யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/3/18

அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்' -புதிய அகராதி சிறப்பு கட்டுரை!!!


  
கம்ப்யூட்டர், டேப்ளட், டிரைமெஸ்டர், தொடர் மதிப்பீட்டு முறை, 

ஆங்கில வழி என அரசு தொடக்கப்பள்ளிகள் ஒருபுறம் நவீனமாகி வந்தாலும், சமூகத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களை அரசாங்கம் கொத்தடிமைகளைப் போல நடத்தும் போக்கு, அவர்களை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருமுறை ஊதிய உயர்வுக்காக போராடும்போதும் அவர்களை கேலி பேசும் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அந்த எண்ணத்தில் எனக்கு இப்போதும் பெரிய மாற்றுக்கருத்து இல்லை. உழைக்காமலேயே ஊதியம் பெறும் வர்க்கமாக ஆசிரியர்களை சித்தரித்திருப்பதில் அரசுக்கே பெரும் பங்கு உண்டு என்றுதான் சொல்வேன்.


கைநிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால் போதும். அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற மனோபாவத்தில் அரசாங்கம் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்றால் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு திரும்பிய திசையெங்கும் அடிமேல் அடி எனப் புலம்பினார் ஆசிரியர் நண்பர் ஒருவர். அரசுத்துறைகளில் போகிறவர், வருபவர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்க்கும் அதிகாரத்தை வழங்கியிருப்பது என்ன மாதிரியான வடிவமைப்பு எனத் தெரியவில்லை.

கடந்த 2016-17ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35414 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 29.10 லட்சம் மாணவர்களும், 9708 நடுநிலைப்பள்ளிகளில் 17.42 லட்சம் மாணவர்களும் படிப்பதாக கூறுகிறது அரசின் நிதிநிலை அறிக்கை. தொடக்கக் கல்வித்துறையில் 2.23 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

பாடம் நடத்துவதைத் தவிர ஆசிரியர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கப் போகிறது? என்பதுதான் மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் எண்ணம். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, குழந்தைகளுக்கு சாதி, வருமானம் உள்ளிட்ட மூவகை சான்றிதழ் பெற்றுத்தருவது போன்ற வருவாய்த்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்ய வேண்டும் என்பது பரவலாக அறிந்திருக்கும் தகவல்தான்.

ஆனால், தொடக்கக் கல்வித்துறையின் அண்மைக்கால போக்கு ஆசிரியர்களை உளவியல் ரீதியான நெருக்கடிக்கு தள்ளிவிட்டிருப்பதாக பலரும் சொல்கின்றனர்.

”தினமும் காலையில் வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஒவ்வொரு குழந்தையும் காலையில் பொதுக்கழிப்பிடத்தில் ஒண்ணுக்கு, ரெண்டுக்கு போனார்களா? வீட்டில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தினார்களா? என்று குழந்தைகளிடம் கேள்வி கேட்டு உண்மையைக் கண்டறிய வேண்டும்.


கழிப்பறையை பயன்படுத்தி இருந்தால் பச்சை மையினாலும், பொதுவெளியைப் பயன்படுத்திய மாணவர்களை சிவப்பு மையினாலும், பள்ளிக்கு வராத குழந்தைகளை கருப்பு அல்லது நீல நிற மையினாலும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் ஆசிரியர் பயிற்றுநர் வரை யார் வந்தாலும் முதலில் இந்த வருகைப் பதிவேட்டைத்தான் பார்க்கின்றனர். அதனால், அதில் கவனம் செலுத்துவதிலேயே எங்களுக்கு பாடவேளையின் முதல் பதினைந்து நிமிடங்கள் கழிந்து விடுகிறது.

இது இப்படி என்றால், அன்றாடம் எத்தனை குழந்தைகள் சத்துணவு சாப்பிடுகின்றனர்? என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் சேகரித்து, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு செல்போன் மூலம் காலை 11 மணிக்குள் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

சத்துணவுத் திட்டத்திற்கென ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் தனியாக சத்துணவு அமைப்பாளர், சமையலர்கள் உள்ளனர். அவர்களிடம் கேட்டுப்பெற வேண்டிய தகவலை, தலைமை ஆசிரியர்களை அனுப்புமாறு நிர்ப்பந்திக்கின்றனர்.

இதற்கே எங்களுக்கு முதல் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. பிறகு எப்படி நாங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்த முடியும்?” என புலம்பினார் கொங்கணாபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர்.

அதிகாரிகள் கேட்ட விவரங்களை சொன்ன நேரத்திற்குள் எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடியுரிமைப் பணிகள் (கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதி 17 (ஏ)-ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்படும் என்றும் மிரட்டப்படுகின்றனர்.

ஏர்செல் நெட்வொர்க் செயலிழந்ததால் குறித்த நேரத்தில் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த மாதம் பிப்ரவரி 16ம் தேதி, ஏற்காடு வட்டாரத்தில் 35 தலைமை ஆசிரியர்களுக்கு 17 (ஏ)ன் கீழ் விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணையை, உரிய விளக்கம் கொடுத்த பிறகும் உடனடியாக ரத்து செய்யப்போவதில்லை. அதை ‘ப’ வைட்டமின் மூலம்தான் ரத்து செய்ய முடியும் என்பதை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும்தானே?

தேர்தலையொட்டி மட்டுமே நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் இப்போதெல்லாம் ஆண்டு முழுவதுமே மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் ஒரு செயலியை வடிவமைத்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாக்காளரின் முகவரியை அடைந்த பின்னர், ஆசிரியர்கள் அந்த செயலியை திறக்க வேண்டும். அதில் கோரப்படும் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பல நேரங்களில் அந்த செயலி திறப்பதற்கு தாமதம் ஆவதால், கால விரயம் ஆவதாகவும் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாத ஆசிரியர்களின் பாடு ரொம்பவே சிரமம்தான். எல்லோரையும் இந்த அரசாங்கம் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்க மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகிறது. இதற்காக அவர்களுக்கு மானியமோ, குறுஞ்செய்திகளுக்கென தொகையோ தருவதில்லை.

செயலி டவுன்லோடு ஆவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை எல்லாம் கருத்தில் கொள்ளாத அதிகாரிகள், தாமதம் ஆனால் ஆட்சியர் அறிவுறுத்தலின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டலுடனேயே ஆசிரியர்களை பணிக்கின்றனர்.

”பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 7000 ரூபாய் அரசு வழங்குகிறது. அவர்களைக் கண்காணிக்கும் டிஎல்ஓ அந்தஸ்திலான தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர்.

நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் இங்கிலீஷ் பயிற்சி முகாம், பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி, கேள்வி ஒரு கலை பயிற்சி, தூய்மை பாரதம் பயிற்சி என நிறைய பயிற்சி முகாம்கள் உள்ளன.

இதுபோன்ற பயிற்சி முகாம்களால் பாடத்திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிப்பதில் சிக்கல் நிலவுகிறது,” என்கிறார் வீரபாண்டி வட்டாரத்தைச் சேர்ந்த மற்றோர் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்.

பள்ளி தகவல் தொகுப்புத் திட்டத்திற்காக (EMIS) ஒரு பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியும் டவுன்லோடு ஆக வெகு நேரம் ஆவதாகச் சொல்லும் ஆசிரியர்கள், குழந்தைகளின் ஆதார் விவரங்களை சேகரித்து அனுப்பும் பணியிலும் பணிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினர்.



தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும் (இங்கிலீஷ் மீடியம்) பயிற்றுவிக்கப்படுகிறது. மொழிப்பாடங்கள் தவிர கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மீடியத்திலும் உள்ளன.

இந்த இரண்டு மீடியத்தையும் ஒரே ஆசிரியர்தான் நடத்த வேண்டும். அப்படி எனில், ஒரே ஆசிரியர் இரண்டு மீடியத்திலும் சேர்த்து 10 பாடங்களை நடத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. ஆர்டிஇ பரிந்துரையைக் காட்டிலும் இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் : மாணவர் விகிதம் ரொம்பவே குறைவுதான். எனினும், ஆசிரியர்களின் உழைப்பு ஒன்றுதானே?

ஆங்கில வழியில் நடத்துவதற்கென தனியாக ஆங்கிலத்தில் சரளமாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் வழியில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டே நடத்தும்போது ‘Zebra’வை ‘ஜீப்ரா’ என்று குழந்தைகள் உச்சரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியர் புதிய கோணத்தில் சொன்னார்.

”இளம் ஆசிரியர்களில் சிலர் பள்ளியை விட்டு வெளியே சுற்றவே ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு அரசாங்கமே தாராளமாக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் எழுத்தர் பணிகளையும் ஆசிரியர்களே செய்து கொள்ள வேண்டும்.

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட மெமோ.

அதற்கென தனி ஊழியர் இல்லாததால், குழந்தைகளுக்கான சான்றிதழ் பெற்றுத்தருவது, சத்துணவு வேலைகள், கல்வி அலுவலகம் சார்ந்த பணிகளில் ஈடுபடவே ஆசிரியரின் பெரும்பகுதி நேரம் போய் விடுகிறது.

இந்த நெருக்கடிகளுக்கு இடையில்தான் குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டும். ஆகாயத்தில் இருந்து குதித்து வரும் அதிகாரிகள், திடீரென்று ஒரு நாள் பள்ளியில் ஆய்வு செய்துவிட்டு கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பதாகக் கூறிவிட்டு, எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தர்மம் இருக்கிறது?,” என வினா எழுப்பினார் அந்த ஆசிரியர்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அசோக்குமார் (பொ) சில நாள்களுக்கு முன்பு, வித்தியாசமான ஓர் உத்தரவை பிறப்பித்து இருந்தார். மூன்றாம் பருவ பாடத்திட்டத்தை முடிப்பதற்குள் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடக்கூடாது என்பது அவருடைய உத்தரவு.

மூன்றாம் பருவ பாடத்திட்டம் எப்போது முடியும் என ஆசிரியர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஏப்ரல் மத்தியில். அதன்பிறகு தேர்வு. அந்த மாதத்துடன் கோடை விடுமுறை விடப்பட்டு விடும் என்றார். எனில், எப்போது ஆண்டு விழா கொண்டாடுவது? அதற்காக ஒதுக்கப்படும் நிதியை என்ன செய்வது?

ஆசிரியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அந்த அதிகாரி தனது உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஓர் ஆசிரியர், வகுப்பறைக்குள் குழந்தைகளிடம் தாயாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தர்க்க நியாயம் இருக்கிறது. ஆனால், அவரே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர், வருவாய்த்துறை ஊழியர், தேர்தல் ஆணைய ஊழியர், துப்புரவாளர், பள்ளிக் காப்பாளர் என ‘தசாவதாரம்’கமல்ஹாசனைக் காட்டிலும் பல அவதாரங்களை எடுக்க வைப்பது தகுமா?

ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிந்தால்தான் கல்வித்தரம் வளரும் என தமிழக அரசாங்கம் கண்களை மூடிக்கொண்டு கணக்குப் போட்டிருக்கிறது.

இந்த துன்புறுத்தலினால் அல்லல்படுவது ஆசிரியர் சமூகம் மட்டுமல்ல; ஏழைக் குழந்தைகளும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக