யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/17

உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம்

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் அக்.,1ல் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படும். இதன் அடிப்படையில் மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமான உபரி ஆசிரியர்கள், தேவை உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவர். இதற்காக மாநில அளவில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை என எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தற்போது கணக்கெடுக்கப்படும் உபரி ஆசிரியர்களை எந்த அடிப்படையில் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும்என தெளிவான வழிகாட்டுதல் இல்லை. மேலும் அந்தந்த சி.இ.ஓ.,க்களே ஆசிரியர் தேவை உள்ள மற்றொரு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுக முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாநில அளவில் 500க்கும் மேற்பட்டஆசிரியர்கள் உபரி என கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் வாரியாகஅதாவது அறிவியல், கலை, மொழி பாடங்கள் என்ற வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் உபரி ஆசிரியர் விவரம் தயாரிக்கப்பட்டு மாநில கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்யப்படுவர். ஆனால் உதவிபெறும் பள்ளிகளில் அவ்வாறு தெளிவான வழிகாட்டுதல் உத்தரவு இல்லை. பள்ளி நிர்வாகம் மற்றும் சி.இ.ஓ.,க்கள் பார்த்து அவர்களை ஆசிரியர் தேவை உள்ள எந்த பள்ளிக்கும் மாற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதனால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகள் போல் உதவிபெறும் பள்ளிக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும், என்றார்.

மாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி : தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு மற்றும், 'ஸ்பீடு' நிறுவனத்திற்கிடையே, நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் முன்னிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், 'ஸ்பீடு' நிறுவனம் மேலாண் இயக்குனர், விநாயக் செந்தில் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கொள்கை முடிவு : பின், செங்கோட்டையன் கூறியதாவது: 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது, அரசின் கொள்கை முடிவு. எனினும், தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, போட்டித் தேர்வுகளை சந்திக்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். 'ஸ்பீடு' நிறுவன நிர்வாகிகள், இலவசமாக பயிற்சி அளிக்க முன்வந்தனர்.இந்நிறுவனத்தினர், ஆங்கிலம் மற்றும் தமிழில், பயிற்சி வகுப்பு நடத்த உள்ளனர். முதலில், 100 மையங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும்.

 ஜனவரியில், 412 மையங்களில் பயிற்சி அளிக்கப் படும். ஒரு மையத்தில் இருந்து, அதை சுற்றி உள்ள பள்ளி மாணவர்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். அதேபோல், சிறந்த ஆசிரியர்களை, பாடவாரியாக தேர்வு செய்து, அவர்களுக்கு,போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி என, பயிற்சி அளிக்க உள்ளோம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மையங்களில், அவர்களுக்கு நான்கைந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.முதல்வருடன் கலந்தாலோசித்து, பயிற்சி வகுப்பு துவங்கும் தேதி அறிவிக்கப்படும். இது தவிர, 3,000 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்க உள்ளோம். பயிற்சி வகுப்பில் சேர, இதுவரை, 13 ஆயிரத்து 740 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவகாசம் : இந்த மாதம் இறுதி வரை, அவகாசம் வழங்கப்படும். குறைந்தபட்சம், 20 ஆயிரம் மாணவர்கள் இடம் பெறுவர். பயிற்சி நேரம் பற்றிய அட்டவணை, விரைவில் ெவளியிடப்படும்.ஸ்பீடு நிறுவனத்துடன், மூன்று ஆண்டு பயிற்சி அளிக்க, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரே மையத்தில் இருந்து, செயற்கைக்கோள் வழியே, அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, தனி அடையாள அட்டை வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

கையேடு வெளியீடு : அரசுப் பள்ளி மாணவ - மாணவியரை, போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய, 'ஸ்பீடு' நிறுவனம், வினா - விடை அடங்கிய புத்தகத்தை தயார் செய்துள்ளது. மொத்தம், 30 புத்தகங்கள், தயார் செய்யப்பட உள்ளன. முதல் புத்தகத்தை, அமைச்சர், செங்கோட்டையன் ெவளியிட்டார். மாணவ - மாணவியருக்கு, இலவசமாக வழங்கப் படும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

மனை வரன்முறை விதிமுறைகள் வெளியீடு :

தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனை வரன்முறை திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 2016 அக்., 20 முன் உருவான அங்கீகாரமில்லா மனைகள், மனைப்பிரிவுகளை, வரன்முறை செய்வதற்கான அரசாணை, மே, 4ல் பிறப்பிக்கப்பட்டது.
இதை அமல்படுத்துவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. வரன்முறை திட்டத்தை முறையாக செயல்படுத்த, சில விதிமுறைகளை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, விதிமுறைகளை தளர்த்தவும், கட்டணங்களை குறைக்கவும், அக்., 12ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, அக்., 13ல் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், மே, 4 மற்றும் அக்., 13 அரசாணைகளை ஒருங்கிணைத்து, வரன்முறை அதிகாரிகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டம், 2018 மே, 3 வரை நீட்டிக்கப்பட்டுளளது. இதற்கான அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஆனால், வரன்முறை திட்டத்துக்காக துவங்கப்பட்ட, tnlayoutreg.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் இல்லை. நவ., 3 கடைசி நாள் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளது. அக்., 13ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும் இல்லை.

ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்

மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாடு முழுவதும், 100 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன.

இணைப்புகளை பெற்றுள்ளவர்கள் குறித்த தகவல்களைசேகரிக்கும் வகையில், ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதுவரை, 50 கோடி பேர், தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கு எளிமையான புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.ஆன் - லைனில் முன்பதிவு செய்தால், வீட்டுக்கே சென்று, ஆதார் எண்ணை இணைக்கும் வசதி செய்யப்பட உள்ளது. தங்களுடைய மொபைலில் இருந்தே, ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை ரகசிய குறியீட்டைப் பெற்று பதிவு செய்யும் வசதி போன்ற வசதிகள், செயல்படுத்தப்பட உள்ளன.

26/10/17

நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?



3000 ஆசிரியர்கள் ’நீட்’ தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ’நீட்’ நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,000 ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

 வழிகாட்டுதல்கள் பின், தமிழக மாணவர்களுக்கு, ’நீட்’ மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார்.

 இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும். பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும்.
வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்.

பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், அறிவுறுத்தியுள்ளார். அனைத்து அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களின் ஊதியம், அடிப்படை கட்டமைப்பு செலவுகள், தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்கு, மத்திய அரசின் சார்பில், நிதி உதவி வழங்கப்படுகிறது.

இதில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியையும், அதற்கான திட்டங்களையும், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில், பள்ளியின் நிர்வாக பணிகள், அதற்காக பெற்ற நிதி, செலவு செய்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி செலவுக்கு, அரசிடமும், மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில், எந்த முறைகேடும் இல்லாமல், பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும்.

பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில், பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை, பெற்றோருடன் பேசி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்"JACTO - GEO" வழக்கை விசாரிக்க மறுப்பு!!மதுரை கிளையில் அடுத்த வாரம் விசாரணை.


தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல் :

தமிழகத்தில் பாட்திட்டம் மாறுவதால், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்று   பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலகத்தில் நேற்று நடந்தது.
முன்னதாக இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து ரூ.1 லட்சம் மதிப்பு புத்தகங்களை வழங்கினார். சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் நூல்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது: 
பதிப்பகங்கள் மூலமாகவும், சிறந்த கல்வியாளர்கள், சிறந்த நூல்களை சேகரித்து கல்வி கற்றுத் தரும் பல்வேறு நிறுவனங்கள், அரிய நூல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் இருந்து நூல்கள், ஆவணங்களை பெற்று, உலகத் தமிழர்களுக்கு வழங்கும்  திட்டம் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. 
தமிழகத்தில் உள்ள பதிப்பாளர்கள் கல்வியாளர்களிடம் இருந்து  பெற்று டிஜிட்டல் முறையில் சரி செய்து நூல்களை வழங்கும் திட்டத்தின் தொடக்கமாக முதல்வரிடம் சிறந்த நூல்களை பெற்றுள்ளேன். அதற்கு பிறகு இந்த தொடக்க விழா நடக்கிறது. தமிழகத்தில் அரிய நூல்கள் சுமார் 3 லட்சம் அளவில் பெற உள்ளோம். அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதால் ஆசிரியர்கள் அவற்றை எளிதாக கையாளும் வகையில்  எதிர்காலத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். 
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ப்பதற்கான  இலக்கு என்று பார்த்தால் தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் முதல் 7 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லா மாநிலத்திலும் 15 சதவீதம் இடம் உள்ளது. எதிர் காலத்தில் அதை இந்த அரசு உருவாக்கும்.  இவ்வாறு அவர்  தெரிவித்தார். 
வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழாசிரியர்கள்: விழாவில் அமைச்சர் பேசும்போது, மலேசியாவின் கல்வி அமைச்சர் இங்கு  வந்தபோது சிறந்த தமிழாசிரியர்கள் தேவையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.  அதேபோல பல நாடுகளில்இருந்தும் தமிழாசிரியர்கள் வேண்டும் என்று  கேட்டுள்ளனர். அதற்காக தமிழாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்ப ஏற்பாடு  செய்யப்படும் என்றார்.
ஆந்திராவில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், பயிற்சி மையங்களில் சேர விரும்பும்  மாணவர்களின் பட்டியல் பெறச் சொல்லியுள்ளோம். போட்டித் தேர்வு பயிற்சி மையம்,  தொடர்பாக தகவல்கள் தாமதமானால், மாணவர் சேர்க்கைக்கு எவ்வளவு நாள்  வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். 
அடுத்த வாரம் வரையும் காலம்  நீட்டிக்கப்படும். அவர்களுக்கு  அடுத்த வாரம்  அடையாள அட்டை வழங்கப்படும். நவம்பர்  இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி பணிகள் தொடங்கும். இதற்காக ஆந்திரா  சென்று 54 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். அவர்கள் நாளை  மறுதினம் முதல் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று கூறினார்.

அரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத்தல்

'அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களின் ஊதியம், அடிப்படை கட்டமைப்பு செலவுகள், தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்கு, மத்திய அரசின் சார்பில், நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியையும், அதற்கான திட்டங்களையும், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில், பள்ளியின் நிர்வாக பணிகள், அதற்காக பெற்ற நிதி, செலவு செய்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி செலவுக்கு, அரசிடமும், மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில், எந்த முறைகேடும் இல்லாமல், பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும். 
பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில், பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை, பெற்றோருடன் பேசி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது. 

ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம் செய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181 உருவாக்கம் பெற்றது. ஆனால் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள் ஆனது.

இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET நிபந்தனைகள் அப்போது இல்லை.

ஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை ஊதியம் மட்டுமே தரவும், மற்ற பணிப்பயன்கள் மறுக்கப்பட்ட நிலையிலும் இந்த நிபந்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக இருந்த இந்த வகை TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பல்வேறு வகைகளில் TETலிருந்து முழுவதும் விலக்கு கிடைத்தது.

தற்போது அரசாணை 181 & 90  போன்றவற்றைத் தாண்டி, சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு தரப்பட்ட சூழலில் 15-11-2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TET எழுத கட்டாயம் என்பதற்கு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை கொடுத்து உத்தரவிட்டது.

ஆயினும் கடந்த மாதம் வெளிவந்த பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் அடிப்படையில் பார்க்கையில் 23-08-2010 பின்னர் பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் TET கட்டாயம் என்பது மீண்டும் வலியுறுத்தி உள்ளது தெளிவாகிறது.

இதனிடையே சுமார் 500 க்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு மற்றும் பணிப்பாதுகாப்பு வேண்டி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடந்து உள்ளனர்.

24-10-17ல் வந்த இந்த வழக்குகளின் அடுத்த கட்ட வாதம் வரும் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குழப்பங்கள் நிகழும் இந்த வகை TNTET நிபந்தனை ஆசிரியர்களின் நீதிமன்ற வழக்குகளுக்கான தீர்வு அல்லது வாபஸ் சார்ந்த நெறிகள் விரைவில் வர வேண்டுமாகில் தமிழக அரசின் கல்வித் துறையின் கருணைப் பார்வைபட்டால் மட்டுமே  யாருக்கும் பாதிப்பு இல்லாத நல்ல தீர்வு ஏற்படும் என்பதே உண்மை.

23-08-2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு TNTET லிருந்து முழு விலக்கு கொடுத்து பணிப் பாதுகாப்பு தந்து  விரைந்து அரசாணை வெளிவிட்டு  இந்த வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் இன்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது. 
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப்பின் பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்க புதிய குழு ஒன்றை தமிழக அரசு நிர்ணயித்தது. அந்தக் குழு ‘பே மேட்ரிக்ஸ்’ முறைப்படி 2 விதமாக சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையை பரிந்துரை செய்துள்ளது.

ஒன்று பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பளம் உயர்வு. மற்றொன்று முதலில் வகித்த பதவியில் சம்பள உயர்வு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம். இந்த இரண்டில் எந்த முறை என்பதை அரசு ஊழியர்களே தேர்வு செய்து கொள்ளலாம். (அ) பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடும் முறை:

ரூ.31, 300 அடிப்படை சம்பளம் பெறும் ஜூனியர் அசிஸ்டெண்ட் 8ம் நிலையில் இருந்து, அசிஸ்டெண்ட்டாக 10ம் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டால், முதலில் 8ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ.32,200 ஆக கருதப்பட்டு, பின் அவரது சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் ரூ.33,100 நிர்ணயம் செய்யப்படும்.

 அதேபோல் ரூ.85,800 அடிப்படை சம்பளம் பெறும் அதிகாரி 26ம் நிலையில் இருந்து 29ம் நிலைக்கு பதவி உயர்வு பெறும் போது, அவருக்கு 26ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ,88,400 ஆக கருதப்படும். பின் பதவி உயர்வு அடிப்படையில் அவரது சம்பளம் ரூ.1,23,400 ஆக நிர்ணயம் செய்யப்படும். (ஆ) சம்பள உயர்வு தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம்: ரூ.31,300 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர் 8ம் நிலையில் இருந்து 10ம் நிலைக்கு பதவி உயர்வு செய்யப்படும்போது, பதவி உயர்வு நாளில் இருந்து அடுத்த சம்பள உயர்வு தேதி வரை அவரது சம்பளம் ரூ.33,200 ஆக கருதப்பட்டு பின் 34,100 ஆக நிர்ணயிக்கப்படும். இது குறித்து விரிவான பட்டியலை அரசுத்துறையின் அனைத்து செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

25/10/17

கை விரல் ரேகை பதிவு' திட்டம் அறிமுகம்!!

வாக்காளர் பட்டியலை கண்காணிக்க குழு நியமனம்!!

கந்துவட்டியை துரத்த ரகசிய கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி!!!

                                               

இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!

                                                
மதுரை

மதுரையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள் 
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மதுரை மாவட்டப் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “அனைத்துப் பள்ளிகளின் வளாகங்கள் தூய்மையாக வைக்கப்பட வேண்டும். குடிநீர்த் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும்.

வாரந்தோறும் குடிநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தினுள் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும்.


வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள் தலைமையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர் தூய்மைப் பணியை புகைப்படம் எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் திடீரென சோதனையிடலாம். அப்போது, தூய்மையின்றி உள்ள பள்ளிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

எனவே, அனைத்துப் பள்ளிகளும் தூய்மையை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் போராட்டம் 
வருகிற 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மாதக் கடைசி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பயன்கள், பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்.31-ஆம் தேதி முதல் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அக்.23-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர்.

தொடர்ந்து, கடந்த 20-ஆம் தேதி சென்னையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமா கோயில் முன் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் திங்கள்கிழமை பணிக்குச் செல்லும் முன்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் தலைமையில் கூடினர். இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் பணிக்குச் சென்றனர்.

பின்னர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 20-ஆம் தேதி சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உயர் கல்வித் துறை செயலர் சுனில்பாலிவால், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஏ.அருண்மொழிதேவன் எம்.பி., கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, எம்.உமாமகேஸ்வரன், சார்லஸ், துணைவேந்தர் செ.மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம் மற்றும் கல்வித் துறை துணைச் செயலர்கள் பங்கேற்றனர். அப்போது 16 அம்சக் கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து அக்.30-ஆம் தேதி முடிவுகளை அறிவிப்பதாகவும், அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்குமாறும் கோரினார்கள். மேலும், வருகிற அக்.30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பதிவாளர் கடிதம் அளித்துள்ளார்.

எனவே, வருகிற அக்.31-ஆம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு சுமுக தீர்வு ஏற்படவில்லை எனில் வருகிற நவ.1-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

கூட்டமைப்பு நிர்வாகிகள் பி.சிவகுருநாதன், எஸ்.பூங்கோதை, ப.மனோகர், இமயவரம்பன், செல்வராஜ், செல்வக்குமார், புருஷோத்தமன், பாலு, சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று, தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை - உச்ச நீதிமன்றம்!!!

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று
, தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறுகையில், "இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு; இந்நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு தேசிய கீதத்தை இசைக்க வேண்டியது அவசியம்.
எனினும், திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமா? அப்போது மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா? என்பதை மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் விட்டுவிட வேண்டும்' என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "இதுகுறித்து மத்திய அரசே முடிவெடுக்கலாம். இதில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசு தயக்கம் காட்டக் கூடாது' என்றனர்.
நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
திரையரங்குகளுக்கு மக்கள் பொழுது போக்குக்காகவே செல்கின்றனர். மக்களுக்கு பொழுது போக்கு அவசியமாகும். விருப்பம் என்பது ஒன்று. ஆனால், அதை கட்டாயமாக்குவது என்பது வேறு.
மக்களால் தங்களது தேசப்பற்றை மேல்சட்டையின் கைவிளிம்புகளில் வைத்து கொண்டு செல்ல முடியாது. நாட்டு மக்களிடையே தேசப்பற்றை உத்தரவுகள் மூலம் நீதிமன்றங்கள் கற்பிக்க முடியாது.

திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்காதோருக்கு தேசப்பற்று குறைவாக இருக்கிறது என்று கருத முடியாது. நாட்டு மக்களுக்கு ஒழுக்கம் குறித்த கொள்கையை போதிக்க வேண்டியதில்லை. ஏனெனில், அடுத்த முறை, நீங்கள் (மத்திய அரசு) திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது, டி-ஷர்ட்டுகள், பாதி கால்சட்டைகளை மக்கள் அணிந்து கொண்டு நிற்பது, தேசியகீதத்துக்கு இழைக்கும் அவமரியாதை என தெரிவிக்க விரும்பலாம்.
நாட்டு மக்கள் தங்களது தேசப் பற்றை, திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்த விவகாரத்தில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை முறைப்படுத்தும் வகையில், தேசியக் கொடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் எந்த தலையீடும் இல்லாதபடி, இதில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

திரையரங்குகளில் தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள "தேசிய கீதத்தை இசைக்க வேண்டும்' என்ற வார்த்தையை "தேசிய கீதத்தை இசைக்கலாம்' என்று திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. தேசியக் கொடி சட்டத்தை திருத்துவது குறித்து ஜனவரி மாதம் 9-ஆம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் ஷியாம் நாராயண் சௌக்சி என்பவர் தொடுத்த பொது நல மனுவில், திரையரங்குகளில் திரைப்படங்கள் தொடங்கும் முன்பு, தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த தீர்ப்பில், திரையரங்குகளில் திரைப்படங்கள் தொடங்கும் முன்பு, தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும், அப்போது திரையரங்குகளில் இருப்போர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடக்கப்பள்ளி இளம் இடைநிலை ஆசிரியர்களுக்கு இதே நிலை நீடித்தால் திறமையான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தமிழ்நாடு இழந்துவிடும் !!

இளம் இடைநிலை ஆசிரியர்      ஊதிய முரண்பாடு இதைப்பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை.

ஊதிய குறைவு ஆசிரியரின் வாழ்வாதாரத்தை மட்டும் தான் பாதிக்கிறதா ?     அல்லது சமூகத்தையும் பாதிக்கிறதா? ஒரு விரிவான அலசல் .

12ம் வகுப்பு முடித்து 2வருடம் ஆசிரியர் பயிற்சி முடிக்க வேண்டும் . (அதற்கு ரூ.1,00,000 வரை செலவழிக்க வேண்டும்)பின் தகுதித் தேர்விற்கு தயாராக வேண்டும்.அதன் பின் 
கிடைக்கும் இடைநிலை ஆசிரியர்  வேலைக்கோ மிக்குறைந்த ஊதியம் என்ற நிலை வரும் போது எத்தனை பேர் ஆசிரியர் பயிற்சி படிக்க முன் வருவர்.  அப்படியே படிக்க வந்தாலும் முன்பு போல் திறமையான மீத்திறமையான மாணவர் படிக்க விரும்ப மாட்டார்கள். விளைவு திறமையான ஆசிரியர் உருவாகும் வாய்ப்பு குறையும் என்பதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்  . 

ஆசிரியர்களே சற்றே சிந்தித்து பாருங்கள் 2009 ற்கு பின் பணியி்ல் இருப்பவர் அனைவரும் 24 லிருந்து 37வயதிற்கு உட்பட்டவர்கள் பெரும்பான்மையானோர் முதுகலைப்பட்டம் பெற்றவர்களே...

தொடக்கப்பள்ளி இளம் இடைநிலை ஆசிரியர்களுக்கு இதே நிலை  நீடித்தால்
திறமையான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தமிழ்நாடு இழந்துவிடும் என்பதில் ஐயமில்லை..

உண்ணாவிரதப் போராட்டம் : தயாராகும் காவல்துறை!

                                             
தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சொல்லப் போனால்
இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க அளவிலே தினந்தோறும் தமிழகத்திலேதான் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் என்று யார் போராட்டம் நடத்தினாலும் பாதுகாப்புக்கு போலீஸ் வந்துவிடும் அல்லது போராட்டக்காரர்களை கைது செய்ய போலீஸ் வந்துவிடும்.

ஆனால்... போலீஸே போராட்டம் நடத்தினால்?

ஆம். தமிழக காவல் துறையினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் செய்வதற்கு வாட்ஸ் அப் மூலமாக அழைப்பு கொடுத்துவருகிறார்கள்.

தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சங்கம் இருப்பதுபோல், காவலர்களுக்குச் சங்கம் அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது காவலர்கள் தங்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் நீண்ட நாள் கோரிக்கை.

சமீபகாலமாக பணியிலிருக்கும் காவலர்கள் பணிச்சுமையாலும் உயர் அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைகளும் காவல்துறைக்குள் அதிகரித்துவருகிறது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காவல்துறை மானியகோரிக்கையின் போது, தமிழக காவலர்கள் குடும்பத்தார் கோட்டையை நோக்கி போராட்டத்துக்கு புறப்பட்டார்கள். காவல்துறை அதிகாரிகள் சாதுரியமாக அந்த நேரத்தில் சமாளித்தார்கள்.

இந்த நிலையில்தான் அக்டோபர் 21ஆம் தேதி முதல், தமிழக காவலர்கள், மற்றும் உதவி ஆய்வாளர், ஆய்வாளர்களுக்கு வாட்ஸ்-அப்பில் கோரிக்கைகளை குறிப்பிட்டு உண்ணாவிரதம் போராட்டத்துக்கு அழைப்பு கொடுத்துவருகிறார்கள். காவலர்களும் அதை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏழாவது ஊதிய குழு பேச்சு வார்த்தையில் காவலர்களை முற்றிலும் ஒதுக்கிவைத்து வேடிக்கை பார்த்த அரசிற்கும், சுயநலத்தோடு செயல்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு.

அந்த வாட்ஸ் அப் தகவல்

காவலர்கள் ஒரு நாள் பணி செய்துகொண்டே மற்ற மாநிலங்களைப் போல மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கத் தமிழக காவலர்கள் முடிவு. எங்களது கோரிக்கைகள்...

1) ஏழாவது ஊதியகுழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து, 10ஆம் வகுப்பு தரத்தில் உள்ள மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மற்ற பலன்கள் வழங்கவேண்டும்.

2) வரையறுக்கப்பட்ட பணி, வார விடுப்பு, விடுமுறை தினங்களில் பணி செய்தால் இரட்டிப்பு ஊதியம் வழங்கவேண்டும்.

3) மக்கள் தொகைக்கேற்ப காவலர்கள் நியமிக்க வேண்டும்.

4) சென்னையில் வழங்கப்படுவதுபோல் மற்ற மாவட்டங்களுக்கும் உணவுப்படி வழங்க வேண்டும்.

5) பதவி உயர்வு மற்ற துறையினருக்கு வழங்குவதுபோல் வழங்கவேண்டும்.

6) காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்யவேண்டும்.

மேற்கண்டவை உட்பட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30ஆம் தேதி, காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையில் அடையாள உண்ணாவிரதத்தை வெற்றிபெறவைக்க வேண்டும்!

என்பதுதான் அந்த வாட்ஸ் அப் மெசேஜ்!

பணியிலிருந்தபடி உண்ணாவிரதம் போராட்டத்துக்கு காவலர்கள் தயாராகும் தகவல் தெரிந்த காவல்துறை அதிகாரிகள் சமரசம் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால், தமிழக காவலர்கள் உண்ணாவிரதமிருக்க ஒத்தகருத்தில் ஒற்றுமையாக

இருக்கிறார்களாம்.

முதல் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம்கட்டம் போராட்டம் அறிவிக்கவும் முடிவுசெய்துள்ளதாக சொல்கிறார்கள் காவலர்கள்.

உண்ணாவிரதம் போராட்டம் பற்றி ஐபிஸ் அதிகாரியிடம் கேட்டோம். ’’உண்மைதான் கேள்விப்பட்டோம்’’ என்றார்.

இதுவரை காவல்துறை என்பது தமிழகத்தில் முதல்வர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துறையாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் காவல்துறை இருக்கிறது. காவலர்கள் போராட்டம் தீவிரமானால், நாடு நிலைகுலைந்து போகும் என்பதை அரசு உணரவேண்டும்

திறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு!

திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அரசு தேர்வுத்
துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்று (அக்டோபர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசியத் திறனாய்வுத் தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதற்கு, மாவட்டந்தோறும் மையங்கள் அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் இதுசார்ந்த அறிவிப்பு மட்டுமே இடம்பெறுவதுதான் வழக்கம். ஆனால், பள்ளிக் கல்வித் துறை மேம்படுத்தப்பட்ட இணையதளம் வடிவமைத்த பின், அனைத்துக் கல்வித் துறை இணையப்பக்கங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் பொதுத் தேர்வு வினாத்தாள்களுடன், திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன.

கல்வித் துறை அதிகாரிகள், “கல்வி சார்ந்த அனைத்துச் சுற்றறிக்கைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதை மாணவர்களும், பெற்றோரும் பார்வையிட வேண்டும். திறனாய்வுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான (NMMS) திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு மாநில அளவில், நவம்பர் முதல் வாரம் நடக்கிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 1,000 பேருக்கு, ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது