பி-ஸ்கூல் எனப்படும் வணிகப் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு
வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும், இங்குப் பயிலும் 20 சதவிகித மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர் எனவும் அசோசெம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம், இந்திய வணிகப் பள்ளிகளில் பயிலும் மானவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய ஆய்வு மேற்கொண்டது. பணமதிப்பழிப்பு, புதிய திட்டங்கள் நிறுத்தப்படுவது மற்றும் மந்தமான தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் இம்மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக அசோசெம் கூறுகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் 30 சதவிகிதம் குறைவான அளவிலேயே பி-ஸ்கூல் மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல பி-ஸ்கூல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமானது 40 முதல் 45 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளது.
இந்த வணிகப் பள்ளிகளில் இவ்வளவு கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டுமா என்று மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சிந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. 400க்கும் மேற்பட்ட இதுபோன்ற நிறுவனங்கள் செயலிழந்துவிட்டன. மேலும், 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் டெல்லி, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, டேராடூன் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த சுமார் 250 பி-ஸ்கூல்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் சீட்டுகளை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாலும், தரமான மாணவர்களைத் தேர்வு செய்யத் தவறுவதாலும் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்குத் தீர்வாக உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது, சிறந்த பயிற்சி அளிப்பது மற்றும் ஆராய்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தில் அதிகம் செலவிடுவது போன்றவை தீர்வாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.