யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/11/15

பாடம் முடிக்காமல் தேர்வா?

வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., செமஸ்டர் தேர்வு டிச., 7ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதனால், வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:மழையால், 18 நாட்களாக கல்லுாரி இயங்காமல், பாடங்கள் பாக்கி உள்ளன. புறநகரில், பல கல்லுாரிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில், கல்லுாரிகளுக்கு செல்லும் வழிகளில், வெள்ளம் வடியவில்லை. இந்த ஆண்டில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமாகிறது. இந்நிலையில், பாடங்களை முடிக்காமல், மாதிரித் தேர்வும் நடத்தாமல், செமஸ்டர் தேர்வு எழுதினால், மதிப்பெண் குறையும்; தர வரிசையில் பாதிப்பு ஏற்படும்.
முதல் செமஸ்டருக்கு, 65 நாள் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மழை விடுமுறையால், 12 நாள் வீணாகியது. இன்னும் கல்லுாரி எப்போது திறக்கப்படும் எனத் தெரியவில்லை. எனவே, மழை விடுமுறையை கணக்கிட்டு, தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலை கல்லூரிகளுக்கு தரவரிசை: யு.ஜி.சி.,

நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும், தரவரிசை திட்டத்தை கட்டாயப்படுத்தி, யு.ஜி.சி., சேர்மன் வேத் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து கல்லுாரிகளும், மூன்று ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை, ஆராய்ச்சி எண்ணிக்கை, பேராசிரியர் திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல புள்ளி 
விவரங்களை, https://www.nirfindia.org/Home இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, அவர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த பட்டியலில், மொத்தம், 795 பல்கலைகள், 39 ஆயிரம் இணைப்பு கல்லுாரிகள் இணைக்கப்பட்டு, 2.37 கோடி மாணவர்களின் கல்வி தேர்ச்சியும், 10.15 லட்சம் பேராசிரியர்களின் கற்பித்தல் திறனும், ஆய்வு செய்யப்படுகின்றன.

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'

'மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்து உள்ளது.
தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன.

ஆனால், 2003க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்டதும், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டன; இதனால், கணக்கு பராமரிப்பில் குழப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் நிர்வாகத்துக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கும் மாற்ற, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் சரி செய்யப்பட்டன.
இதற்கிடையே, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, புதுக்கோட்டை மற்றும் துாத்துக்குடி ஆகிய, ஏழு மாவட்டங்களில், தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான ஆசிரியர்களின், பி.எப்., கணக்கு விவரங்களை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து, ஆசிரியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் உள்ள, 81 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். இது பற்றி விவாதிக்க, டிசம்பர், 4ல், சென்னையில் மாவட்ட கல்வி அதிகாரி கள் அவசரக் கூட்டத்தையும், அவர் கூட்டியுள்ளார்.

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

தீபாவளி விடுமுறைக்கு பின்னர், தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை (நவ. 26) திறக்கப்பட்டன. 
இதில், குறிப்பிட்ட 24 பள்ளிகளில் மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இந்த 24 பள்ளிகளுக்கும் வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில் விடுமுறை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இந்தப் பள்ளிகளின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த மதிப்பெண் மாணவர்களுக்காக வெற்றிப்படி! மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

கோவை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்காக, 'வெற்றிப்படி' என்ற, சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2,480 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மாநகராட்சி பள்ளிகளில், அரையாண்டு தேர்வுக்கு பிறகு, காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கவும், தேர்வு எழுதும் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கவும், 'வெற்றிப்படி' என்ற திட்டத்தை மாநகராட்சி துவங்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகமும், 'அறம் அறக்கட்டளை'யும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. கடந்த அக்டோபரில் திட்டம் துவங்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், காலாண்டு தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சிறப்பு வகுப்பில், பயிற்சி அளிக்கப்படுகிறது.

'அறம் அறக்கட்டளை' நிர்வாக அறங்காவலர் லதா கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், குறைந்த மதிப்பெண் பெற்ற, 300 மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சித்தாபுதுார், ராமநாதபுரம், வெங்கிட்டாபுரம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ஒக்கிலியர் காலனி,
வடகோவை, ரத்தினபுரி, வெரைட்டிஹால் ரோடு மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

திட்டத்துக்காக, கமிஷனர், மாநகராட்சி கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி வகுப்புக்கு, 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்துக்காக, 3.5 லட்சம் ரூபாய் அறக்கட்டளை மூலம் செலவிடப்படுகிறது.

வழக்கமாக, வகுப்பறையில் பாடம் நடத்துவது போன்றில்லாமல், 'விஷூவல்' முறையில் பாடம் நடத்தப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.பொதுத்தேர்வில், 35 மதிப் பெண் பெற்று, வெற்றி பெறுவதற்கு பாடத்திட்டத்தில், எந்தெந்த பாடங்களுக்கு, எந்த வினாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒரு மதிப்பெண் வினாக்கள் எந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் என, பல்வேறு தகவல்களுடன் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

'விஷூவல்' முறையில் வகுப்பு நடப்பதால், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றனர். இந்த முறையில் கல்வி போதிப்பதால், மாணவர்களின் மனதில், 80 சதவீதம் ஞாபக சக்தி அதிகரிக்கும். வாரத்தில், புதன் கிழமையில் மாலை நேரத்திலும், சனிக்கிழமையில் முழு நேரமும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. இவ்வாறு, லதா தெரிவித்தார்.

இந்தாண்டு 'சூப்பர் 50'
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், கடந்த ஆண்டு, 'சூப்பர் 30' என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்தாண்டும் அதே திட்டத்தை செயல்படுத்த, பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு நடக்கிறது.
கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''மருத்துவம், பொறியியல் படிப்புக்கு செல்ல, கடந்தாண்டு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இந்தாண்டு, அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை கொண்டு, 'சூப்பர் 50' பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

தென் கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி: நாளை முதல் 2 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மைய அதிகாரிகள் கூறியதாவது: 
தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்குச் சுழற்சியானது, வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. 


இது, தென்கிழக்கு வங்க கடல், அதை ஒட்டிய பகுதியில் மேலடுக்குச் சுழற்சியாகவே நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறினால், கடலோர மாவட்டங்களில் சனி, ஞாயிறு (நவ 28-29) ஆகிய இரண்டு நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் வாய்ப்புண்டு.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், மிகவும் பலத்த மழை இருக்கும். இந்தப் பகுதிகளில், அதிகப்பட்சமாக 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
மழை நிலவரம்(மி.மீட்டரில்): கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகப்பட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 70 மி.மீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 40 மி.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில் தலைமை ஆசிரியயைக் கண்டித்து, அரசுப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 36 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியûயாக மேட்டூரைச் சேர்ந்த வசந்தகுமாரி பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பள்ளி முன் தொளசம்பட்டி-தாரமங்கலம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவியரை அவதூறாகப் பேசி வரும் தலைமை ஆசிரியயை மாற்றக் கோரி, தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
பெற்றோர்- ஆசிரியர் கழக நிதியாக மாணவர்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிப்பதாகவும், தேர்வுக் கட்டணம் என்று தலா ரூ.100-ம், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டுக்கு ரூ.300-ம் வசூல் செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பள்ளியில் குடிநீர் வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை, சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் நள்ளிரவில் பள்ளியில் புகுந்து அசுத்தம் செய்து செல்வதாகவும் குறை கூறினர். மேலும், மாணவ-மாணவியரை அவதூறாகப் பேசும் தலைமை ஆசிரியயை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து, போலீஸார் விரைந்து வந்து மாணவர்களை சமரசம் செய்து, பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை வசந்தகுமாரியிடம் கேட்ட போது, மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார். பள்ளியில் சிலர் மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளி செல்லா குழந்தைகள் விபரம்: 8 ம் வகுப்பு வரை சேகரிக்க உத்தரவு

எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் விபரங்களை சேகரிக்க, கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில், 14 வயது வரை, கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என கட்டாயக்கல்விச்சட்டம் வலியுறுத்துவதால், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், அடுத்த கல்வியாண்டுக்கான வரைவு திட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களின் விபரங்களையும், பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன், விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார். அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், இந்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்திட்டம் அமைய உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

19 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officer
வயது வரம்பு: 


31.12.2015 தேதியின் அடிப்படையில் 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 31.12.1990க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான ஆப்டியூட் டெஸ்ட், ஆன்-லைன் சைக்கோமெட்ரிக்தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.icicicareers.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

3 நாட்களுக்கு கன மழை

'வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறுவதால், தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாள்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறி வருகிறது. இதனால் அந்தமான் கடல் பகுதியில் மழை பெய்ய துவங்கி விட்டது.தமிழகம் நோக்கி: இந்த காற்று அழுத்த தாழ்வு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும்.தற்போதுள்ள வானிலை நிலவரப்படி அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு, வட சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் இடையே டிச., 1ல் கரையை கடக்கலாம் என, கணிக்கப்படுகிறது. எனவே அதுவரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க வானிலை கணிப்பு மையமும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு குறித்து கணித்துள்ளது. அந்த கணிப்புப்படி தமிழகத்தின் வட கடலோர பகுதியில் டிச., 5 வரை கன மழை பெய்யும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிம்மதி: இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தணிந்து வெயில் பதிவானது. 
இது தேங்கியிருந்த மழை நீர் வடிய வாய்ப்பாக இருந்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம் - 10; திருசெந்துார் - 2; ராமேஸ்வரம், குன்னுார் - 1 செ.மீ., மழை பெய்துள்ளது.குளிர் : தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் குளிர் துவங்கி உள்ளது. தர்மபுரி, வேலுார் மாவட்டம், திருப்புத்துாரில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் என பதிவானது.

26/11/15

மத்திய அரசின் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய  போட்டிக்கு மாணவர்களை  பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.


மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் கட்டுரை மற்றும் ஓவியம் தொடர்பாக போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டன. பெட்ரோல் மற்றும் எரிவாயு ஆகிய இயற்கை வளங்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஓவிய போட்டியும்,நான் எவ்வாறு பெட்ரோலிய பொருள்களை பாதுகாப்பது,சேமிப்பது,தேசிய அளவில் இதனை பாதுகாப்பது தொடர்பாக எவ்வாறு  எடுத்து செல்வது  என்கிற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன..6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட  70க்கும் மேற்பட்ட மாணவர்களில்  மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டிக்கான நிகழ்ச்சியில்  மாணவர் ரஞ்சித்   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை முத்தும் மீனாள் போட்டிகளை நடத்தினார்.போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில்  மூவரை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.

               கட்டுரை போட்டியில்  8ம் வகுப்பு மாணவர்  கண்ணதாசன்  முதல் பரிசும்,7ம்  வகுப்பு மாணவி தனலெட்சுமி   இரண்டாம் பரிசும்,அதே  வகுப்பு மாணவி பார்கவி லலிதா மூன்றாம் பரிசும் பெற்றனர். ஓவிய போட்டியில் 8ம் வகுப்பு மாணவி தனம் முதல் பரிசையும்,7ம்  வகுப்பு மாணவி பிரவீனா  இரண்டாம் பரிசையும் ,அதே  வகுப்பு மாணவர்  பரத்குமார்  மூன்றாம் பரிசையும் பெற்றனர்.நிறைவாக மாணவர் ஜெகதீஸ்வரன்  நன்றி கூறினார்.

அரசு மகளிர் பள்ளியில் மொபைல் போன்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம், பிளஸ் 1 படிக்கும் நான்கு மாணவியர் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தினர். நேற்று முன்தினம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவியரிடம் ஆசிரியர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, மாணவியரிடமிருந்து, 25க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மாணவியரின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, பள்ளிக்கு வரும்போது மொபைல் போன் கொடுக்கக்கூடாது எனவும், மீறி கொண்டு வந்தால், மாணவியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது. 


ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது

பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சு: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளம் தேங்கிய சில இடங்களுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., 9 முதல் மழை விடுமுறை துவங்கியது. தீபாவளிக்கு மறுநாள், 11ம் தேதி, சில பள்ளி, கல்லுாரிகள் திறந்தாலும், மழை தொடர்ந்ததால் அரை நாள் மட்டுமே இயங்கின. தொடர்ந்து விடுமுறைமழையின் சீற்றம் அதிகரித்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இரு நாட்களாக வெயில் தலை காட்டியதால், பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. கடந்த, 12 வேலை நாட்களில் வகுப்புகள் இயங்காமல் பாதிக்கப்பட்டதால், இன்று முதல், நேரத்தை வீணடிக்காமல் வகுப்புகளை நடத்துமாறும், மாணவர்களை முடிந்த வரை விடுமுறையின்றி வகுப்புகளில் பங்கேற்க வைக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நவ., 17ல் துவங்க இருந்த திருப்புதல் தேர்வுகளை, பள்ளிகளே முடிவு செய்து, திங்கள் கிழமை முதல் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

வாய்மொழி உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது; மழையால் பாதித்துள்ள மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகளை இழந்திருந்தால் அவர்களுக்கு, இன்று முதல் மீண்டும் இலவச புத்தகம், சீருடை வழங்கப்படு கிறது. இதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று இலவச புத்தகங்கள் அனுப்பப்பட்டன.சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், வெள்ள பாதிப்புள்ள, 11 அரசு பள்ளிகளுக்கு மட்டும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

சீருடைகெடுபிடி இல்லை

வெள்ள பாதிப்பு காரணமாக வீடுகளை இழந்தும், பாதுகாப்பான இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரின் பிள்ளைகள், சீருடைகளை இழந்திருந்தால், அவர்களை சீருடை அணிந்து வர, சில வாரங்களுக்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்?

தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.


இது பற்றி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

அச்சம்
'ஒவ்வொரு அரசு ஊழியரின் சம்பள பட்டியலிலும், ஆதார் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்காக, அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது' என, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த அரசு ஆணையை, ஊழியர்கள் பார்க்கும்படி வெளியிடவில்லை. இது, அரசு ஊழியர்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.உயர்க்கல்வித் துறையின் சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர் இது பற்றி கூறியதாவது:ஆதார் எண் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்க வேண்டும். நகலை சரிபார்க்க, உண்மை நகலை இணைக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகையை அளிக்க வேண்டும். ஆதார் எண்ணை, ஒவ்வொரு ஊழியரின் இணையதள கணக்கில், பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து சுற்றறிக்கை அனுப்பிஉள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.'அரசின் திட்ட பயன்களை பெறக்கூட, ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், சம்பளம் பெறுவதற்கு ஆதார் எண்ணை, தமிழக அரசு கேட்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்' என, அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

காஸ் மானியத்திற்கும்...சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்தவர்களிடம், 'ஆதார்' எண் தருமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. 

மத்திய அரசு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை, ஜன., மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்; அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் வரவு வைக்கும். 

'நேரடி மானிய திட்டத்தில் இணைய, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை வழங்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அப்போது அறிவித்தன. இதனால், ஆதார் அடையாள அட்டை பெறாதவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்திருந்த, ஜூன் மாதத்திற்குள், நேரடி மானிய திட்டத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ஆதார் எண் அளிக்கத் தேவையில்லை; 

வங்கி கணக்கு எண் மட்டும் தாருங்கள்' என தெரிவித்து, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை நேரடி மானிய திட்டத்தில் இணைத்தன. இந்நிலையில், மானிய திட்டத்தில் இணைந்து, ஆதார் எண் அளிக்காத வாடிக்கையாளர்கள், அதை சமர்ப்பிக்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன. 

விலக்குஇதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேரடி மானிய திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க, ஆதார் எண் அவசியம். சில மாதங்களுக்கு முன், ஆதார் எண்ணை பலர் பெறாமல் இருந்ததால், அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது, மானிய திட்டத்தில் இணைந்த பலர், ஆதார் அட்டை பெற்று வருகின்றனர். அதனால், ஆதார் எண் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அதை அளிக்குமாறு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 


விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு, டிச., 14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச., 22ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்திலும் வேலை தனியார் பள்ளி ஆசிரியைகள் அதிருப்தி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு, கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி உள்ளன. 


இதுகுறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசின் உத்தரவால், தனியார் பள்ளிகளும் மூடப்பட்டன. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல், ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொன்ன பள்ளி நிர்வாகங்கள், பராமரிப்பு பணிகளில் ஈடுபட செய்தனர். கண்டிப்பாக பள்ளிக்கு வருமாறும், மற்ற பணியாளர்களை போல் பராமரிப்புப் பணியில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டதால், ஆசிரியைகள் அவதிக்கு ஆளாகினர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு: வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றம்

பட்டதாரிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, வி.ஏ.ஓ., தேர்வில் நடைமுறைப்படுத்தாததால், வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நவ., 12 ல், வி.ஏ.ஓ., தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசு தேர்வு எழுதும்போது, வயது உச்சவரம்பு நிர்ணயம் தேவையில்லை என உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இந்த தீர்ப்பு இதற்கு முந்தைய வி.ஏ.ஓ., தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வயதுள்ள பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.தேனியை சேர்ந்த பட்டதாரிகள் கந்தசாமி, சாமிநாதன் கூறியதாவது: 

தமிழக அரசு வேலை வாய்ப்பு பதிவுக்கும், புதுப்பித்தலுக்கும் பட்டதாரிகளுக்கு வயது வரம்பு தேவையில்லை என அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் 57 வயது வரை, அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுதலாம். இதற்கு முந்தைய தேர்வுகளில் தமிழக அரசே இந்த அனுமதி வழங்கியது. ஆனால் தற்போது வி.ஏ.ஓ., தேர்வுக்கு அனுமதி மறுப்பது வேதனையாக உள்ளது. வேலையில்லா பட்டதாரிகளின் சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வயது உச்சவரம்பு சலுகை அளிக்க வேண்டும், என தெரிவித்தனர்.

21/11/15

TNTET தகுதி தேர்வில் 2013 ஆண்டு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு...

வருகின்ற 01.12.2015 அன்று உண்ணாவிரத கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு
நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,


இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும்  குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp  மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தொடர்புக்கு:

திருமதி பாரதி : 94426 91704,  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150,  திரு.பரந்தாமன் : 94432 64239,  திரு.சக்தி : 97512 68580,  திரு.லெனின் ராஜ் : 80125 32233.

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....

தலைமை ஆசிரியர் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில், ஒழுங்கீனமாக செயல்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், தென்குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, பள்ளியை அடிக்கடி பூட்டி செல்வதாகவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியரின் செயல்பாடால், தற்போது, 15 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். கடந்த, 17ம் தேதி வந்த மாணவர்கள், பள்ளி பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மற்றொரு ஆசிரியர் விடுமுறையில் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் வராததால், மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். தகவலறிந்த, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி, நேரடியாக பள்ளியில் ஆய்வு நடத்தி, அங்குள்ள மக்களிடம், பிரச்னை குறித்து கேட்டறிந்தார். பின், கஞ்சம்பட்டி பள்ளியிலிருந்து, ஒரு ஆசிரியரை வரவழைத்து, தற்காலிகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ''உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று, அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, காந்திமதி தெரிவித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி, தெற்கு ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் கருணாகரன் கூறுகையில், ''பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி, முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததுடன், பள்ளியை பூட்டிச் சென்றார்; 'சஸ்பெண்ட்' உத்தரவை, தலைமையாசிரியர் பெற மறுத்ததால், ஊராட்சி நிர்வாகங்கள் முன்னிலையில், பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது; அவருக்கு, தபால் மூலமும் சஸ்பெண்ட் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி உதவியாசிரியர் மூலமாக, பள்ளி தொடர்ந்து இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, '' என்றார்.

இதே போல், ஆனைமலை ஒன்றியம், கன்னியம்மன் கோவில் காலனியில் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியர் தர்மராஜ், மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள், இவரை பணியிலிருந்து இடை நீக்கம் செய்தனர்.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'தவறு செய்த ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது' என்றனர்.