ஜாக்டோ ஜியோ நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாக நியாமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதால் நமது போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஏழாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு தமிழக அரசிற்கு ஆணையிட்டது. இருந்தாலும் 1.10.2017 முதல்தான் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்துப்பட்டதால், 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய ஊதியத்தினை இழந்து, 21 மாத கால ஊதியக் குழுவினை நிலுவைத் தொகையினை தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இன்றும் பெற இயலாமல் உள்ளனர்.
ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நேரில் வழக்கில் ஆஜரான அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற 110 விதியின்கீழ் 1.4.2003்க்கு்ப பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை 30.11.2017க்குள் அளிக்கும் என்றும் அதன்மீது தமிழக அரசு மேல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று எழுத்துப்பூர்வமாகவும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நீதியரசர்கள் முன்பாகவும் தெரிவித்தார். ஆனால், இதுவரை நடந்து கொண்டிருப்பது என்ன? தொடர்ந்து அந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு என்பது அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு நீதிமன்றத்தில் தான் அளித்த வாக்குறுதியினைக் கூட மதிக்காமல் நீதிமன்றத்தினையே அவமதித்து வருகிறது.
30.11.2017க்குப் பிறகு CPS வல்லுநர் குழுவிற்கு இருமுறை ஒரு மாதம் ஒரு மாதம் என்று நீட்டிப்பு வழங்கிய அரசு, இன்றைய தினம் இரண்டு மாதங்களுக்கு அந்த வல்லுநர் குழுவிற்கு, அதாவது 31.03.2018 வரை நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது (அரசாணை எண் 51, நிதித் துறை, நாள் 15.02.2018),
ஆனால் இந்த வல்லுநர் குழுவின் தலைவர் அவர்கள், குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்ததாக கடந்த வாரத்தில் இந்து தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. தொடர்ந்து இந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்கி அரசு நம்மை வஞ்சித்து வருகிறது.
தோழர்களே நாம் இன்னும் பொறுமையாக இருந்தால், இந்த வல்லுநர் குழு என்பது எக்காலத்திலும் தமிழக அரசிடம் அறிக்கையினை தாக்கல் செய்யாமல் போய்விடக் கூடிய நிலை உருவாகும். இதனால்தான் ஜாக்டோ ஜியோ 6.9.2017 அன்றைய தினமே ஈரோட்டில் முடிவெடுத்து, அரசு எந்த கால அவகாசம் கொடுத்தாலும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதானல்தான், 7.9.2017 முதல் காலவரையற்ற போராட்டத்தினை மேற்கொள்வது என்று ஒருமித்த முடிவினை எடுத்து களம் கண்டோம். நமது போராட்டத்தினால் நீதிமன்றமே நமது கோரிக்கைகளுக்கான தலைமைச் செயலாளரை நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காலக்கெடுவினை விதித்து, ஊதியக் குழுவினைப் பெற்றோம்.
நமது வாழ்வாதாரக் கோரிக்கையான அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற இலக்கினை நோக்கி ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்போடு இணைந்து தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஓரணியில் மீண்டும் போராட்ட களம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முடிவின் அடிப்படையில், நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் 21.02.2018 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் மறியலில் இருந்து மீளப் போவதில்லை என்ற நெஞ்சுறுதியோடு சபதம் மேற்கொண்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சென்னையில் வரும் 21.02.2018 முதல் நடைபெறவுள்ள தொடர் மறியலுக்கான ஆயத்தப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
தோழர்களே, நமது வாழ்வாதாரக் கோரிக்கையினை வென்றெடுக்க தமிழகத்தின் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் நம்பிக்கைக் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவோடு இணைந்து நாமும் களம் காணத் தயாராவோம். இந்த வாய்ப்பினை நழுவ விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது-அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற கனி எட்டாமல் போய்விடும்.
எனவே, தோழர்களே இந்த இறுதி வாய்ப்பினைப் பயன்படுத்தி ஜாக்டோ ஜியோ சார்பாக வரும் 21.02.2018 முதல் சென்னையில் நடைபெறவுள்ள தொடர் மறியல் போராட்டத்தில் நாமும் சங்கமிப்போம். கோரிக்கைகளை வென்றெடுப்போம்.