யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/4/17

மாற்றம் எப்போது? - வெயிலில் வாடும் துளிர்கள்*


கோடை கொளுத்துகிறது. தகிக்கும் வெயிலோடு உயர் நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஆண்டுத் தேர்வுகளை எழுதி முடித்திருக்கிறார்கள். ஆனால் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இன்னமும் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர் களுக்கு அவர்களைவிட கூடுதலாக 20 நாட்கள் பள்ளிக்கூடம் வர வேண்டிய கட்டாயம்.
ஆண்டுக்கு 220 நாட்கள்
காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் இந்த சம்பிரதாயத்தை மாற்றி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் வேலை நாட்களை குறைத்து அவர்களையும் கோடையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன. உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு வேலை நாட்கள் 200 என நிர்ணயித்திருக்கும் அரசு, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 220 நாட்களாக வைத்திருக்கிறது. இதனால், மற்ற மாணவர்களுக்கு விடுமுறை தொடங்கிய பிறகும் இந்தக் கோடை வெயிலில் கூடுதலாக 20 நாட்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு.
“நாட்களை பூர்த்திசெய்ய வேண்டும் என்பதற்காகவே தொடக்கப்பள்ளி மாணவர் களுக்கு இப்படி கூடுதல் நாட்கள் வகுப்புகள் வைத்திருக்கிறார்கள். இதனால், அந்த மாணவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக, கோடை வெப்பத்தின் பாதிப்புகளுக்குத்தான் ஆளாக வேண்டும். எனவே, இனியாவது கூடுதல் நாட்களை குறைக்க அரசு முன்வர வேண்டும்” என்கிறார் மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வை.வெங்கடேசன்.
முன்பு 180 நாட்கள்தான்
25 வருடங்களுக்கு முன்பு அனைத்து பள்ளி களுக்கும் ஆண்டு வேலை 180 நாட்களாகத்தான் இருந்தது. அந்த 180 நாட்களையும் அந்தந்தப் பகுதி சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட இந்த 180 நாட்கள் மட்டும் எங்களது பள்ளிகள் இயங்கும் என கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் போதுமானது. சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் ஜூன் மாதத்தில் வெப்பம் தகிக்கும். அதனால், முன்பெல்லாம் சென்னை மாவட்டப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 3 வரை மட்டுமே வேலை நாட்கள் இருந்தது. அதேபோல் ஜூன் 20-க்குப் பிறகு தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.
குளிர் காலத்தில் அதிக விடுமுறை
மேற்கு மாவட்டங்களில் ஜூன் மாதம் வெப்பம் தனிந்து மழை சீசன் தொடங்கிவிடும் என்பதால் அங்கெல்லாம் ஏப்ரல் 5-ம் தேதியுடன் பள்ளிகளை மூடிவிட்டு ஜூன் முதல் வாரத்தில் திறந்தார்கள். உதகை உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் குளிர்காலத்தில் அதிக நாட்கள் விடுமுறை அளித்துவிட்டு, மே மாதத்தில் பள்ளிகள் இயங்கின. ஆனால், இப்போது இதையெல்லாம் மாற்றிவிட்டு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் பள்ளிகளை மூடி ஒரே சமயத்தில் திறக்கிறார்கள். ஒருவேளை, ஜூனில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தால் மட்டுமே பள்ளிக்கூடங்கள் திறப்பதை கூடுதலாக சில நாட்கள் தள்ளி வைக்கிறார்கள். அதுவும் ஒட்டுமொத்த தமிழகத்துக்கான முடிவாகத்தான் எடுக்கப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. அதை கவனத்தில் கொள்ளாமல், நாடு முழுவதும் பள்ளிகளை ஒரே சமயத்தில் திறந்து ஒரே சமயத்தில் கோடை விடுமுறை விடவேண்டும் என்று மத்திய அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அது எத்தகைய நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்துமோ அது மாதிரியான சிக்கல்களைத்தான் தமிழகத்துப் பள்ளி மாணவர்களும் எதிர்க்கொண்டு வருகிறார்கள்.
புழுக்கமான சூழலில்…
இதுகுறித்துப் பேசிய கல்வியாளரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான எஸ்.எஸ்.ராஜகோபாலன், “நல்ல காற்றோட்ட வசதியும் வெளிச்சமும் இருந்தால்தான் பிள்ளைகள் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியும். கோடைக் காலத்தில் காற்றோட்டம் இருக்காது. அதனால், பிள்ளைகளும் ஆசிரியர்களும் புழுக்கமான சூழ்நிலையில்தான் வகுப்பறையில் அமர்ந்திருக்க வேண்டும். இந்தச் சூழலில் பிள்ளைகள் எப்படி பாடம் படிப்பார்கள், ஆசிரியர்கள் எப்படிப் பாடம் நடத்துவார்கள்? நான் ஓய்வுபெற்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதெல்லாம் இத்தகைய கோமாளித்தனங்கள் இல்லை. இப்போது, பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதைக்கூட சரிபார்க்கத் திராணி இல்லாத அரசு நிர்வாகம், இதையெல்லாம் பெரிய நிர்வாகத் திறமையாக பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.’’ என்கிறார்.
கோடையின் தாக்கம் மாணவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளையும் தோல் வியாதிகளையும் உருவாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இறுக்கமான சூழலில் பயிற்றுவிக்கப்படும் எந்தப் பயிற்சியும் முழுமையான பலனைத் தராது என்கிறார்கள் உளவியலாளர்கள். இந்த சங்கடங்களையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் பள்ளி வேலை நாட்களைக் குறைந்தபட்சம் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளே தங்கள் மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற வகையில் தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கட்டும்!
நன்றி:- தி இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக