சீருடை பணியாளர் தேர்வாணைய குழப்பத்தால், தமிழக காவல் துறையில் 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் பெரும்பாலான மனுக்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மே 21 ல் நடக்கிறது. இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, தபால் அலுவலகங்களில் இளைஞர்கள், ஆர்வமுடன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஜன.,23ல் சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், விளம்பர எண் 116 என குறிப்பிடப்பட்டிருந்தது. விண்ணப்பத்தை நிரப்பும்போது, விண்ணப்பதாரர் இந்த எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த எண்ணை விண்ணப்பத்தின் 'ஓ.எம்.ஆர்.,' சீட்டில் எப்படி குறிப்பது என்பது குறித்து தேர்வாணையம் உதாரணமும் வெளியிட்டுள்ளது.
அதில், தேர்வுக்கான விளம்பர எண்:116 என கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை விளம்பரத்தில் தெரிவித்தவண்ணம் 117 என பாவித்து, அதற்குரிய அடைப்பு குறிக்குள் கருமையாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விண்ணப்பத்தில் '116' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த எண்ணை குறிப்பிடுவது என்ற குழப்பத்தில் விண்ணப்பத்தாரர்கள் ஆளாகியுள்ளனர். தவிர, சான்றிதழ்களின் நகல்களில் விண்ணப்பத்தாரர்கள் சுயகையொப்பமிட வேண்டும் என விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுகுறித்து விண்ணப்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனால் விண்ணப்பதாரர்களில் பலர் 'கெசட்' ஆபீசர்களின் கையொப்பம் பெற்று விண்ணப்பத்தை அனுப்பி வருகின்றனர். இதன்காரணமாகவும், விளம்பர எண் குழப்பத்தாலும் விண்ணப்பதாரர்களின் மனுக்கள் நிராகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தெளிவான விளக்கத்தை சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக