2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில்,பணிபுரியும்
பெண்களுக்கான வருங்கால வைப்பு நிதி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாகப் பெண்களும் ஆண்களும் தங்களது சம்பளத்திலிருந்து 12 சதவிகிதத்தைச் செலுத்துகின்றனர். இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள் தங்களது சம்பளத்திலிருந்து செலுத்தும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களது வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளத்தின் அளவு உயரும் என்பதால் பணிபுரியும் பெண்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
சர்வதேச அளவில் மொத்த பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 40 சதவிகிதமாக இருக்கிறது. அதேநேரம் இந்தியாவில் அவர்களின் பங்களிப்பு 24 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்று பொருளாதார வல்லுநர்களும் தொழில் துறை நிபுணர்களும் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ள வருங்கால வைப்பு நிதி அறிவிப்பு அதற்கு ஒரு பாதையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக