நீ எந்தக் காகம்?
பலராம் பிழைப்பதற்கு வழியின்றித் தவித்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை....ஒரு நாள் அறிவுமதி என்ற அறிஞரைச் சந்தித்தான். அவரிடம் தன் கஷ்டங்கைச் சொன்னான்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் அறிவுமதி. அவர் பலராமிடம், ""இந்த பூமி பரந்து விரிந்து கிடக்கிறது....இந்த ஊரில் உனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வெளியூர் சென்று வேலை தேடு...உன் முயற்சிக்கு ஏற்ப இறைவன் கூலி தருவான்...''
பலராமும் சம்மதித்துப் புறப்பட்ட மூன்றாம் நாள் ஊருக்குத் திரும்பினான்.
ஊருக்குத் திரும்பியவன், அறிவுமதியைச் சந்தித்தான்.
அவரிடம், ""தங்கள் அறிவுரைப்படி நான் கிளம்பிவிட்டேன்.....வழியில் பாலைவனம்!....ஒரே ஒரு மரம் மட்டும் தென்பட்டது....கடுமையான வெயிலில் நடந்து களைத்துப் போய் அந்த மர நிழலில் அமர்ந்தேன்....அந்த மரத்தில் சிறகொடிந்த ஒரு நொண்டிக்காகம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது...அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இன்னொரு காகம், தான் கொண்டு வந்த உணவை இந்த நொண்டிக் காக்கைக்கு ஊட்டி விட்டுச் சென்றது! எங்கோ பாலைவனத்தில் பசியால் கிடந்து துடிக்கும் ஒரு நொண்டிக்காக்கைக்கு மற்றொரு காகத்தின் மூலம் உணவை அளிக்கும் இறைவன், என்னை மட்டும் கை விட்டு விடுவானா....என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது!....திரும்பி வந்து விட்டேன்!...'' என்றான்.
அறிவுமதி சிரித்துக் கொண்டே, ""அது சரி!....நீ அதில் எந்தக் காகம்?'' என்று கேட்டார்.
""ஐயா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''
""யாராவது உணவு தருவார்களா,....என்று பரிதவிக்கும் நொண்டிக் காகமா?....அல்லது .....பாடுபட்டு உணவு தேடி தானும் உண்டு பிறருக்கும் வழங்கும் வலிமை உள்ள காகமா?...நீ எந்தக் காகமாக இருக்கு விரும்புகிறாய்?''
இப்போது நம்பிக்கையோடு உற்சாகமும் பலராமுக்கு ஏற்பட்டு விட்டது.
தற்போது அவன் வறுமை நீங்கி சந்தோஷமாக இருக்கிறான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக