அதில் ஒன்றுதான்.. ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்படும் என்ற ஒரு அறிவிப்பு.
மிக நல்ல திட்டம்தானே என்று பலரும் வரிந்து கட்டிக் கொண்டு பாய்ந்து வருவீர்கள்..
ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
காலத்திற்கு ஏற்றார் போல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தகுதியற்ற ஆசிரியர்களே இருக்கக்கூடாது.
அவ்வாறு இருப்பின் அது மாணவர்கள் சமுதாயத்தையேப் பாதித்துவிடும்.
எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு வைத்தால் என்ன தப்பு?
அதுமாத்திரமா.. வாத்திமார்கள் எங்க சார் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா வேலைக்குப் போறாங்க? எவன் சார் ஒழுங்காப் பாடம் நடத்துறாங்க? வெட்டிப் பயலுக சார்.. பள்ளிக்கூடத்துல போய் தூங்குறாங்க.. வட்டிக்கு விடுதாங்க..
இவனுகளை எல்லாம் தூக்குல போடணும் சார்..
என்றுகூட சொல்வதற்கு இச்சமூகத்தில் பலரும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்..
இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
சர்தார்ஜிக்களைப் பற்றி எப்படி ஒரு மாயத் தோற்றம் இருக்கிறதோ, அதைப் போலத்தான் ஆசிரியர்களைப் பற்றியும் ஒரு எதிர்மறைக் கருத்து சினிமாக்கள் வழியாக.. கதைகள் வழியாக.. நகைச்சுவைத் தோரணங்கள் வழியாக..ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்டது..
ஆசிரியர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்றால் அந்த தேசத்தில் குழந்தைகள் கல்வி கற்றுத் தேர்வது எப்படி?
கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குத் தினமும் சென்று கொண்டுதானே இருக்கின்றார்கள்?
ஆசிரியர்கள் சரியாகச் செயல்படாத கல்வி நிறுவனத்திற்கு உங்கள் குழந்தைகளை எப்படி அனுப்புகின்றீர்கள்?
இல்ல சார்.. என் பிள்ளை படிக்கும் பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள் எல்லோரும் ஒழுங்காக வேலை பார்க்கிறார்கள்..
ஓ.. அப்ப எந்த ஆசிரியர் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை?
அதுவா.. அது.. அன்னைக்கு ஒரு பேப்பர்ல போட்டிருந்தாங்களே..
எந்த ஊர்ல?
ம்..ம்..அது எதுக்கு சார்? பொதுவா வாத்திமார் யாரும் ஒழுங்கா வேலை பார்ப்பதில்லை சார்.. அவ்ளோதான்..
இது என்ன மாதிரியான மனோபாவம்?
எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள்.. என் பிள்ளைக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள் என்று ஒவ்வொருவரும் ஒத்துக் கொள்வார்கள்..
ஆக, பிழை எங்கிருக்கிறது என்றால்.. நமது உளவியலில் இருக்கிறது..
இவன்தான் காலையிலேயே வெள்ளையும் சொள்ளையுமா பள்ளிக்குப் போகிறான்.. சாயங்காலம் வீட்டுக்கு ஜம்முன்னு வருகிறான்..
இதைத் தினமும் பார்க்கும் பொழுது, நம்மையறியாமல் அவர்கள் மீது ஒரு எரிச்சல் வருகிறது.. பொறாமை வந்து விடுகிறது.. இது இயல்பு.
ஆகவேதான் 100ல் 1 ஆசிரியர் செய்யும் தவறுகளைப் பூதாகாரப் படுத்தி, அதை எல்லோர் முகத்திலும் பொறுத்திவைத்து மனம் மகிழ்கின்றான்..
தவறிழைக்கும் மனிதர்கள் சமூகமெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். இதில் விதிவிலக்கேக் கிடையாது.. சில ஆசிரியர்களும் அதில் உள்ளடக்கம்.
உங்கள் ஊரில் 100 ஆசிரியர்கள் இருப்பின், வட்டித் தொழில் செய்யும் ஆசிரியர் ஒருவராக இருப்பார். வகுப்பறையில் தூங்குபவராகவும் அவர் இருப்பார்..
இவரைத் தன் பூதாகர லென்ஸால் பார்க்கும் சமூகம், எஞ்சியுள்ள 99 பேரைக் கவனிக்கத் தவறுகிறது..
அதனுடைய வெளிப்பாடுதான் மத்தியமனித வளத் துறை அமைச்சரின் முடிவும்..
ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு என்பதுவும்.. பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப மறுதேர்வு என்பதுவும்..
எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் எவரும் தகுதித் தேர்வின்கீழ் வந்தவர்கள் அல்ல..
அய்யா அப்துல்கலாமின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் கீழ் வந்தவர்கள் அல்ல..
ஆனாலும், எல்லோரும் படித்தோம்.. நன்றாகவே..
என் பிள்ளைகளும் படிக்கிறார்கள்.. அவர்களின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் கீழ் வந்தவர்கள் அல்ல..
இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கிற IASகள், IPSகள், டாக்டர்கள், தலை சிறந்த சட்ட நிபுணர்கள், நீதிபதிகள், பொறியாளர்கள் யாரும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களிடம் படித்து வர வில்லை..
ஒரு சாதாரண இளநிலை (BA) பட்டம் படித்து முடித்ததும் ஒரு தேர்வெழுதி IAS ஆகி, இந்திய அரசையே ஆட்சி செய்வதற்கு இங்கு முடிகிறது.
IAS ஆகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு ஒருத் தகுதித் தேர்வு இங்கு வைக்கப்படுவதில்லை. அவர்கள் யாரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைத் தகுதித் தேர்வை வைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் முட்டாள்கள் இல்லை.
ஆனால், B.Sc முடித்து, M.Sc முடித்து.. ஆசிரியராகப் பணி புரிவதெற்கென்றேத் தனியாக இரண்டு ஆண்டுகள் படித்து, பயிற்சி முடித்து, தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று இவர் ஆசிரியராகப் பணி புரியத் தகுதியானவர்தான் என்று ஒரு அரசே பட்டம் வழங்கிய பிறகும், அவர் தகுதியானவர்தானா என்று இன்னும் ஒரு தகுதித் தேர்வு வைப்போம் என்பதுவும், பிறகு அதுவும் போதாது என்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தேர்வு வைத்துக் கொண்டே இருப்போம் என்பது மட்டும் எந்த வகையில் நியாயம்?
காரணம், ஆசிரியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்கிற எண்ணம் இந்த அரசிற்கு இருப்பதால்தான் இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.
நாடு முழுவதும் 60 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் எத்தனை பேரைக் குற்றப்படுத்துகிறோம்?
6 பேரை?
60 பேரை?
600 பேரை?
6000 பேரை?
60000 பேரை?
600000 பேரை?
அல்லது..
6000000 பேரையுமா?
ஒரு மருத்துவருக்கு, ஒரு வழக்கறிஞருக்கு, ஒரு நீதிபதிக்கு, ஒரு இஞ்சினியருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தகுதித் தேர்வு தேவையில்லையா?
அவர்களும் தங்கள் நுண்ணறிவை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா?
1970ல் மருத்துவம் படித்துப்பட்டம் பெற்ற ஒரு மருத்துவருக்கு இப்போதைய நவீன மருத்துவத்துறை பற்றி தேர்வினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டியது அவசியம் இல்லையா?
ஒரு தகுதித் தேர்வு என்ற பெயரில், பிங்கிப் பிங்கி முறையில் டிக் அடித்துத் தேர்ச்சி பெறும் ஒருவரா சிறந்த ஆசிரியர்?
ஒரு ஆசிரியருக்கு, மாணவர்கள் கவனத்தைத் தன்பால் ஈர்த்து, அவர்களுக்கு நன்கு புரியும்படி கற்றுக் கொடுக்கும் திறமைதானே மிக முக்கியம்?
அதை அளவிடாதத் தகுதித் தேர்வுகளும் ஒரு தேர்வா?
எதுவோ அரசாண்டால் எதையோத் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பித்துவிடாதிருங்கள்..
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளியுங்கள்.. அவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வார்கள்..
தகுதியற்ற ஆசிரியர்களைப் பெற்றோர்களே ஒதுக்கிவிடுவார்கள்..
எவருக்கும் அதுபற்றிக் கவலை வேண்டாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக