யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/18

இந்திய சந்தையைக் குறிவைக்கும் Whatsapp!

ஜியோ ஃபீச்சர் போன்-2வில் வரும் 20ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் சேவை அறிமுகமாகவுள்ளது.


இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், ஃபீச்சர் போன்-2வை அறிமுகம் செய்து தனது அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி வருகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் வசதிகளைக் கொண்டு KaiOS தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஜியோ ஃபீச்சர் போன்-2 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜியோ ஸ்டோரில் அறிமுகமானது. தற்போது இந்தப் போனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் செயலி வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளியாகும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ போன், ஜியோ போன்-2வைப் பயன்படுத்தும் பயனர்கள் இந்தப் பிரத்யேகச் செயலியை ஜியோ ஸ்டோரில் சென்று நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன் மாடல்களில் உள்ள வாட்ஸ் அப் சேவையைப் போலவே இதிலும் end-to-end encryption வசதி உள்ளது. வாய்ஸ் ரெக்கார்ட், வாய்ஸ் மெசேஜ் சேவைகளைக் கொண்டுள்ள இந்தப் போனில் வாய்ஸ் கால், வீடியோ கால் சேவை கொடுக்கப்படவில்லை.
இந்த செயலியின் வெளியீடு குறித்து ஊடகத்திற்குப் பேட்டியளித்த வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், "இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள், இந்தியா முழுவதும் இனி ஜியோ போனில் வாட்ஸ் அப் ப்ரைவேட் மெசேஜ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். KaiOS இயங்குதளத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த பிரத்யேக செயலியைக் கொண்டு ஜியோ பயனர்கள், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் சிறந்த சேவையை அனுபவிக்கமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.



வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 20 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய சேவையை அடுத்து இந்த எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய சந்தையில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.

DEE PROCEEDINGS-சிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

நீதிக்கதை :



நன்றி ஓடுகளே!
   


ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
   



  "முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
   


ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு-

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு*


_🔵15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் இல்லை._

*🔵15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-25000/-*

*🔵101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-*

*🔵251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-*

*🔵1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-*

*🔵2017-2018 ஆம் ஆண்டு uDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.*

*30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.*

M.Ed சேர்க்கைக்கு கடைசி தேதி 17-09-2018 ஆகும் -தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழக கடிதம்


ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயிலும் நாகை மாணவிக்கு காமராஜர் விருது :


நாகையில் 11ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பிரீத்தாவிற்கு காமராஜர் விருது கிடைத்துள்ளது. நாகையில் ஒரு தொண்டு நிறுவனம் எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் தொடங்கியுள்ளது. இதில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் தத்து எடுத்து குடும்ப சூழ் நிலையை போல் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.


  இந்த குழந்தைகள் கிராமத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தையை இழந்த பிரீத்தா என்ற மாணவியை அரசு மூலம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறார். இவர் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார்.


   இந்நிலையில் பிரீத்தா நன்றாக படிப்பதோடு நடனம், கேரம் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு நடனம், கேரம் விளையாட்டுகளில் பங்குபெற்று அதிக பரிசுகளை பெற்றுள்ளார்.


  இதையடுத்து தமிழக அரசு பிரீத்தாவிற்கு படிப்பு மற்றும் நடனம், கேரம் போன்றவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றதை அடிப்படையாகக்கொண்டு காமராஜர் விருது வழங்கியது. விருது சான்றிதழுடன் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை கடந்த 5ம்தேதி சென்னையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்.


  காமராஜர் விருது பெற்ற மாணவி பிரீத்தாவை நடராஜன் தமயந்தி மேல் நிலைப் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள், மற்றும் எஸ்.ஓ.எஸ். தொண்டு நிறுவன நிர்வாகிகள், அங்கு தங்கியுள்ள சக மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

காலாண்டு தேர்வு வினாத்தாள் : பள்ளிகளுக்கு அறிவுரை :

காலாண்டு தேர்வில், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, தனியார் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழக பாடத்திட்டத்தில், மாநிலம் முழுவதும், நேற்று காலாண்டு தேர்வு துவங்கியது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு துவங்கியது. எட்டாம் வகுப்பு வரை படிக்கும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, வரும், 17ல் தேர்வு துவங்க உள்ளது.


இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளும், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான முன் தயாரிப்பு பயிற்சி வழங்கும் வகையில், பள்ளி கல்வியின் வினாத்தாளை பயன்படுத்த, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 2 படிப்புக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்களுக்கான தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.அதேபோல், 'ப்ளூ பிரின்ட்' என்ற வினாத்தாள் கட்டமைப்பு முறையும் நீக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்யவும், தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

T.N.O.U. செப் .30 வரை அட்மிஷன் :

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பதிவாளர், சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், தொலைநிலை படிப்புகளில், ஆகஸ்ட், 31 வரை, மாணவர்கள் சேரலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையை, 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நீலகிரியில் உள்ள, பல்கலையின் மண்டல மையங்களில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது www.online.tnou.ac.in என்ற, இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்!





11/9/18

234 தொகுதியிலும் நீட் தேர்வு மையம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

'தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நீட் தேர்வு மையம் உருவாக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு இரண்டு அல்லது மூன்று என நீட் தேர்வு மையங்கள் இருக்கும். வீடியோ கான்பரன்சிங் கிடைக்காத நிலையில் ஒரு நீட் தேர்வு மையமாவது செயல்படும். எல்லா தொகுதியிலும் நீட் தேர்வு மையம் இருக்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.


மாதிரி பள்ளிகள், 32 மாவட்டங்களிலும் துவங்க உள்ளது. முதன் முறையாக அரசு சார்பில் தலா 50 லட்சம் ரூபாய் என 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மலை மாவட்ட மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க கல்வித்துறை, 'அதிரடி'

மலை மாவட்ட மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், 4,343 மாணவர்களுக்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியை பொறுத்தவரை, வனப்பகுதிகள், போக்குவரத்து வசதி கள் இல்லாத இடங்களில் உள்ள குழந்தைகள், பள்ளிக்கு வருவதில்லை என்ற புகார் உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், 6 முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
நடப்பு கல்வியாண்டில், நீலகிரி மாவட்ட பகுதிகளில், தொலைவில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், 142 பள்ளிகளைச் சேர்ந்த, 3,331 மாணவர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வனம், வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள, 92 பள்ளிகளைச் சேர்ந்த, 1,012 மாணவர்களுக்கு பாதுகாப்பாளர்கள் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, பள்ளிகள் வங்கி கணக்கில், 67 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு; ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவக்கம்

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., 
வெளியிட்டது. ஆன்லைன் கவுன்சிலிங்கில், இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

வேளாண் இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம், இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகிறது.
கடந்த ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுகள்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப் பட்டது. மறுதேர்வுகள்ஆக.,18, 19ல் நடந்தன. பல்வேறு காரணங்களால் தாமதமாகிய நிலையில், தற்போது நுழைவுத்தேர்வு முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆய்வுக் கவுன்சில் வெளியிட்டுள்ளது.


https://icarexam.net/ என்ற ஐ.சி.ஏ.ஆர்., இணையதள முகவரியில், லாகின் செய்து, மதிப்பெண் அட்டை மற்றும் பங்கேற்பு கடிதத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேசிய வேளாண் ஒதுக்கீட்டு ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள், இன்று துவங்குகின்றன.ஆன்லைன் கவுன்சிலிங் இணையதளத்தில், தேர்வுகளை தேர்ந்தெடுத்து, கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான, கடைசி தேதி, செப்.,13 கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின், முதல் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 15ல் வெளியிடப்படுகிறது.

ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, கட்டணம் செலுத்தல் ஆகிய நடைமுறைகள், செப்.,16 முதல் 20 வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 23 வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறைகள், செப்.,24 முதல் 28 ம் தேதி வரை நடக்கின்றன. கவுன்சிலிங் உதவிகளுக்கு, 011 - 2584 3635, 011 - 2584 6033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!


தொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல்திட்ட இயக்குநராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த மாதம் 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதையடுத்து இம்மாதம் 3-ம் தேதி தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத்துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார். புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். தற்போது, தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், இந்தத் துறையிலும் பல புதுமைகளை, மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.தமிழக தொல்லியல் துறை தொல்பொருளியல், ஆய்வியல், ஆய்வகம், நூலக ஆய்வு கையெழுத்துகள், புகைப்படம் அச்சிடும் தளம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தளங்களில் செயல்பட்டு வருகிறது. அதோடு, மிகப் பழைமையான கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயக் கடமை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக் கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.

கோயில்கள் பாதுகாப்பு:


தொன்மையான கோயில்களைப் பராமரிக்க, அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறது தொல்லியல் துறை. அப்படி இருந்தாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல கோயில்கள் இடிந்து போகும் நிலைக்குச் செல்கின்றன.

நடுகற்கள் பாதுகாப்பு:

வேலூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. 2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவிலும், இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள், ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ளவற்றையும் தற்போது அறிய முடிகிறது. இந்த நடுகற்கள் இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதுபோல தமிழகத்தில் பல நடுகற்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.

செப்பேடுகள் பாதுகாப்பு:


2,300 ஆண்டுகளுக்கு முன், செப்புப் பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளைக் குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்படாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.

பெருங்கற்கால கல்திட்டு:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் திட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைச் சுற்றி எண்கல் வட்டங்கள் அமைக்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்து, இது 'பெருங்கற்காலம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியில், கி.மு., 1000 முதல் கி.பி. 500-ம் ஆண்டைச் சேர்ந்த மக்கள் வசித்துள்ளனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்ததன் நினைவாக கல்திட்டுக்களும் இங்கு உள்ளன. கட்டடக் கலையின் தொடக்கம் இதுபோன்ற கல்திட்டுகள் தான் என்கிறார்கள் அறிஞர்கள். இதுபோன்ற கல்திட்டுகள், இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. இவற்றையும் கண்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

மலை சிற்பங்கள்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், தொல்லியல் துறை இதை முறையாகப் பராமரிப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் இம்மலையை வழிபாட்டுத் தலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மிகவும் பழைமையான அரியச் சிற்பங்கள் இங்கு உள்ளன. இதுபோன்ற மலைச் சிற்பங்கள் தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைக் கண்டுபிடித்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.


அகழ்வாராய்ச்சி:

திண்டுக்கல் அருகே பாடியூர் மேட்டுப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதிலமடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்த இடத்தில் போர் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் பல பொருட்கள் கிடைக்கும் என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். இன்னும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் அதிக இடத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றை சேமித்து, அதைப் படியெடுத்து சேமிக்க வேண்டும்.

கீழடி:

கீழடியில் தற்போது 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லை. இதுவரை கீழடியில் நடந்த அகழாய்வு குறித்த முழு விவரத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு:

பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியுள்ளார்.
வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
கரூர்:

கரூர் க.பரமத்தி சேரன் பொறியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கரூரில் நடந்தது. சேரன் அறக்கட்டளை தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, அம்பிகை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 124 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விரும்பியது கிடைப்பதே வெற்றி என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. விருப்பத்திற்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே. நான் பல நேரங்களில் விரும்பாததையும் ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உங்கள் முன்னால் பேசும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். இந்தியாவில் பல வெற்றியாளர்கள் செல்வக்குடியில் பிறந்தவர்களோ, பெரிய கல்வி கூடங்களில் பயின்றவர்களோ கிடையாது. சாதாரண பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள். 
சாதிக்கும் சந்தர்ப்பங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. அயராத உழைப்பும், உயர்ந்த லட்சியமும், தேவையான திறமைகளும் இருந்தால் நிலவுக்கு போகும் கனவு நனவாகும். பட்டதாரிகளுக்கு வேலையில்லை என்ற செய்தியை கேள்வி பட்டிருப்போம். அதே நேரத்தில் பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதும் உண்மையாகும். எனவே பணிகளுக்கு தேவையான தகுதியினை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக கல்லூரி முதல்வர் மகுடேஸ்வரன் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர்  மனோகரன், பொருளாளர் அப்னா தனபதி, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நன்றி மாலை மலர் .

நாளை 11.9.18 ,சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஒன்றியங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள். பதிலாக வேலை நாள்.15.9. 18

10/9/18

கானல் நீராகும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் -மாணவர் எண்ணிக்கை சரிவு-பயிற்சி முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி -?தகுதியை வளர்கிறதா தகுதிதேர்வு ??

ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?

வேலூர் மாவட்ட நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள்.
 ஓர் PG ஆசிரீயர்!
உங்களைப் போலவே படித்துவிட்டு டிஆர்பி எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேர்ந்தவர், தன்னிடம் படிக்கும் மாணவன் திறனுடையவனாக முன்னேறவேண்டும் என்ற வேட்கை கொண்டவர் இன்று அவரது பள்ளியிலேயே நிராதரவாக்கிடப்பட்டு தனித்து சூழப்பட்டு பெண்களால்! அப்பள்ளி மாணவனாலேயே அடித்து வீழ்த்தப்பட்டு மண்ணில் சாய்கிறார்.

பார்க்கும் போதே குலை நடங்குகிறது.


Mass violence! என்றோ!Public rampage!என்றோ சிலரது கருத்துக்களாக மாறிப்போகும்.
நாள்பட மறந்தும் போகும்.


தான் பணியாற்றிய பள்ளியிலேயே தாக்கப்படும் ஆசிரியருக்கு பணிப்பாதுகாப்பு எங்கே?

பேருந்து ஓட்டுநர் எங்கேயாவது மோதிவிட்டால் இறங்கி ஓட்டம் எடுப்பதுபோல் இனி ஆசிரீயர்களும் ஓட வேண்டுமா?
இருநாட்கள் முன் ஆசிரியர் தினமென்று வாழ்த்திவிட்டு அடுத்த இரு நாட்களிலேயே அடிக்கும் காணொளியைப் போடுகிறார்கள்.



மாணவன் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தின் உண்மைத்தன்மை உறுப்படும் முன்னரே கற்பிக்கும் ஆசானைஅடித்து துவைக்கிறார்கள்.மாணவனின் கடிதத்தில் எல்லோர் மேலுமே வெறுப்படைந்ததாக உள்ளதற்கு காரணம் யார்?அனைவரின் மேலுமே குற்றம் சொல்லிடும் அவனது மனநிலை என்ன?

இதற்கிடையே குறைந்தது தேர்ச்சியாவது பெற வைத்திட முடியாத நீங்கள் வாங்கும் சம்பளம் தர்மமா?எனவும் அதிகாரிகள் கேட்டுவிடுகிறீர்கள்.


தாக்கப்பட்ட ஆசிரியரின் மனநிலை என்னவாக இருக்கும்?அவர் தாக்கப்படுவதைப்பார்க்கும் அவரது குழந்தைகளும்,மனைவியும்,பெற்றோரும் இனி என்ன அவருக்கு சொல்லப்போகிறார்கள்?


கத்தியால் குத்திய மாணவனுக்கு தண்டனை இல்லை.அவனுக்கு கவுன்சலிங் கொடுத்து ராஜமரியாதையோடு அடுத்த பள்ளிக்கு கூட்டிச் சென்று சேர்த்து விடுகிறீர்கள்.ஆனால் அடிபட்ட ஆசிரியருக்கு என்றைக்காவாவது ஆறுதல் சொன்னதுண்டா?


எங்களின் பாதுகாப்பு யாரிடம் இனி கேட்பது?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?

TNPSC.-க்கு கை கொடுத்த "ஆன்-லைன்': 7 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணம் சேமிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) ஆன்-லைன் முறை காரணமாக ரூ.100 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் முறை வழியாக 139-க்கும் அதிகமான தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு அவை நடத்தப்பட்டுள்ளன.

 குரூப் 1, குரூப் 2 உள்பட பல முக்கிய அரசுத் துறைத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளுக்கு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் காகிதத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தன.

 இந்த விண்ணப்ப முறையில் ஓ.எம்.ஆர். எனப்படும் கணினி வழி ஆய்வு செய்யும் காகிதமும் இணைக்கப்பட்டு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டன. இதனால், குரூப் 2, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் போன்ற தேர்வுகளை நடத்தும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன.
 ஆன்-லைன் முறை: காகித முறையிலான விண்ணப்ப முறைக்கு மாறாக, ஆன்-லைன் முறையில் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியது. இந்த முறை கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயலாக்கத்துக்கு வந்தது.


 ஆன்-லைன் தேர்வு முறை காரணமாக, தேர்வர்கள் அனைத்துத் தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்து வருகிறார்கள். இந்தத் தேர்வு முறையால் தேர்வர்கள் எளிமையான முறையில் விண்ணப்பிப்பது மட்டுமின்றி, அரசுக்கும் பெருமளவு செலவுகள் குறைந்துள்ளன.

 இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது:-டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வரலாற்றில் மைல்கல்லாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஆன்-லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் 139 தேர்வுகளுக்கான அறிவிக்கைகளும், அதற்கான விண்ணப்பங்களும், தேர்வு முடிவுகளும் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டன.

ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் - சென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபின் அமைச்சர் அன்பழகன் பேட்டி

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!; ஆசிரியர் மீதான நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் 'நீல் டவுன்' போராட்டம்

கிருஷ்ணகிரி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை முதன்மைக் கல்வி அலுவலர் எந்தவித விசாரணையுமின்றி சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயபிரகாஷ் (55). கடந்த 5 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், பெற்றோர் ஆசிரியர் கழகம், மாணவர்கள், ஊர்மக்கள் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆனால், புகார் மனுக்களின் உள்விவகாரங்கள் குறித்து விரிவான விளக்கம் சொல்லப்படவில்லை. மேலும், புகார்கள் தொடர்பாக அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணைகளும் வழங்கப்படவில்லை. வழக்கமான சம்பிரதாயமான நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு, திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை சஸ்பெண்ட் செய்துள்ளதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


இதற்கிடையே, ஆசிரியர் ஜெயபிரகாஷ் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள் முட்டிக்காலிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.