தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு தொகையை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரமாக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 1965ல், நிறைவேற்றப்பட்ட, போனஸ் சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே, போனஸ் சட்டம் பொருந்தும். போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மற்றும் போனஸ் தொகை, கடைசியாக, 2006ல், உயர்த்தப்பட்டது. இந்நிலையில், போனஸ் மற்றும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்த வேண்டுமென, நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. செப்டம்பர் 2ல், தொழிற்சங்கங்கள், ஒரு நாள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அப்போது, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்திய மத்திய அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று(21-10-15) நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது; இனி, 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுவோருக்கு போனஸ் கிடைக்கும்.
மேலும், தொழிலாளர்களுக்கான போனஸ் உச்சவரம்பாக உள்ள, 3,500 ரூபாயை இரட்டிப்பாக்கியுள்ள மத்திய அமைச்சரவை, அதை, 7,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. விரைவில் கூடவுள்ள பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத் தொடரில், இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
* இந்தியா - எகிப்து இடையேயான, கடல்சார் போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்துக்கும், வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணும் விஷயத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
* பயங்கரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில், மாலத்தீவு நாட்டுடன் இணைந்து செயல்படுவதற் கான ஒப்பந்தத்துக்கும் ஓப்புதல் அளிக்கப்பட்டது.