யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/10/15

அண்ணா நூலக பணிகளை முடிக்க தவறினால் பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆஜராக வேண்டி வரும் ஐகோர்ட்டு எச்சரிக்கை-Daily Thanthi

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து பணிகளையும் 2 மாதங்களுக்குள் செய்து முடிக்கவில்லை என்றால், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது. 
அண்ணா நூலகம் 
சென்னை கோட்டூர்புரத்தில் 2010-ம் ஆண்டு ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்’ கட்டப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி, ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வக்கீல்கள் ஆஷா, சுதந்தரம் ஆகியோரை சட்ட கமிஷனர்களாக நியமித்து, நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த சட்ட கமிஷனர்கள் நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை தமிழக அரசு நிவர்த்தி செய்யவேண்டும் என்றும் நூலக வளாகத்தில் உள்ள கருத்தரங்கங்களை வாடகைக்கு விட்டு வருமானத்தை பெருக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. 
திடீர் ஆய்வு 
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்கீல் கமிஷனர்கள் ஆஷா, சுந்தரம் ஆகியோர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், ‘கடந்த வாரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திடீரென சென்று நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னர், நூலகத்தில் உள்ள அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. ஆனால் நூலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கு மூடிய நிலையிலேயே உள்ளது. அதை பொது பயன்பாட்டிற்கு விடவில்லை’ என்று கூறியிருந்தனர். 
அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ். மூர்த்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு குறைபாடு 
வக்கீல் கமிஷனர்கள் அறிக்கையைப் பார்க்கும்போது, நூலகத்தில் சில பணிகள் நடந்துள்ளன. சில பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நூலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இயங்காததாலும், பாதுகாப்பு பணி தனியாரிடம் ஒப்படைத்துள்ளதாலும், பல புத்தகங்கள் காணாமல் போய் விட்டது. எங்களைப் பொறுத்தவரை, நூலகத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதேநேரம், பாதுகாப்புப் பணிக்காக ஆண்டுக்கு ரூ.2.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகை எதற்காக செலவிடப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த விவரங்களை அரசு தெரிவிக்கவேண்டும். மேலும், நூலகப் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது.
கால அவகாசம் 
புதிதாக புத்தகங்கள் வாங்குவது, மின்னணு நூலகம் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தற்போது, நூலகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும். கருத்தரங்க அறை, உணவகம், தியேட்டர் ஆகியவற்றில் முக்கியப் பணி நடந்துள்ளது. ஆனால், அவற்றை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. 
கழிவறை, குடிநீர், குளிர்சாதன வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகளை முடிக்க டிசம்பர் மாதம் வரை அரசு கால அவகாசம் கேட்கிறது. 
ஆஜராக வேண்டும் 
மேலும், 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரூ.31.66 கோடி வரியை (செஸ்) சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது. இத்தொகையில், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். 
நூலகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் 2 மாதத்துக்குள் அரசு முடிக்க வேண்டும். அப்படி முடிக்காவிட்டால், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடவேண்டியது வரும். இந்த வழக்கு விசாரணை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். 
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக