வில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டியது வரும். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், குரூப்–1 தேர்வு எழுதியவர்களின் உண்மையான விடைத்தாள் தங்களிடம் உள்ளது என்று தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு தேர்வு என்றால், ஒரு விடைத்தாள் தானே இருக்க முடியும்?. அது எப்படி இரண்டு விதமான விடைத்தாள்கள் இருக்க முடியும்?.
எனவே, இது தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது. போலீசாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் தான் உண்மை வெளி கொண்டுவர முடியும். அதனால், இந்த வழக்கை வருகிற 18–ந் தேதிக்கு (நாளைக்கு) தள்ளிவைக்கிறேன். அன்று தங்களிடம் உள்ள உண்மையான விடைத்தாள்களை இந்த ஐகோர்ட்டில், டி.என்.பி.எஸ்.சி. தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
அப்போது மனுதாரர் வக்கீல் எம்.புருஷோத்தமன், ‘அதுவரை நேர்முகத் தேர்வு முடிவின் அடிப்படையில் பணி நியமனம் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தடைவிதிக்க வேண்டும்’ என்றார். அதற்கு நீதிபதி, ‘ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரங்கள், அரசுக்கு தெரியும். அதனால் அவர்களே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். தடை ஏதாவது விதித்தால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். 2 நாட்களில் எதுவும் நடந்து விடாது’ என்று கருத்து தெரிவித்தார்.