யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/12/18

முதல்வர் மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு: இன்று முதல் அமல் :

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் பேர் ரூ.5,133.33 கோடி அளவுக்கு பயன் அடைந்துள்ளனர்.
 முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இப்போது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதைப் பரிசீலனை செய்து ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

 இன்று முதல் நடைமுறை: மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள அறிவிப்பானது டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
 அடிப்படைத் தகுதி: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புவோர் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களைப் பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
 ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம்பெற்று இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பவர்களும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிப்பது முக்கியம். தமிழக முகாம்களில் உள்ள இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், முகாம்களில் தங்கியிருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமானச் சான்றும் இல்லாமல் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 இதுவரை எத்தனை பேர்: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதுவரை அதாவது கடந்த வியாழக்கிழமை வரை இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக, பெருநகரங்களைச் சேர்ந்த மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். சென்னையில் 1.95 லட்சம் பேரும், கோவை மாவட்டத்தில் 1.47 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 1.46 லட்சம் பேரும், விழுப்புரத்தில் 1.33 லட்சம் பேரும், வேலூரில் 1.35 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.43 லட்சம் பேரும், சேலத்தில் 1.38 லட்சம் பேரும், ஈரோட்டில் 1.10 லட்சம் பேரும், மதுரையில் 1.37 லட்சம் பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 1.01 லட்சம் பேரும் பயன்பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக